பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாடல் பெற்ற மயானம்

திருஞான சம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் பெற்ற பெருமையுடைய திருத்தலங்களில் ஒன்று, நாலூர் மயானம். பொதுவாக சிவத்தலங்களில் பெருமான் விரும்பி உறையும் மயானத் தலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் சோழ ந

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:43 pm

கிருஷ்ணப்பிரியா

திருஞான சம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் பெற்ற பெருமையுடைய திருத்தலங்களில் ஒன்று, நாலூர் மயானம். பொதுவாக சிவத்தலங்களில் பெருமான் விரும்பி உறையும் மயானத் தலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் சோழ நாட்டில் காவிரியின் தென் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் நாலூர் மயானம் 96வது தலம். கடவூர், கச்சி உள்ளிட்ட பஞ்ச மயானத் தலங்களில் இது முதன்மை பெற்ற தலமாகக் கருதப்படுகிறது.

இத்தலம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் திருச்சேறையை அடுத்து உள்ளது. ஒரு காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த இந்த ஊர், பின்னர் நாலூர் ஆகிவிட்டது. நாலூர், நாலூர் மயானம் என இரு கோயில்கள் இங்கே உள்ளன. இவற்றில் நாலூர், தேவார வைப்புத் தலம். அங்கிருந்து கிழக்கே 1 கி.மீ. தொலைவில் அமைதியான சூழலில் உள்ளது, "திருமெய்ஞானம்' என்று தற்போது அழைக்கப்படும் நாலூர் மயானம். சுவாமியின் பெயர் ஞானபரமேஸ்வரர். அம்பாள் ஞானாம்பிகை. தீர்த்தம், ஞான தீர்த்தம்.

அன்றைய நாட்களில் உயர்ந்த ராஜ கோபுரம், பெரிய பிரகாரங்களுடன் இருந்த கோயில், காலவெள்ளத்தால் சிதைந்து, தற்போது சிறிய கோயிலாகக் காட்சியளிக்கின்றது.

கோயிலின் வெளியே உள்ள நந்தியை வணங்கி, கோபுர வாசலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான பிரகாரம். முற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயில் இது. இக்கோயிலைக் கற்றளியாகக் கட்டியவன், முதலாம் ஆதித்த சோழன் என்கின்றன கல்வெட்டுக்கள்.

இக்கோயில் கருவறைச் சுவரில் இருந்து 23 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் இருந்து, மூன்றாம் ராஜராஜன் காலம் வரை பல்வேறு சோழ மன்னர்களால் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டுக்கள், இந்தக் கோயிலுக்கு அளித்த தானங்களைப் பற்றி மட்டும் கூறாமல் பல வரலாற்றுச் செய்திகளையும் கூறுகின்றன. முதலாம் குலோத்துங்கனின் பல வெற்றிகளுக்குக் காரணமான அவனது படைத்தலைவன் பிரமாதி ராஜனின் ஊர் இந்த நாலூரே.

கல்வெட்டுகளில் இக்கோயிலின் இறைவன் பெயர், "திருமயானத்து ஸ்ரீ மூலத்தானத்துப் பெருமானடிகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மஹா மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் நான்கு கரங்களுடன் ஞானாம்பிகை அழகிய திருக்கோலம் கொண்டு புன்முறுவலுடன் நம் உள்ளத்தைக் கவர்கின்றாள். கருவறையில் ஞானபரமேஸ்வரர் சிறிய வடிவினராய் ருத்திராட்சப் பந்தலின் கீழ் எழுந்தருளியுள்ளார். அழகிய மூர்த்தி இவர்.

திருஞானசம்பந்தர், "இத்தலத்துப் பெருமானை வழிபட்டால் பழைய வினைகள் அகலும், பாவங்கள் பற்றாது, இடர்கள் வராது, மறு பிறவி இல்லை, வானுலகத்தில் இன்பமாய் வாழலாம்' என்றெல்லாம் பயன்களை அடுக்குகின்றார். "கோலத்தார் கொன்றையான், கொல் புலித்தோல் ஆடையான், நீலத்தார் கண்டத்தான், நெற்றியோர் கண்ணினான், ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில், சூலத்தான் என்பார்பால் சூழாவாம் தொல்வினையே' என்பது சம்பந்தரின் வாக்குறுதியாகும்.

"எப்படிப்பட்ட தீவினையாளர்களாய் இருந்தாலும் ஐயனின் திருநாமங்களை ஓதியபடி நாலூர் மயானத்தை வழிபடுகிறவர்களின் துயரங்கள் தீரும்' என்பது இப்பாடலின் உட்கருத்தாகும்.இத்தலத்தின் தற்போதைய நிலைமை மிகவும் வருந்தத் தக்கதாக உள்ளது.

பரம்பரை, பரம்பரையாகப் பூஜை செய்து வந்த குருக்கள் தற்போது இல்லை. போதிய வருமானமும் இல்லாத காரணத்தினால் ஒரு வேளை பூஜைகூட நடைபெறாமல் கோயில் பூட்டியபடியே உள்ளது. முக்தியடைய யாருக்கும் விருப்பமில்லை போலும்! ஒரு கால பூஜையாவது இக்கோயிலில் நடைபெற அன்பர்கள் தங்களால் ஆன பொருளுதவி செய்து, மேற்குறிப்பிட்ட பயன்களைப் பெற்று நலமோடு வாழலாம். ஆலயத் தொடர்புக்கு: கலியமூர்த்தி, செல்பேசி எண்: 9486767962/ 9047328512.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.