திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படும் விசேஷ நாள்களில் குறிப்பிடத்தக்கவை இரண்டு. ஒன்று மாத்ருபூதேசுவர மஹாபூஜை; மற்றொன்று பசுலட்சுமி நாள். முன்னது ஈன்றெடுத்த "மாதா'வுக்காக நடைபெறுவது. பின்னது கோ"மாதா'வுக்காக நடைபெறுவது.
ஆஸ்ரமத்திலே குரங்கு, நாய், பூனை, மயில், மான், அணில் எல்லாம் இருக்க, கூட ஒரு பசுவும் இருக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டு பகவான் அனுமதியுடன் ஒரு பசுவையும், கன்றையும் அளித்தார் அருணாசலம் பிள்ளை என்ற பக்தர்.
ஆஸ்ரமத்துக்கு வந்த முதல் சந்திப்பிலேயே பகவான் ரமணரை உற்றுப் பார்ப்பதும், அவரை சுற்றி வருவதும், அவரது கையை நாக்கால் ஸ்பரிப்பது, துள்ளி விளையாடுவதுமாக, அவரது கவனத்தை மிகவும் ஈர்த்தது அந்தப் பசுங்கன்றுக் குட்டி. இதனைக் கண்ணுறும் பக்தர்கள் பகவானை பிரதட்சிணம் பண்றது பாருங்கோ என்று சொன்னால், உடனே பகவான் அவர்களைத் திருத்தி "பண்றாள்னு சொல்லுங்கோ' பிராணிகளும் ஆத்ம சொரூபந்தான் என்பாராம். சிறிது காலம் தகுந்த பராமரிப்பில் ஆஸ்ரமம் அருகில் வசித்து வந்த பக்தர் ஒருவரிடம் வளர்ந்து வந்தது பசுவும், கன்றும்.
அச்சமயங்களில் கூட தொலை தூரத்திலிருந்தாலும் தன் தாயை விட்டு தனியாக ஓடி வந்து ரமணரின் காலைச்சுற்றி, சுற்றி வந்து பிரதட்சிணம் செய்துவிட்டு போகுமாம் அந்தக் கன்றுக்குட்டி.தன்னிடம் வளரும் பிராணிகளுக்கு செல்லப் பெயர் சூட்டி, மகிழ்வது அவற்றுக்கு தன் கையால் உணவிடுவது போன்றவை பகவானின் வழக்கம். அவ்வகையில் அந்த பசுங்கன்றுக்கு, "லட்சுமி' என்று பெயர் வைத்து அரவணைத்தார். ஒரு நாள் கூட அவரை பார்க்காமல் இருந்ததில்லை அந்த லட்சுமி. நாளடைவில் பெரிதாக வளர்ந்து, கன்றுகளும் ஈந்த பிறகு ஆஸ்ரமத்துடனே ஒன்றிவிட்டாள் லட்சுமி.
1926-ஆம் ஆண்டில் அடிவைத்து வந்த லட்சுமி 1948 வரை பகவானுடன் வாழும் பெரும் பேற்றினைப் பெற்றாள். ஆஸ்ரமத்துக்கு வந்த அவள் வரவினை பிற விலங்குகளும் போற்றி சந்தோஷமடைந்தன. பிரியமாக பழகி அவளுடன் சேர்ந்து வளர ஆரம்பித்தன. பசுலட்சுமி வரவுக்குப் பின்னர் பிற்காலத்தில் ஒரு பெரிய கோசாலையே உருவாகி விட்டது. ஆஸ்ரமவாசிகளும் பசுலட்சுமியை நன்கு பேணினர்.
அப்பசு தினமும் காலையில் கொட்டகையிலிருந்து கிளம்பி பகவான் இருக்கும் இடம் தேடி அவரது திருவடிகளில் தன் தலையை வைத்து வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. காலை 11 மணி அளவில் அவர் மலையில் எங்கிருந்தாலும் அவரைத் தேடி கண்டுபிடித்து பகவானது பகல் உணவு நேரத்தை உணர்த்தும் விதமாக அவரை அழைத்துக்கொண்டு சமையல் கூடத்துக்கு வருமாம். பகவானது வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்குமாம்.
ரமணரைப் பார்க்க வரும் பக்தர்கள், பசுலட்சுமியையும் வந்து தரிசிப்பார்களாம். பக்தர்கள் பாடும் ஸ்தோத்திர பாடல்களை தனது காது மடல்களை சாய்த்துக்கொண்டு சிரவணம் (கேட்பது) செய்யுமாம். சுருங்கச் சொன்னால் பூர்வ ஜென்ம பலன்தான் தன்னை இந்த ஆஸ்ரமத்துக்குக் கொண்டுவிட்டது போலவும், தானும் ஓர் ஆஸ்ரம வாசிதான் என்று கூறுவது போலவும் அதன் செய்கைகள் இருக்குமாம்.
இறுதி நாளன்று (1948 } ஜூன் 18) தன் தாயாருக்குச் செய்தது போல் லட்சுமியின் தலையை பகவான் தன் மடிமீது சாய்த்துக்கொண்டு இடது கையை தலை மேலேயும், வலது கையை இருதயத்திலும் வைத்து தனது கன்னத்தை லட்சுமியின் கன்னத்துடன் இருத்தி அதற்கு ஸ்பரிச நயன தீட்சைகளை அருளி முக்தியடையச் செய்தார். மற்ற பிராணிகளின் சமாதிகளுக்குப் பக்கத்தில் பசு லட்சுமிக்கும் சமாதி உருவாக்கப்பட்டது.
வேதபாராயணத்துடன், விரிவான சடங்குகளுடன் பகவானது மேற்பார்வையில் பசுலட்சுமியின் உடல் மிகவும் சிறப்பாக அடக்கம் செய்யப்பட்டது. பின்பு பஞ்சாங்கத்தைப் பார்த்து லட்சுமி விமுக்தி பெற்ற வருடம் மாதம், நாள், திதி, நட்சத்திரம் அனைத்தும் வெளிப்படுத்தும் விதமாக தன் கையாலேயே ஒரு வெண்பாவாக எழுதித் தந்தார் பகவான் ரமணர்.
லட்சுமியின் சமாதியின் மேல் பெரிய கட்டடம் எழுப்பப்பட்டு, அதில் லட்சுமியின் தத்ரூப சிலா விக்ரகம் வைக்கப்பட்டுள்ளது. பகவான் எழுதிய வெண்பா பொறிக்கப்பட்டுள்ளது. பிரதிமைக்கு பிரதி வெள்ளிக்கிழமைதோறும் அபிஷேகம், பூஜைகள் நடத்தப்படுகின்றன. அவ்வைபவத்தில் பக்தர்கள் பெரிதும் பங்கேற்கின்றனர்.
ஆண்டுதோறும் பசுலட்சுமியை போற்றும் விதமாக அவளது நினைவு நாள், அவள் முக்தியடைந்த அதே நட்சத்திரம் திதியைக் கருத்தில் கொண்டு திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமத்தில் "பசு லட்சுமி நாள்' என்ற பெயரில் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாண்டு அந்நாள் ஜூலை 10}ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அமைகின்றது. வாய்ப்பு ஏற்படின் பக்தர்கள் அன்று நடக்கும். பூஜையில் பங்கேற்று கோமாதாவின் அருளைப் பெறலாம்.
- எஸ்.வெங்கட்ராமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


