கஞ்சத் தனமில்லாத சிக்கனம்!
பொருளை அறவழியில் ஈட்ட வேண்டும். பேராசை கொண்டு பெரும் பொருளை ஈட்ட புறவழியை, பொல்லாத முறையை நாடக் கூடாது.


பொருளை அறவழியில் ஈட்ட வேண்டும். பேராசை கொண்டு பெரும் பொருளை ஈட்ட புறவழியை, பொல்லாத முறையை நாடக் கூடாது. நல்வழியில் தேடிய செல்வத்தை நல்ல வழியில் நமக்கும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நற்பயன் நல்கும் வகையில் செலவிட வேண்டும்.
இதனையே ""இன்னும் அவர்கள் செலவு செய்தால் வீணாக்க மாட்டார்கள். (கஞ்சத்தனமாக) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டுக்கும் மத்தியில் சமமாக இருப்பர்'' என்று திருக்குர்ஆன் 25-67 வது வசனம் கூறுகிறது.
அவர்கள் என்பது இறையடியார்களான நல்லவர்களைக் குறிக்கும். அந் நல்லவர்கள் வீண் செலவு செய்து பொருளை, பணத்தை விரயமாக்க மாட்டார்கள். இவ்வகை செலவுகளால் பழி வரும்; பகை வளரும்; பலரின் நகைப்புக்கும் ஆளாக நேரும்; முடிவில் அல்லாஹ்வின் அருளுக்கு அருகதையற்றவர் ஆகி பொருளையும் இழந்து இன்னலுற்று இரந்து வாழும் இழிநிலையே ஏற்படும்.
மனைவி, மக்கள் குடும்பத்தினரின் தேவைக்கேற்ற அவசிய செலவுகளைக் குறைக்காது செய்வது குடும்பத் தலைவனின் கடமை. "ஒருவர் தன் குடும்பத்திற்கு அளவுக்கு அதிகமில்லாமலும் குறைக்காமலும் செலவு செய்தால் அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருக்கிறார்'' என்று அல்ஹசன் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் விளக்கி இருக்கிறார்கள்.
ஆயிரம் ரூபாயை வைத்திருப்பவர் ஒரு ரூபாயை முறை தவறி, இடம் தவறி, தேவையில்லாதவருக்குத் தேவையின்றி செலவழித்தால் அது வீண் செலவு. ஒரு ரூபாய் மட்டும் வைத்திருப்பவர் முறையோடு தேவை அறிந்து செலவு செய்தால் அவரின் செலவு ஏற்புடையது.
""சொற்ப செலவு வீண் செலவாவதும் பெருஞ்செலவைப் போதாதது என்பதும் எப்பொழுது?'' என்று ஒரு அறிஞரிடம் கேட்கப்பட்டது. ""தவறாக செய்யும் சொற்ப செலவும் வீண் செலவே. நன்மை பயக்கும் நற்செயலுக்குச் செலவிடும் அதிக அளவும் போதாததே'' என்று பதிலிறுத்தார்.
இந்த ஆயத்திற்கு விளக்கமளித்த முஜாஹித் ரஹ்மத்துல்லாஹி அவர்கள், ""அபூ குபைஸ் மலையளவு தங்கம் ஒருவருக்கிருந்து அதனை அவர் இறைவழியில் செலவழித்தால் அவர் வீண் செலவு செய்தவராக மாட்டார். பாவமான செயலில் ஒரு ரூபாயைச் செலவிட்டாலும் வீண் செலவு செய்தவராகி விடுவார்'' என்றார்.
இந்த ஆலயத்திற்கு விரிவுரை வழங்கிய யஸீதுப்னு ஹபீப் (ரஹ்) அவர்கள், ""இன்பத்திற்காக, சுவைக்காக உணவு உண்ணாமல், பசிக்குப் புசித்தும் இறை வணக்கம் முதலிய முறையான செயல்களைச் செய்ய வலு பெறுவதற்கு உணவு உண்டும் அழகுக்காக ஆடை அணியாது தங்களின் மானத்தை அதாவது மறைக்க வேண்டியதை மறைக்கும் உடை உடுத்துபவர்களே உண்மையாய் நபிவழியைப் பின்பற்றிய நபித் தோழர்கள் போல் ஆவர்'' என்று அறிவித்தார்கள். இச் செலவின விளக்கங்கள் மனிதர்களுக்கு மட்டுமின்றி அரசுகளுக்கும் பொருந்தும்.
நபிகள் நாயகத்தின் நன்மொழியும், "தன்னைக் காத்து கொள்ள வீடு, மானத்தை மறைக்க உடை, பசிக்கு உணவும் தண்ணீரும் ஆகியவையே மக்களின் அவசிய தேவைகள்'' என்று எடுத்தியம்புகிறது.
நாமும் நற்குர்ஆனின் போதனைப் படியும் நந்நபி மொழி வழியிலும் வீண் செலவைத் தவிர்த்து கஞ்சத்தனமின்றி தக்க முறையில் சிக்கனமாய் செலவு செய்து நலமுடன் வளமாய் வாழ்வோம்.
கஞ்சத்தனமின்றி தக்க முறையில் சிக்கனமாய் செலவு செய்து எஞ்சிடும் சேமிப்பு இந்திய பொருளாதாரம் விஞ்சிட வித்தாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...