சட்டையே சாட்சி!
இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட குர்ஆனில் அவர்களுக்கு முந்திய தூதர்களான நபிமார்களின் வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.


இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட குர்ஆனில் அவர்களுக்கு முந்திய தூதர்களான நபிமார்களின் வரலாறுகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று யாகூப் நபி வரலாறு.
யாகூப் நபி கன்ஆன் நாட்டில் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு நான்கு மனைவிகள். முதல் மனைவி லையாவுக்கு 6 குழந்தைகள். மூன்றாவது மனைவி ஜுப்லாவுக்கு 2 குழந்தைகள். நான்காம் மனைவி ஜில்பாவுக்கு 2 குழந்தைகள். இரண்டாம் மனைவி ராஹில் நால்வரிலும் பேரழகி. யாகூப் நபியும் அவளை விரும்பி தாய் மாமனிடம் மன்றாடி மணமுடித்தார்கள். காதல் மனைவியை மிகவும் நேசித்தார்கள்.
ராஹிலுக்கும் 2 குழந்தைகள். அனைவரும் ஆண்கள். ராஹில் இரண்டாவது மகனைப் பெற்றதும் இறந்தாள். ராஹிலின் இரு குழந்தைகளான யூசுபும் புன்யாமினும் பத்து மூத்த சகோதரர்களை விட அழகானவர்கள். தாயில்லாத அவ்விரு குழந்தைகளிடம் அதிக பிரியமும் பாசமும் காட்டினார்கள் யாகூப் நபி. யாகூப் நபியின் இந்த பாசம் பத்து சகோதரர்களுக்கும் பொறாமையை உருவாக்கியது. பத்து பேர்களும் யூசுபைப் பழிவாங்க துடித்தனர்.
பத்து சகோதரர்களும் யாக்கூப் நபியின் ஆடுகளைக் காலையில் காடுகளுக்கு ஓட்டிச் சென்று மேய்ச்சலுக்கு விட்டு மாலையில் வீடு திரும்புவர். சிறியவர்களான யூசுபையும் புன்யாமினையும் காட்டிற்கு அனுப்பாமல் தன்னருகில் வீட்டிலேயே வைத்துக் கொள்வார்கள் யாக்கூப் நபி. ஒருநாள் சகோதரர்கள் தந்தையிடம் தம்பி யூசுபை அழைத்துச் சென்று காட்டில் விளையாடவிட்டு வேடிக்கை காட்டி கூட்டி வருகிறோம் என்று உறுதி கொடுத்து வலியுறுத்தி தந்தையின் ஒப்புதலைப் பெற்று தப்பான திட்டம் தீட்டி காட்டிற்கு அழைத்து சென்றனர்.
காட்டில் யூசுபைக் கொன்றுவிட ஒன்பது சகோதரர்கள் ஒருமித்து முடிவெடுத்தனர். மூத்தவர் ரூபன் மட்டும் யூசுபைக் கொல்ல விரும்பாது பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு மெல்ல சென்று விடுவோம்; தந்தை யாகூபிடம் யூசுபின் சட்டையை கழற்றி இரத்தக் கறையுடன் காண்பித்து ஓநாய் கடித்து சாப்பிட்டு விட்டது என்று கூப்பாடு போட்டழுது தந்தை நம்பும்படி கூறி விடுவோம் என்ற ஆலோசனையை அமுல்படுத்தினர்.
தந்தை யாகூப் கிழியாத அச்சட்டையை கண்டு யூசுபை ஓநாய் கடிக்கவில்லை. பத்து சகோதரர்களின் புத்தி பேதலித்த சதி என்றுணர்ந்து பொறுமை காத்து கவலையை காட்டாது காவலன் அல்லாஹ்வின் கருணையை நாடினார்.
பாழுங்கிணற்றில் பாறையில் அமர்ந்திருந்த அழகன் யூசுபை வணிக கூட்டம் கிணற்றிலிருந்து மீட்டு மிஸ்ரு நாட்டு நிர்வாகி கித்பீரிடம் விற்றது.
கித்பீரின் மனைவி ஜலீகா யூசுபின் அழகில் மயங்கி ஆசையோடு அழைத்தாள். இணங்க மறுத்த இளைஞன் யூசுபின் சட்டையைப் பிடித்து இழுத்தாள். சட்டை கிழிந்தது. அங்கு வந்த கித்பீர் யூசுபின் மீது ஐயம் கொண்டார். ஜலீகாவும் யுசுபின் மீது குற்றம் சாட்டினாள்.
நேரில் கண்ட சாட்சிகள் இல்லாததால் நேர்மையான விசாரணைக்குச் சட்டையே சாட்சியானது. சட்டை முன்பக்கம் கிழிந்து இருந்தால் ஜலீகாவின் குற்றச்சாட்டு உண்மையானது; ஆனால் சட்டையோ பின்புறம் கிழிக்கப்பட்டிருக்கிறது. அதனால் யூசுப் குற்றமற்றவர் என்பதை உணர்ந்தார் கித்பீர்.
"வாலிப வயது வந்ததும் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் நாம் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்கிறவர்களுக்கு நாம் நற்கூலியை வழங்குகிறோம்'' என்ற குர்ஆனின் 12-22 ஆவது வசனப்படி யூசுபிற்குக் கனவு விளக்கம் சொல்லும் விவேகம் ஏற்பட்டது.
பசுமையான ஏழு கதிர்களும் காய்ந்த ஏழு கதிர்களும் தென்பட கொழுத்த ஏழு பசுக்களை மெலிந்த ஏழு பசுக்கள் சாப்பிடும் அரசரின் கனவிற்கு ஏழு செழிப்பான ஆண்டுகளுக்குப் பின் ஏழு பஞ்ச ஆண்டுகள் தோன்றும் என்று விளக்கம் கூறி பஞ்சத்தில் பிறரிடம் தஞ்சம் கோராமல் விஞ்சி நிற்கும் வழியையும் யூசுப் கூறினார். மிஸ்ரு நாட்டரசர் யூசுபையே நிர்வாகியாக நியமித்தார். யூசுப் வருமுன் காக்கும் வழி வகுத்து பஞ்ச காலத்தில் அஞ்சிடாது வாழ அனைத்து முன்னேற்பாடுகளும் செய்தார்.
யூசுப் கணித்தபடி மிஸ்ரு நாட்டையும் மிஸ்ரு நாட்டுக்கருகில் தொலைவில் உள்ள பல நாடுகளையும் பஞ்சம் பீடித்தது. மிஸ்ரு நாட்டில் மிஸ்ரு நாட்டின் தேவைக்கதிகமாக பொருள்கள் சேமிப்பில் இருந்தன. மிஸ்ரு நாட்டிற்கு பல நாட்டினரும் வந்து பொருள்களை வாங்கி சென்றனர்.
யாகூப் நபி மனதிற்குள் மறைத்து வைத்த கவலை ஆண்டுகள் ஓட வெளிப்பட்டது. விசனத்தால் உடல் மெலிந்தது. கண்களும் பார்வையை இழந்தன. இந்த நிலையில் கன்ஆன் நாட்டிலும் பஞ்சம் தலை விரித்தாடியது. நிலை பெற்று வாழ யூசுபின் பத்து சகோதரர்களும் உணவு பொருள்கள் வாங்க மிஸ்ரு வந்தனர். அவர்கள் யூசுபை அடையாளம் காணவில்லை. ஆனால் யூசுபோ அவர்களை அடையாளங் கண்டு திரும்பிவர செய்தார். அவருடன் உடன் பிறந்த புன்யாமினையும் அழைத்து வர ஆவன செய்தார்.
யூசுப் புன்யாமினைத் தன்னுடன் தங்க வைத்து பிற சகோதரர்களைத் திருப்பி அனுப்பினார். பின் தந்தை யாகூபிடமிருந்து அவர்கள் மடல் கொண்டு வந்ததும் தன் தந்தையையும் குடும்பத்தினரையும் அழைத்து வர ஏற்பாடு செய்தார்.
பத்து சகோதரர்களும் யூசுபின் சட்டையை பெற்று கன்ஆனுக்குப் புறப்பட்டனர். யாகூப் நபி யூசுபின் வாடையை நுகர்வதாக கூறினார். அவரின் அருகிலிருந்த அவரின் குடும்பத்தினர் யூசுப் மாண்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இன்னும் உங்களால் யூசுபின் நினைவை மறக்க முடியவில்லையே என்று கேலி செய்தனர். கேலி செய்தவர்கள் வியக்கும் வண்ணம் பத்து சகோதரர்களும் யூசுப் உயிரோடு உயர்நிலையில் இருக்கும் நற்செய்தியை நவின்று யூசுபின் சட்டையை தந்தை யாகூப்பிடம் கொடுத்தனர்.
அச்சட்டையை ஆவலோடு பெற்ற யாக்கூப் அவரின் கண்களில் ஒற்றினார். இழந்த கண் பார்வை மீண்டது. வெளிச்சத்தைக் கண்டார். வெளிறி வெலவெலத்து பதறி நிற்கும் பாதகம் புரிந்த மக்களைக் கண்டார். அவர்கள் செய்த தவறுக்குத் தந்தையிடம் மன்னிப்பு கேட்டனர். பெற்ற பிள்ளைகள் உற்ற சகோதரனுக்கு ஊறு செய்த மாறுபாட்டை மன்னிக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார். அனைவரும் மிஸ்ரு சென்றனர். பிரிந்தவர்கள் ஒன்று கூடினர்.
சட்டையை சாட்சியமாக்கிய சம்பவங்கள் கொண்ட யாக்கூப். யூசுப் நபிகளின் வரலாறு திருக்குர்ஆனின் 12 வது அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்பட்டு நீதிகள் போதிக்கப்படுகின்றன.
பொறாமை கூடாது. பொறாமையால் பிறருக்குத் துன்பமிழைத்தோர் துன்புற்று அவரிடமே அபயம் தேடும் அபாயம் ஏற்படும். உண்மையே வெல்லும். பொறுத்தார் பூமியாள்வார். இறைவனை நம்பினோர் கைவிடப்படார். காலமெல்லாம் ஞாலம் ஆளும் அல்லாஹ்வின் அருளைப் பெற்று வெற்றி வாகை சூடுவார்.
இந்நீதிகளை நாமும் கடைபிடித்து படைத்தவன் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...