மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

'பஞ்சலட்சணம்' படிப்போம்

பஞ்சலட்சணம் என்றவுடன் ஏதோ ஐந்து லட்சணம் குறித்துக் கூறுகிறார்கள் என்று தோன்றும்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 1:06 pm

பஞ்சலட்சணம் என்றவுடன் ஏதோ ஐந்து லட்சணம் குறித்துக் கூறுகிறார்கள் என்று தோன்றும். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கணக் கல்வி கற்றலில் உள்ள வெறுப்பைப் போக்குவதற்காகப் 'பஞ்சலட்சணம்' என்ற பெயரில் செல்வக் கேசவராயர் நன்னூலைச் சுருக்கியும், முறை வைப்பை மாற்றியும், சில நூற்பாக்களை நீக்கியும் அமைத்துத் தொகுத்தார்.

தமிழ் இலக்கணம் என்றாலே நன்னூலைக் கற்றல்தான் என்ற நிலை அன்றைக்கு இருந்தது; இன்றைக்கும் இருக்கிறது. அன்றைக்கே நன்னூலைக் கற்க மாணவர்கள் அஞ்சினார்கள் என்பதைச் செல்வக் கேசவராயர், 'நன்னூல் தன்னளவில் எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் தர்க்க ரீதியாக உரைத்தலால், இலக்கணம் கற்கப் புகுகின்ற மாணாக்கர்கள், பின் அறியத்தக்கவற்றை முன்னும், முன் அறியத் தக்கவைகளைப் பின்னுமாக அறிதல் வேண்டி இடர்ப்பட்டு, இலக்கணம் என்றால் வெறுப்புறுவாராகின்றனர். நினைவில் வைப்பது அவசியமில்லாத பல சூத்திரங்களையும் உரையையும் உதாரணங்களையும் சில பண்டிதர்கள் உருவிடும்படி (மனப்பாடம்) வலியுறுத்தலால் மாணாக்கர்க்கு இலக்கணம் என்பது கைப்புறுவதாகின்றது...மாணாக்கர் நன்னூலைக் கையால் தீண்டவும் அஞ்சுவாராகின்றனர்' என்று கூறுவதால் அறியலாம்.

இதனால், அவர் நன்னூலைச் சுருக்கி 202 நூற்பாக்கள் உள்ள எழுத்ததிகாரத்தை 11 நூற்பாக்களில் எழுத்து, முதலெழுத்து, சார்பெழுத்து (மீதம் உள்ளவற்றை நீக்கி விடுகிறார்) என அமைத்துள்ளார்.

205 நூற்பாக்கள் உள்ள சொல்லதிகாரத்தை 196 நூற்பாக்களில் சொல், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், தொடர்மொழி, புணர்ச்சி, சொல்லாக்கம், வாக்கியம் (வைப்பு முறையைப் பெரும்பாலும் மொழியியலுக்கு ஏற்ப மாற்றுகிறார்.) என்ற பொருண்மையில் அமைத்துள்ளார்.

பின்னர், மூன்றாம் லட்சணமாக யாப்பியல் செய்திகளை, யாப்பருங்கலக் காரிகை நூற்பாக்கள் இன்றிச் செய்திகளை மட்டும் செய்யுள் உறுப்பு, செய்யுள் என்ற இரு தலைப்புகளில் எளிமையாக விளக்கியுள்ளார்.

நான்காம் லட்சணமாக அணி இலக்கணத்தைத் தண்டியலங்கார நூற்பாக்கள் இன்றி 24 அணிகளைச் சுருக்கமாக விளக்குகிறார். ஐந்தாம் லட்சணமாகப் பொருளை மிகச் சுருக்கமாக மூன்று பக்க உரைநடையில் விளக்கியுள்ளார். இந்த நூல் தற்போது சிதைந்த நிலையில் கிடைக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் எழுத்து, சொல் ஆகியவற்றுக்கு நன்னூலையும், அகப்பொருளுக்கு நம்பியகப் பொருளையும், புறப்பொருளுக்குப் புறப்பொருள் வெண்பா மாலையையும், யாப்புக்கு யாப்பருங்கலக் காரிகையையும், அணிக்குத் தண்டியலங்காரத்தையும் படிக்க வேண்டியதாகிறது. ஐந்து நூல்களைப் படிக்க மாணவர்கள் அஞ்சும் நிலையில், ஒரு சிறிய நூலில் ஐந்து இலக்கணத்தையும் கற்கும் நிலை இருக்கும்போது, அந்நூலை ஏன் மீள வெளிப்படுத்தக் கூடாது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.