ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வள்ளுவம் காட்டும் பெண்களின் மனவலிமை!

தனது பெருங் காதலுக்குரிய பெண்ணை அடைய முடியாவிடில் அவள் படத்தை ஒரு பனை ஓலையில் ஓவியமாக வரைந்து அதை ஊர்வலமாய் எடுத்துச் சென்று இறுதியில் மலையில் இருந்து குதித்துச் சாதலை "மடல் ஏறுதல்' என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 12:03 pm

ஆரூர் தாஸ், புதியவன்

தனது பெருங் காதலுக்குரிய பெண்ணை அடைய முடியாவிடில் அவள் படத்தை ஒரு பனை ஓலையில் ஓவியமாக வரைந்து அதை ஊர்வலமாய் எடுத்துச் சென்று இறுதியில் மலையில் இருந்து குதித்துச் சாதலை "மடல் ஏறுதல்' என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது.

திருவள்ளுவர் "நாணுத்துறவுரைத்தல்' என்ற அதிகாரத்தில் பெண்களின் மன வலிமையைப் புகழ்ந்தும் அந்த வலிமையற்ற ஆண்களின் நிலையைக் குறித்தும் சில குறட்பாக்களை தருகின்றார்.

நாணொடு நல்லாண்மைப் பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல் (1133)

"முன்பு நாணமும் ஆண்மையும் மிகுந்து விளங்கிய நான் இன்று காமம் மிகுந்தோர் ஏறுகின்ற மடலையன்றோ ஏற்றுள்ளேன்' என்று ஒரு தலைவன் கூறுகின்றான்.

தலைவன் உறுகின்ற காதலும் காமமும் எத்தகைய அலைக்கழிப்புக்கு அவனை ஆளாக்குகிறது என்பதை,

காமம் உழந்து வருந்தினர்க்கு ஏமம்

மடல் அல்லது இல்லை வலி (1131)

என்கிறார். "காம நோயில் உழன்று துயருற்றோர்க்கு மடல் ஏறுதல் இன்றி துணை நிற்கக்கூடிய மனவலிமை வேறு இல்லையே' என்று ஆதங்கத்தோடு கூறுகின்றார்.

காம கடும்புனல் உய்க்குமே நாணொடு

நல்லாண்மை என்னும் புணை (1134)

"நாணமும் ஆண்மையுமாகிய தோணியை காமமாகிய பெருவெள்ளம் புரட்டித் தள்ளி அடித்துச் செல்கிறதே' என்றும் கூறுகிறார்.

ஆண்கள் உற்ற காதலையும் காமத்தையும் ஒரு மாபெரும் சக்தியாய், ஆணின் மன வலிமையை சிதைக்கின்ற சூறாவளியாய் சுட்டிக்காட்டுகின்ற திருவள்ளுவர், 1137ஆவது குறட்பாவில் பெண்களின் மன வலிமையைப் பெரிதும் போற்றுகிறார்

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்.

"கடலளவுக்கு மிகுந்த காம நோயால் வருந்தியபோதிலும் மடலேறாமல் தனது காம உணர்வை நெஞ்சத்தில் புதைத்துக் கொள்ளும் பெண்ணின் பெருஞ்சிறப்புக்கு இணை எதுவும் இல்லை' என்று சொல்கின்றார்.

பெண்களின் மன வலிமையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் போற்றிப் பாராட்டி இருப்பது கருதத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.