/

வானதூதர் மூலம் வந்த நற்செய்தி!

அன்பே கடவுள்' என்று நாம் இந்த மண்ணில் பிறந்தது முதல், நம் தாய் தந்தையரும் ஆசிரியர்களும் போதகர்களும் சொல்வதையும் விவிலியம் எடுத்துரைப்பதையும் கேட்டும் படித்தும் இருக்கிறோம். வாக்கு மனுவாக உருவானார் என்று விவிலியம் கூறுகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:13 pm

ரொசிட்டா

அன்பே கடவுள்' என்று நாம் இந்த மண்ணில் பிறந்தது முதல், நம் தாய் தந்தையரும் ஆசிரியர்களும் போதகர்களும் சொல்வதையும் விவிலியம் எடுத்துரைப்பதையும் கேட்டும் படித்தும் இருக்கிறோம். வாக்கு மனுவாக உருவானார் என்று விவிலியம் கூறுகிறது.

கவலை, கண்ணீர் ஏக்கத்தோடு தங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்ற யாராவது வருவார்களா என்று காத்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நற்செய்தி வானதூதர் மூலம் அறிவிக்கப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வானதூதர்கள் வழியாக இந்த மகிழ்ச்சியான செய்தி மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அன்று தெரிவிக்கப்பட்ட மகிழ்ச்சி என்ற விதை இன்று வரையிலும் பூத்துக் குலுங்கி நறுமணம் வீசிக் கொண்டிருக்கின்றது.

மனிதனால் கொடுக்கக்கூடிய, தரக்கூடிய அன்பு தன்னலம் கொண்டது. ஆனால் கடவுள் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பு நிரந்தரமானது. அசைக்கமுடியாதது. யாராலும் அதைப் போல செய்ய முடியாத ஒரு செயல். அந்த அன்பின் வடிவமே கிறிஸ்து பிறப்பு விழாவின் மையம்மாக இருக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரயேல் நாட்டில் எவ்வளவோ ஆண் குழந்தைகள் பிறந்தன.

பெரிய பெரிய வசதியான குடும்பங்களிலும், மக்களை வழி நடத்தும் அரசர்கள் மற்றும் அதிகாரிகள் குடும்பங்களிலும் குழந்தைகள் பிறந்தன. அந்தக் குழந்தைகளின் மழலைச் சத்தம் அந்தந்த வீடுகளில் மட்டுமே கேட்டது.

ஆனால் ஒரு ஏழை தச்சன், உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் இருந்த குடும்பத்தில் பிறந்த குழந்தையின் மழலைக் குரல் மட்டும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

அப்போது இஸ்ரயேல் நாட்டுப் பெண்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. "தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்ட மெசியா என் வயிற்றின் மூலமாகத்தான் பிறப்பார்' என்று வசதி படைத்த பெண்கள் எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கடவுள் பொறுமையும் தாழ்ச்சியும் கொண்ட ஓர் ஏழைப்பெண் மரியா வழியாக பிறந்தார். அதுவும் ஒரு மாட்டு தொழுவத்தில், உறைய வைக்கும் கடும் குளிரில், வாக்குறுதி கொடுக்கப்பட்ட மழலை பிறந்தது.

அக்குழந்தையின் சத்தம் எல்லோரையும் ஈர்த்தது. மக்களின் வாழ்வில் ஒரு திருப்பத்தை தந்தது இயேசு என்னும் அந்தக் குழந்தையின் மழலைக் குரலே!

இந்த மழலையின் குரல் நமது உள்ளங்களிலும், குடும்பங்களிலும் கேட்க வேண்டுமா? வாருங்கள்... புதிய உடைகள் அணிந்து அல்ல. மாறாக எளிய நல்மனத்தோடு அன்பின் அரசர் இயேசுவை நோக்கிச் செல்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.