சிலம்பில் அகநானூற்றுப் பரல்கள்
ஒரு மொழியிற் சிறந்த படைப்பாளியாக இருப்பவன், அம்மொழியில் அவன் காலத்துக்கு முந்தித் தோன்றிய நூல்களின் படைப்புத் திறன்களையெல்லாம் அறிந்தவனாகவே இருப்பான்;


ஒரு மொழியிற் சிறந்த படைப்பாளியாக இருப்பவன், அம்மொழியில் அவன் காலத்துக்கு முந்தித் தோன்றிய நூல்களின் படைப்புத் திறன்களையெல்லாம் அறிந்தவனாகவே இருப்பான்; முந்துநூற் கருத்துகளைப் பதியனிட்டாற்போல் தம் நூலிலும் ஆங்காங்கு இடம்பெறச் செய்வான். இளங்கோவடிகள், சாத்தனார், கொங்குவேளிர், திருத்தக்கதேவர், கம்பர், வில்லிபுத்தூரார் போன்றோர் படைப்புகளில் இதற்கான சான்றுகளைக் காணலாம்.
சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் வழக்குரை கேட்டு, "யானே கள்வன்' என்று கூறி உயிர்நீத்தான் பாண்டியன். அதன் பின்னரும் ஆறாத சினமுடையவளாய்க் கோப்பெருந்தேவியை நோக்கி, முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண்என்று கண்ணகி கூறியதாகப் பாடுகிறார் இளங்கோவடிகள். கதை நிகழ்வுக்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருந்துமாறு இளங்கோவடிகள் திருக்குறளை எடுத்தாண்ட இடம் இது.
இன்னா செய்யாமை அதிகாரத்தில் இதனை அடுத்துவரும் இறுதிக்குறள்,
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்
நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர் (320)
என்பது. இதில் முன்னிற்கும் மூன்று சீர்களின் விளக்கமாக, "கெளரவர்களால் பாஞ்சாலிபட்ட துயரம் முழுவதையும் அவர் தம் தேவிமார் அனைவர்க்கும் உரித்தாக்கினான் கண்ணபிரான்' என்று பெரியாழ்வார் பாடியிருப்பது சுவை பயப்பதாகும்.
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி
மறுக்கமெல்லாம்
ஆண்டங்கு நூற்றுவர்தம் பெண்டிர்மேல்
வைத்த அப்பன் (354)
என்பது அவரின் திருமொழி. இங்கெல்லாம் முன்னோரின் கருத்துகள் கன்னலொடு தேன் கலந்தாற் போல மேலும் சுவை பெருக்கித் தரப்பட்டிருத்தல் வெளிப்படை.
இவ்வகையில் அகநானூற்றின் பாடலடிகளில் இளங்கோவடிகள் ஈடுபட்டமைக்குச் சில சான்றுகள் காட்டலாம்.
பாலைத் திணையமையப் பெருந்தலைச் சாத்தனார் பாடிய 13-ஆம் பாடலில், தென்னவனாகிய பாண்டியன் பற்றி அவர் குறிப்பது வருமாறு:
தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்
...... . . . . . . . .. . . .. . . தன்மலை(க்)
குறவர் தந்த சந்தின் ஆரமும்
இருபே ராரமும் எழில்பெற அணியும்
திருவீழ் மார்பின் தென்னவன்
(13:1-5)
பாண்டியனுக்குரிய தென்கடலில் பிறப்பது முத்து. அவனுக்குரிய பொதிய மலையிற் கிடைப்பது சந்தனம். அந்த முத்து மாலையையும் சந்தனக்குழம்பையும் மார்பில் அணிந்திருக்கிறான். இதனையே, "இருபேராரமும் எழில் பெற அணிந்த தென்னவன்' என்று குறிப்பிட்டார் புலவர்.
தென்னவன் என்பதற்கு முன்னாகவுள்ள "திருவீழ்' என்னும் அடை, "திருமகளால் விரும்பப்படுகிற மார்பு' என்னும் பொருளுடையது. இவ்வடிகளில் மனந்தோய்ந்த இளங்கோவடிகள் முதல் ஐந்தடிகளின் கருத்தை ஆய்ச்சியர் குரவையிலும், எஞ்சிய ஆறாம் அடியில் உள்ள "திருவீழ் மார்பின் தென்னவன்' என்பதை வழக்குரைகாதையிலும் மிகப் பொருத்தமாக எடுத்தாண்டிருக்கிறார்.
கோவா மலையாரம்; கோத்த கடலாரம்
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன்
மார்பினவே
என வரும் ஆய்ச்சியர் குரவை - உள் வரிவாழ்த்துப் பகுதி, இங்குக் குறித்த அகநானூற்றின் முதல் ஐந்தடிகளின் கருத்தைத் தழுவியதாகும்.
கடல் தந்த "முத்தின் ஆர'த்தைக் "கோத்த கடலாரம்' என்றவர், மலையிற் பிறந்த "சந்தனத்தின் ஆர'த்தைக் "கோவா மலையாரம்' எனக்குறித்தார். கோக்கப்படும் முத்துப் போலன்றிச் சந்தனம் குழம்பாகப் பூசிக் கொள்வது பற்றி இங்ஙனம் பாடினார் இளங்கோவடிகள். இதன் பொருள் வெளிப்படை என்பர் சிலம்புக்கு உரை கண்ட நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
இனி, "திருவீழ் மார்பின் தென்னவன்' என்னும் அகநானூற்றுப் பாடலடி, வழக்குரை காதையில் "திருவீழ் மார்பில் தென்னவர் கோவே' (20:24) என வருதல் காணலாம். இதற்கு உரை கூறிய அரும்பதவுரைகாரர், "திருவிரும்பப் பட்ட மார்பு; திருக்கழிகிற மார்பு என்றுமாம்' என்று இருவகையாகப் பொருள் சொன்னார். செங்கோன்மை தவறிய பாண்டியன், வழக்குரை காதையின் முடிவில் தன்னுயிர் துறக்கவிருக்கும் கதை நிகழ்வைக் கருதி, "திருநீங்குகிற (கழிகிற) மார்பு' என்று நயம்படப் பொருள் உரைத்தார். இக்காலத்தில் இதனை நகைமுரண் என்பர்.
இனி அகநானூறு 286-ஆம் பாடலில் காஞ்சிமரத்தின் நிழலில் மீனின் முட்டை போன்ற மெல்லிய மணலைக்குவித்து, கரும்பாகிய உலக்கைகொண்டு, இளம் பெண்கள் இருமருங்கும் இடையசையக் குற்றுகின்றனர்.
அப்போது அவர்கள் பாடிய வள்ளைப்பாட்டைக் கேட்டு மருதமரத்தின் தாழ்ந்த கிளைகளில் தங்கியிருந்த சிரல்பறவைகள் கண்ணுறங்கினவாம். மருதத்திணையில் ஓரம் போகியார் பாடிய பாடல் இது.
இவ்வருணனையில் ஈடுபட்ட இளங்கோவடிகள் - வாழ்த்துக்காதையில் மூவேந்தர்க்குரிய வள்ளைப்பாட்டுகளைப் பின்வருமாறு இசைக்கிறார்.
தீங்கரும்பு நல்உலக்கை யாகச்
செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார்
புகார்மகளிர்
புகார்மகளிர் பாடிய சோழனுக்குரிய இப்பாடலில், அகநானூற்றுப் பாடல் கருத்து அப்படியே தழுவப்பட்டிருத்தல் காணலாம். காஞ்சிமரநிழல், கரும்பு உலக்கை என வருவன காண்க.
இப்படி அகநானூற்றைத் தழுவியவர் அடுத்து வரும் பாண்டியர், சேரர்க்குரிய வள்ளைப் பாடல்களைத் தம் கற்பனைக்குத் தக மாற்றியமைத்துப் பாடுகின்றார்.
பாடல் சால் முத்தம் பவழ உலக்கையால்
மாட மதுரை மகளிர் குறுவரே
என்றும்,
சந்துஉரல் பெய்து தகைசால் அணிமுத்தம்
வஞ்சி மகளிர் குறுவரே வான்கோட்டால்
என்றும் புதிய கற்பனைத் தடம் அமைத்துக் கொள்கிறார்.
முன்னோர் கருத்தைப் பின்பற்றிய போதும் ஒரு கட்டத்தில் அவர்களையும் தாண்டி முன்னோக்கிச் சென்று புதுவது புனையும் போக்கிற்கு இளங்கோவடிகளின் இப்பாடல்களே உதாரணமாகின்றன.
பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தங் குறுவாள் செங்கண்
குவளை அல்ல, கொடிய கொடிய ....
என்னும் கானல்வரிப்பாடலும் இவற்றுடன் சேர்த்து எண்ணத்தக்கதே.
மதுரையில் - ஆயர்சேரியில் மாதரியின் இல்லத்தில் கண்ணகியுடன் தங்கியிருந்த கோவலன் தன் கடந்த காலச் செயல்களுக்காகக் கழிவிரக்கம் கொண்டு பேசுகிறான். அப்பேச்சின் முடிவில்,
இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்;
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் (16:67-68)
என்கிறான். "சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு', (16:92)அவளிடம் விடை பெற்றுச் செல்லும் நிலையில் சொன்ன இச்சொற்கள்,
சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி (17:9)
என்னும் அகநானூற்றுப் பாடலடியையே நமக்கு நினைவூட்டுகின்றன.
ஆழ்ந்து கற்பார் அகநானூற்றில் மட்டுமின்றி ஏனைய எட்டுத்தொகை நூல்களிலும் பத்துப்பாட்டிலும்கூட இளங்கோவடிகள் ஈடுபட்டுப் பாடியமைக்கான சான்றுகளைக் காணக்கூடும். அவை கருத்துகளாகவும் "சொல் - தொடர் ஒப்புமை'களாகவும் இருப்பதைக் கண்டுமகிழலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...