/

திருக்குடும்பம்!

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றொரு சொல் உண்டு. உலகெங்கும் காணப்படும் நன்மை தீமை இரண்டும் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தோமானால்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:06 am

ரொசிட்டா

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றொரு சொல் உண்டு. உலகெங்கும் காணப்படும் நன்மை தீமை இரண்டும் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தோமானால், அது சாதாரண குடும்ப வாழ்க்கையிலிருந்துதான் தொடங்குகிறது என்பது புரிய வரும் என்று சான்றோர்கள் கூறுவார்கள்.

நல்ல குடும்பம் என்றால் அங்கே அன்பு குடிகொண்டு இருக்கும். அப்படிப்பட்ட அன்பு இருக்குமிடத்தில் கீழ்ப்படிதல், தியாகம், நட்பு, பொறுமை ஆகியவை கண்டிப்பாகக் குடிகொண்டு இருக்கும்.

விவிலியத்தில் கூறப்பட்டுள்ளபடி பார்த்தோமானால் இயேசுவின் திருக்குடும்பத்தில் கீழ்ப்படிதல், தியாகம், நட்பு, பொறுமை ஆகிய நான்கும் முழுமையாக இருந்தன.

இயேசுவின் தந்தை சூசையப்பரின் கனவில் வானதூதர் ஒருவர் தோன்றி, "நீர் எழுந்து குழந்தை இயேசுவையும் தாய் மரியாவையும் கூட்டிக்கொண்டு எகிப்து நாட்டுக்குச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தை இயேசுவை, இந்நாட்டு அரசன் ஏரோது கொல்வதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறான்'' என்றார்.

சூசையப்பரும் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, ஏன், எதற்கு என்ற கேள்விகளை எழுப்பாமல், அந்த இரவிலேயே தாயையும் குழந்தையையும் கூட்டிக்கொண்டு எகிப்து நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அரசன் ஏரோது குழந்தை இயேசு இருக்குமிடம் தெரியாமல், இயேசு பிறந்த ஊரான பெத்லகேமுக்கும் அதன் சுற்று வட்டாரங்களுக்கும் வீரர்களை அனுப்பி, இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்வதற்கு உத்தரவிட்டான்.

இதனால்தான் சூசையப்பர் கனவில் எச்சரிக்கப்பட்டு, குழந்தையுடன் எகிப்துக்குச் செல்ல நேரிட்டது. தாய் மரியாவும் உலகை மீட்பதற்காகப் பிறந்த இயேசுவைத் துணியில் பொதிந்து இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற மன உறுதியுடன் பொறுமையோடு காத்திருந்தார்.

சிறுவனாக இருந்த இயேசு தனது தந்தையாரின் தச்சு வேலையில் சிறு சிறு உதவிகள் செய்துகொண்டு கீழ்ப்படிதலோடு வாழ்ந்து வந்தார்.

இறைமகனான இயேசு தாம் கடவுளின் மகன் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமல், பாவம் தவிர மற்ற எல்லாவற்றிலும் சாதாரண மனிதனைப் போலவே கடவுளுக்கும் பெற்றோருக்கும் கீழ்ப்படிந்து வந்தார் என்று நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.

இதையே, புனித சின்னப்பர் சற்று விரிவாக, ""திருமணமான ஆண்களே... மனைவியிடம் அன்பு செலுத்துங்கள்; கொடுமைக்கு உட்படுத்தாதீர்கள். மணமான பெண்களே... கணவனுக்குப் பணிந்து நடந்துகொள்ளுங்கள். கடவுளைச் சார்ந்து பொறுமையுடன் வாழுங்கள்'' என்கிறார்.

மேலும், ""பிள்ளைகளே, பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் எரிச்சலடையும்படி அவர்களிடம் நடந்து கொள்ளாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனம் தளர்ந்து போவார்கள்'' என்கிறார்.

ஆண்டவர் இயேசு, அன்னை மரியாள், சூசையப்பர் போல நாமும் வாழ்ந்தால் ஒரு திருக்குடும்பமாக இந்த பூமியில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வாழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.