அபயம் அளிப்பவன் அல்லாஹ்!
நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு'' என்ற சொற்றொடரின்படி மூசா நபியின் தௌராத்...


நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு'' என்ற சொற்றொடரின்படி மூசா நபியின் தௌராத், தாவூத் நபியின் ஜபூர், ஈசா நபியின் இன்ஜுல் வேதங்கள் விளம்பியதுபோல் முஹம்மது நபிக்கு அருளப்பட்ட இறுதி வேதமாம் திருக்குர் ஆனும் 3-150ஆவது வசனத்தில், ""நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்தான் பாதுகாவலன். அவன் உதவி செய்பவர்களில் உயர்ந்தவன்'' என்று கூறுகிறது.
இஸ்லாமின் துவக்க காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களை மக்கத்து குறைஷிகள் மிக்க துன்பத்திற்குள்ளாக்கினர்; கொடுமைப்படுத்தினர்; கொடூரமாய்த் தண்டித்தனர். அந்த இக்கட்டான காலத்தில் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த தோழர் ஹழ்ரத் அர்ஷத் (ரலி) அவர்கள் கொடுமைக்குள்ளான இஸ்லாமியர்களை இரவில் அவரின் ஒட்டகத்தில் ஏற்றிச் சென்று மதீனா எல்லையில் இறக்கி விடுவார்.
அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன், ஒரு பெண்ணுடன் திருமணம் புரியாது தொடர்பு கொண்டிருந்தார். இஸ்லாத்தில் இணைந்ததும் அத்தகாத தொடர்பைத் துண்டித்து விட்டார். ஓரிரவு அர்ஷத் (ரலி) அவர்கள் வருவதைக் கண்ட அப்பெண் அவரை அழைத்தாள். இஸ்லாத்தின் நற்போதனைகளை நவின்ற அர்ஷத் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் அழைப்பிற்கு இணங்க மறுத்தார். ஆத்திரம் அடைந்த அப்பெண் அர்ஷத் (ரலி) அவர்கள் இரவில் இஸ்லாமியர்களை மதீனாவிற்குக் கடத்திச் செல்கிறார் என்று அலறினாள். பெருங்கூட்டம் கூடியது. அர்ஷத் (ரலி) அவர்கள் ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்தார்கள். கூடிய கூட்டம் அவர்களைத் தேடியது. பலர் பாறையின் மேல் ஏறி நின்று பார்த்தனர். எவர் கண்ணிலும் படாது அர்ஷத் (ரலி) அவர்களைக் காப்பாற்றினான் அல்லாஹ்.
"நேரான வழியில் செல்வோரைத் தவறிழைக்க விட மாட்டான். அவர்கள் விலக வேண்டியவற்றை விவரமாக அவர்களுக்கு அறிவிப்பான். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்'' என்ற 9-115ஆவது திருக்குர்ஆன் வசனத்தின் இசைவான நிகழ்ச்சி இது.
தாருன்னத்வா மன்றத்தில் ஓரிரவு கூடிய இஸ்லாமிய எதிரிகளான குறைஷியர்கள் முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்லத் திட்டமிட்டனர். தீட்டிய திட்டப்படி நீட்டிய வாளுடன் நீதர் நபியின் வீட்டைச் சுற்றி பெருங்கூட்டம் வள்ளல் நபியின் வருகையை நோட்டமிட்டு நொடியும் கண் இமைக்காது காத்து நின்றது; அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெளியில் வரும்பொழுது வெட்டி வீழ்த்த விழித்து நின்றது.
அன்றிரவு அண்ணல் நபி அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். கொல்ல கூடி நின்றவர்கள் கண்கள் காணாது மறைத்துவிட்டான் இறைத் தூதருக்கு மறை தந்த இறைவன்.
"அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன். அவன் அவர்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்'' என்ற 2:257ஆவது திருக்குர் ஆனின் திருமொழியின் நம்பினோர் கெடுவதில்லை; கைவிடப்படார் என்பதை மெய்ப்பிக்கும் மேலான நிகழ்ச்சி.
நபித் தோழர் அபூபக்கர்(ரலி) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்த முஹம்மது(ஸல்) அவர்கள் தௌர் குகையில் ஒளிந்திருந்தனர். அவர்களைத் தேடி வந்தவர்கள் குகை வாயிலில் கூடி நின்றனர். கூடி நின்ற கூட்டத்தினரின் கால்களைக் கண்டார். கண்ணுறங்காது அண்ணல் நபியைக் காத்த அபூபக்கர்(ரலி) அவர்கள் அக் கூட்டம் குனிந்து பார்த்தால் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் உள்ளேயிருப்பது தெள்ளென தெரியும். ""உங்களுடைய எதிரிகளை அல்லாஹ் நன்கறிவான். உங்களைக் காப்பதற்கும் உதவி செய்வதற்கும் அல்லாஹ் போதுமானவன்'' என்ற 4-45ஆவது அல்குர்ஆன் வசனத்தில் அறிவித்தபடி தெளிவற்ற அக்கூட்டம் குனிந்து பார்க்காது திரும்பிச் செல்ல வைத்தான் கிருபையாளன் அல்லாஹ்.
மறைவழி நடப்போரை இறைவன் காப்பான் என்பதுணர்ந்து நபிகள் வாழ்ந்து காட்டிய வழியில் நாமும் வாழ்வோம். வல்லோன் அல்லாஹ் ஆபத்துகளை அகற்றி காப்பாற்றுவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...