தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எய் கணை நிழலின் கழியும்

தலைவன் பொருள்தேட தலைவியைவிட்டு பிரிந்து செல்ல நினைக்கிறான். இதை தோழியிடம் கூறுகிறான்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 3:06 pm

முனைவர் ப. ஜீவகன்

தலைவன் பொருள்தேட தலைவியைவிட்டு பிரிந்து செல்ல நினைக்கிறான். இதை தோழியிடம் கூறுகிறான். அதற்குத் தோழி தலைவனிடம் கூறும் விதமாக அமைந்த நற்றிணைப் பாடலில் வரும் நிலையாமை குறித்த அழகிய உவமைதான் 'எய் கணை நிழலின் கழியும்' என்ற அற்புதமான சொல்லாடல்.

இவ்வுலகில் நாள்தோறும் இன்பமும் இளமையும், எய்யும் அம்பின் நிழலைப் போலக் கழியும் தன்மையுடையன. இதை உணர்ந்து கொள்வது அரிதாகும். எனவே, இந்நிலையாமையை உணர்ந்து காக்க வேண்டியதைக் காப்பீராக என தோழி தலைவனிடம் அறிவுறுத்தும் பாலை நிலப் பாடலாகும். இப்பாடலை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை.

ஆனால், இப்பாடலின் ஆசிரியர் நிலையாமை கொள்கையை உடையவர் என்பது இப்பாடலின் வழி புலனாகிறது.

''வைகல் தோறும் இன்பமும்

இளமையும்

எய் கணை நிழலின் கழியும்,

இவ் உலகத்து;

காணீர் என்றலோ அரிதே; அது நனி

பேணீர் ஆகுவீர்-ஐய! என் தோழி

பூண் அணி ஆகம் புலம்ப, பாணர்

அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை

அம் தீம் கனி

பறை அறை கடிப்பின்,

அறை அறையாத் துயல்வர,

வெவ் வளி வழங்கும் வேய்

பயில் அழுவத்து,

எவ்வம் மிகூஉம் அருள் சுரம் இறந்து,

நன் வாய் அல்லா வாழ்க்கை

மன்னாப் பொருட்பிணிப் பிரிதும்

யாம் எனவே.

(-நற்றிணை 46.)

ஐயனே! என் தோழியின் அணிகலன் அணிந்த மார்பு வருந்த பாணர் பறையை முழக்கும் குறுந்தடியோ என ஐயம் கொண்டது போலக் கொன்றையின் அழகிய இனிய கனிகள் காம்புகளோடு பாறையில் அறைந்து விழும்படி கிளைகள் அசைய, வெம்மையான காற்று வீசும் மூங்கில் நெருங்கிய காட்டில் துன்பமிக்க அரிய வழியைக் கடந்து நல்ல வாய்ப்பில்லாத வாழ்க்கைக்கு உரிய நிலையற்ற பொருட்பற்றுக் காரணமாக 'யாம் பிரிதும்' எனக் கூறுவதைக் கைவிடுக எனத் தோழி பிரிவு உணர்த்திய தலைவனுக்கு அறிவார்த்தமாக மறுமொழி கூறும் தன்மையில் அமைந்துள்ளது இப்பாடல்.

நிலையாமையை நரிவிருத்தம், நாலடியார் போன்ற பல நூல்கள் எடுத்துரைத்துள்ள போதும் 'எய் கணை நிழலின் கழியும்' எனும் நிலையாமைக்கான இவ் உவமை எண்ணி மகிழத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.