டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய திருமீயச்சூர்

திருமீயச்சூர் அருள்மிகு லலிதாம்பாள் உடனுறை அருள்மிகு மேகநாத சுவாமி கோயிலில்தான் லலிதா சகஸ்ரநாமம் தோன்றியது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:11 am

ஆர். வேல்முருகன்

திருமீயச்சூர் அருள்மிகு லலிதாம்பாள் உடனுறை அருள்மிகு மேகநாத சுவாமி கோயிலில்தான் லலிதா சகஸ்ரநாமம் தோன்றியது. 
 
முன்னொரு காலத்தில் "காசியபர்' என்ற தேவகுரு, பல ஜாதிகளை ஏற்படுத்துவதற்காக பல பெண்களை மணந்தார்.  அவருடைய குழந்தைகளுக்குள் சண்டைகள் ஏற்பட்டன. மனைவியரில் ஒருவரான விநதை, தேவகுருவிடம் உபாயம் கேட்டாள். 

"உன் குழந்தைகளுடன் பல கோயில்களுக்குச் சென்று வழிபடும்போது எங்கு பரநாத ஒலி கேட்கிறதோ,  அங்கு தங்கி பூஜை செய்தால் குழந்தைகளிடம் உள்ள பொறாமை உணர்வு நீங்கும்''  என்றார்.  இமயம் முதல் பல தலங்களிலும் கேட்காத பரநாத ஒலி திருமீயச்சூரில் கேட்டதால் அங்கேயே தங்கி வழிபட்டாள் விநதை.

சிவலிங்கத்துக்கு மந்தாரை பூக்களால் அர்ச்சனை செய்து வணங்கினாள்.  காசியபரும் மனைவியுடன் தரிசித்தபோது,  "இத்தலத்தில் வியாழக்கிழமை வழிபடுவோர் முக்தி அடைவார்கள்' என்று சொல்லி மறைந்தாராம்.
அகஸ்தியர், வில்லவன், வாதாபி என இரு அரக்கர்களை வதம் செய்ததால் ஏற்பட்ட அத்தி தோஷத்தால் வயிற்று வலி உண்டானதால் முருகனிடம் பாப விமோசனம் வேண்டினார்.  முருகன் கூறியபடி,  இத்தலத்துக்கு வந்து பூஜை செய்ததால் பாப விமோசனம் பெற்றார். அகஸ்தியரின் பூஜையை நினைவூட்ட, அங்கிருந்த வில்வ மரத்தை உள் வைத்து கட்டப்பட்ட து இக்கோயில்.  இன்றைக்கும் அது "அகஸ்திய வில்வம்' எனப்படுகிறது.

சூரிய பகவான் மற்ற தேவர்களைப் போல செந்நிற ஒளியோடு வர வேண்டும் எனக் கருதி தேவர்களிடம் உபதேசம் வேண்டினான். தேவரிஷி கூறியபடி இத்தலத்தை வந்தடைந்து வழிபட்டு தனது கரிய நிறத்தைப் போக்கிக் கொண்டானாம்.

திருமீயச்சூர் கோயிலும்,  இளங்கோயிலும் ஒரே ஆலயத்தில்  உள்ளவை. திருமீயச்சூர் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருப்பதிகத்தையும், இளங்கோயில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகத்தையும் பெற்றுள்ளன.

இத்தலத்தில் உள்ள அருள்மிகு மேகநாதரை சூரியன் பூஜித்து அருள் பெற்றதால் சித்திரை 21 முதல் 27}ஆம் தேதி வரை சூரிய உதய வேளையில் சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத் திருமேனி மீது படர்கிறது.

இங்குள்ள சூரிய புஷ்கரணியில் ரத சப்தமி நாளில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களையும் பெறுவார்கள். கோயிலின் வடக்கு உள்பிராகாரத்தில் உள்ள கல்யாண சுந்தரேசுவரரை இளம்பெண்கள் பிரார்த்தனை செய்து, மாலை சாற்றி வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோயிலில் வீற்றிருக்கும் அம்பாள் காலில் கொலுசு உள்ளது. திருமணம், புத்திரச் சந்தானத்துக்காக பெüர்ணமியில் தீபமேற்றி வழிபடுவோருக்கு அம்பாள் அருள்புரிகிறார்.

பக்தர் ஒருவரின் கனவில் அம்பாள் தோன்றி, காலில் கொலுசுடன் இருக்கும் அம்பாளைத் தரிசிக்கச் சொன்னாராம். பல்வேறு  கோயில்களை பக்தர் தேடி அலைந்தாலும் இறுதியில் இக்கோயிலில்தான் காலில் கொலுசுடன் கூடிய சிலையைக் கண்டாராம். அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள அம்பாளின் காலில் கொலுசு போடப்பட்டுள்ளது. சில முக்கிய தினங்களில் அம்பாளுக்கு நவரத்தின அங்கி, புஷ்ப அங்கி அணிவிக்கப்படுகிறது. பக்தர்கள் அம்பாளுக்கு தங்க, வெள்ளிக் கொலுசுகளை அணிவித்து,  வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

லலிதா சகஸ்ரநாமம் தோன்றியது திருமீயச்சூர் தலத்தில்தான். எமன், சனீஸ்வரர் பிறந்ததும் இத்தலத்தில்தான். இங்குள்ள 12 நாகர் சிலைகளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சுபகாரியம் நடப்பதாகக் கூறப்படுகிறது.
மாதக் கிருத்திகை, உத்திராட நட்சத்திர நாளில் லலிதாம்பிகைக்கு நவசக்தி அர்ச்சனை,  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நவாவர்ண பூஜையும் நடைபெறுகிறது. பெüர்ணமியன்று அம்பாளுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது.

சித்திரை 21 }ஆம் தேதி முதல் 27}ஆம் தேதி வரை சூரிய பூஜை, ஆடிப் பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரியின் 9 நாள்களும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.  விஜயதசமி நாளில் லட்சார்ச்சனை பூர்த்தியாகி நடைபெறும் அன்னப்படையல், நெய்க்குள தரிசனம் மிகச் சிறப்பு வாய்ந்தது. திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, பொங்கல், சிவராத்திரி திருநாள்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தை மாத வளர்பிறை சப்தமி திதியில், ரத சப்தமியின்போது இங்கு பிரம்மோற்சவம் நிகழ்கிறது. சுமார் 43 ஆயிரம் சதுர  அடியில் அமைந்த  இந்தக் கோயில் வேளாக்குறிச்சி ஆதீனத்துக்கு உள்பட்டது.

மயிலாடுதுறை - திருவாரூர் இடையே பேரளத்தில் இருந்து மேற்கே 1.5 கி.மீ. தொலைவில் திருமீயச்சூர் அமைந்துள்ளது.

தொடர்புக்கு - 94431 13025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.