டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பூலோக திருப்பாற்கடல்

காஞ்சிபுரத்தில் இருந்து வேலூருக்கு செல்லும் மார்க்கத்தில், திருப்பாற்கடல் என்னும் ஒரு திவ்ய க்ஷேத்திரம் இருக்கிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:22 pm

மாலதி சந்திரசேகரன்


காஞ்சிபுரத்தில் இருந்து வேலூருக்கு செல்லும் மார்க்கத்தில், திருப்பாற்கடல் என்னும் ஒரு திவ்ய க்ஷேத்திரம் இருக்கிறது. இங்கு ஆவுடையார்  மேல் ஸ்ரீ மகாவிஷ்ணு எழுந்தருளி, அபய ஹஸ்தம் காட்டி, நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

ஆவுடையார்  மேல் லிங்கத்தைத்தான் பார்த்திருப்போம். இது எப்படி சாத்தியம் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? அதன் பின்னணியைப் பார்ப்போம்: 

ஹரியும் சிவனும் ஒன்று: ஒரு முறை, நான்முகனான  பிரம்மா சப்தரிஷிகளுடன்,  காஞ்சிபுரம் úக்ஷத்திரத்திற்கு வந்து,  அஸ்வமேத யாகத்தை மேற்கொண்டிருந்தார். அதில் புண்டரீக மகரிஷி என்பவரும் கலந்து கொண்டார். அந்த மகரிஷி ஒரு தீவிர விஷ்ணு பக்தர். பல இடங்களுக்கும் சென்று ஸ்ரீ ஹரியை தரிசனம் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். 

ஒருநாள் அவர் , அவ்வாறு தரிசனத்திற்கு கிளம்பும் நாள் ஏகாதசியாக அமைந்தது. தினமுமே ஸ்ரீஹரியை தரிசனம் செய்துவிட்டு பிறகு, தான் அன்னம் உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.

அன்றைய தினம் மதியம் வரை அவருக்கு ஸ்ரீ விஷ்ணுவின் தரிசனம் கிடைக்கவில்லை. ஏகாதசி நன்னாளும் அதுவுமாக ஸ்ரீ விஷ்ணுவின் தரிசனம் கிடைக்கவில்லையே என்று மிகவும் மனக் கலக்கமுற்றார். நல்ல வேளையாக நாராயண சதுர்வேதி மங்கலம் என்று பெயர் கொண்ட ஒரு கிராமத்தில், ஒரு சிறிய புஷ்கரணியும்,ஒரு சந்நிதியும் கண்ணில் பட, புஷ்கரணியில் நீராடி விட்டு சந்நிதிக்குள் சென்று பகவானைத் தரிசிக்க முயன்றார். 

சந்நிதிக்குள் சென்று பார்த்தவருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.  அங்கு ஆவுடையின் மேல் சிவபெருமானின் லிங்க ரூபமே அவருக்குத் தெரிந்தது. மதியவேளையும் நெருங்கி விட்டது...  மகரிஷிக்கு பசி ஒரு புறம். வெகுதூரம் நடந்து வந்ததால் சோர்வு ஒருபுறம்.  அப்பொழுது, மகரிஷியின் முன் ஒரு முதியவர் எதிர்ப்பட்டார். மகரிஷிக்கு என்ன வேண்டும் என்று வினவினார். மகரிஷி கோபத்துடன், ஒரு விஷ்ணு ஆலயம் கூட இல்லாத இதுவும் ஒரு ஊரா என்று பேசினார். முதியவர் பதிலுக்கு,  மகரிஷி சென்று வந்த ஆலயம் ஒரு விஷ்ணு ஆலயம் தான் என்பதைக் கூறினார்.

மகரிஷி,  ஆலயத்திற்குள் சிவனைத் தான் கண்டதாகவும்,  விஷ்ணு அல்ல என்றும் கூறினார்.  முதியவரும் பதிலுக்கு,  அது விஷ்ணு ஆலயம் தான் என்பதை அடித்து கூறினார். இருவருக்கும் வாக்குவாதம் வலுக்க, ஊரே கூடிவிட்டது. மகரிஷி, முதியவர் இருவரும் யார் பக்கம் உண்மை என்பதை அறிந்துகொள்ள, ஊர் மக்களுடன் ஆலயத்திற்குள் சென்றார்கள்.

அசரீரி: ஆலய கருவறைக்குள்,  ஆவுடையார் மீது,  நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன், ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் சேவை சாதிப்பதை அனைவரும் தரிசித்தார்கள். அப்பொழுது ஓர் அசரீரி கேட்டது.  "மகரிஷியே சிவ விஷ்ணு பேதம் தேவையில்லை. இங்கு வந்து தரிசிக்கும் மக்களுக்கு, திருப்பாற்கடலை தரிசனம் செய்தால் என்ன பலன் கிட்டுமோ அந்தப் பலன் கிடைக்கும்" என்று கூறியது. 

பகவான், நின்ற , அமர்ந்த, கிடந்த கோலங்களில் இத்தலத்தில் அருள் பாலித்ததாகத் தல புராணம் கூறுகிறது. 

ஆனந்தித்த மகரிஷி, சிவபெருமானே தன் மனதை மாற்றுவதற்காக ஆவுடையாரின் மேல் தோன்றி, சேவை சாதித்தார் என்பதை அறிந்து கொண்டார். 

ஸ்தூல சரீரரத்துடன்  யாரும் நூற்றியேழாவது திவ்ய தேசமான திருப்பாற்கடலை சேவிக்க இயலாது. ஆகையால், புண்டரீக மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்கி, பூலோக திருப்பாற்கடலில் பெருமாள், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

தன் பக்தனுக்கு பிரசன்னமாகக் காட்சி தந்து அருளியதால், இங்கு மூலவருக்கு, ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெரு மாள் என்கிற திருநாமம் உண்டானது.

சந்நிதிகள்: கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் நுழைவாயிலருகில் தும்பிக்கை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரின் திரு உருவங்களும், வெளிச்சுற்றில் பாமா ருக்மணி சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ ஆஞ்சநேயர்,  ஒன்பது நாக தேவதைகள்,  அஷ்ட நாக கருடாழ்வார், ஸ்ரீ தேசிகன் ,ஸ்ரீ ஆண்டாள் சந்நிதிகளும் உள்ளன.

பரிகாரம்: சந்திர பகவான் பெற்ற சாபத்தினால் அவருடைய கலைகள் தேயத் தொடங்கின. அதனால் கலக்கமுற்ற அவரது மனைவிகளில் ஒருவரான திருவோண நட்சத்திர தேவியானவள்,  இத்தலம் வந்து பெருமாளைத் தொழுது நின்றாள். அதனால் சந்திர பகவானுக்கு சாப விமோசனம் கிடைத்தது. அதனால்  திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு இத்தலம் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. 

அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் மார்க்கத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில், காவேரிப்பாக்கம் என்னும் ஊரை அடுத்து திருப்பாற்கடல் கிராமம் அமைந்துள்ளது. தொடர்புக்கு: திருக்கோயில் பட்டர் வெங்கட்ரங்கன் - 94868 77896.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.