சொல் புதிது - 27
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை' என்று சொல்கிறார்கள். சுற்றம்தான் குற்றங்களுக்குக் காரணமா?


குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை' என்று சொல்கிறார்கள். சுற்றம்தான் குற்றங்களுக்குக் காரணமா?
சகோதரி சூர்ப்பனகை சொன்னதைக் கேட்டு இராவணன் சீதையைக் கடத்தியிருக்கிறான். காணாமல் போன மனைவியின் காற்சிலம்பு என்று நினைத்துக் கோவலனைப் பாண்டியன் கொன்றிருக்கிறான். தன் மனைவி பார்வதி தேவியின் கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லை என்று சொன்னதைக் கேட்டு நக்கீரன் மீது சொக்கநாதர் நெற்றிக்கண்ணைக் காட்டி இருக்கிறார். துரோபதை துயில் உரியப்பட்டது பாரதப் போராகி இருக்கிறது. பழங்குடி அரசனின் மகளைப் பெண் கேட்டு வந்ததால் மரம்படு சிறு தீயைப் போல ஊர் அழிந்தது என்று புறநானூறு சொல்கிறது. ஆனால், மனைவி மகனோடு இருந்தும் பொய் சொல்லாமல் அரிச்சந்திரன் இருந்திருக்கிறான். அவர்களைப் பிரிவதற்கும் அதுவே காரணமாக இருந்திருக்கிறது.
குற்றச் செயல்களுக்கும் பரிமான வளர்ச்சி உண்டு போல. அருகில் இல்லாமல் தூர இருந்தே குற்றம் செய்ய இன்றையத் தொழிநுட்பம் வசதி தந்திருக்கிறது. வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருட, மற்றவர் தகவல்களைத் திருட, புகழைக் கெடுக்க, ஆபாச ஆசைகாட்ட என்று தனி மனிதர்களைப் பாதிக்கும் குற்றங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.
உங்கள் மின்னஞ்சலை உங்களுக்குத் தெரியாமல் மற்றவர் பார்க்கக்கூடும். உங்கள் கணினியில் உங்களுக்குத் தெரியாமல் வைரஸ் கிருமிகளை அனுப்பித் தகவல்களை அழிக்க முடியும். உங்கள் கடன் அட்டைக் கடவுக் குறியீட்டை உங்களுக்குத் தெரியாமல் வேறொருவர் பயன்படுத்த முடியும். நீங்கள் பார்க்கிற வலைதளங்கள் என்ன என்பதை உங்களுக்குத் தெரியாமல் மற்றவர் பார்த்து உங்கள் விருப்பம் தெரிந்து வியாபாரத்திற்கு உங்களை அணுக முடியும். உங்களைப் பாதிக்கும்படியான செயலை இன்னொரு நாட்டிலிருந்துகொண்டும் செய்வார்கள்.
தனிமனிதர் மட்டுமன்றி நாடுகளும்கூட இக்குற்றங்களால் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. இராணுவத் தகவல்களைத் திருடுவது, முடக்குவது, மாற்றுவது, கடவுச் சொல்லையும் குறியீடுகளையும் திருடுவது, உரையாடலை ஒட்டுக் கேட்பது என்று நாடுகளின் பாதுகாப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கும் குற்றங்கள் பெருகி வருகின்றன.
எல்லைகளைத் தாக்கி இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பதைப் போலவே எல்லையில்லாத தொழில்நுட்பப் படையெடுப்பு இப்போது உருவாகி வருகிறது.
நவீன அறிவியல், முதலில் இராணுவத்துக்காகத்தான் அடுத்தது வணிகத்திற்காகத்தான். மூன்றாவதாகத்தான் பொதுமக்கள். ஆங்கிலேயர்கள் போட்டத் தண்டவாளமும் இப்போது போடப்படும் நெடுஞ்சாலைகளும் அப்படித்தான்.
இராணுவம் மற்றும் வணிகத்தின் உடன்பிறந்த அனைத்து மறைகுறியீட்டுப் பணிகளுக்கும் தொழில்நுட்பம் உதவுகிறது. அதே தொழில் நுட்பம் கொண்டுதான் அதை உடைக்கிறார்கள். நாடுகளுக்குள்ளும் வணிகர்களுக்குள்ளும் இடையே நடந்த அத்துமீறல்கள் இப்போது தனி மனிதர்களிடமும் நடக்கத் தொடங்கியுள்ளன. இக்குற்றங்களில் ஈடுபடும் மூன்றில் இரு பங்குக் குற்றவாளிகள் 15 வயதிலிருந்து 26 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று ஆய்வறிக்கை சொல்கிறது. இதனால் ஆண்டொன்றுக்கு உலகப் பொருளாதாரத்தில் 445 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுகிறதாம். இக்குற்றங்கள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து நடைபெறுவதால் இவற்றை விசாரிக்கவும் வழக்கு நடத்தவும் உலகக் குற்றவியல் நீதிமன்றம் இருக்கிறது. இக்குற்றங்களை இவஆஉதஇதஐஙஉந என்று அழைக்கிறார்கள். தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்கள் தந்துள்ள தமிழ்ச் சொற்கள் வருமாறு:
ஜனநேசன் - இணையதளசார் குற்றம்
சோ. முத்துமாணிக்கம், சோலை கருப்பையா - இணையதளக் குற்றம்
கோ. மன்றவாணன் - அலைவெளிக் குற்றம்/ மின்னூடகக் குற்றம்/ கணினிவழிக் குற்றம்
மீனா கண்ணன், செ.சத்தியசீலன்} கணினிவழிக் குற்றம்
ப.இரா. இராசஅம்சன், அ.கருப்பையா - இணையவெளித் தீச்செயல்/ வலைதளக் குற்றம்
வெ. ஆனந்தகிருஷ்ணன், சி.இராமச்சந்திரன் - இணையக் குற்றம்/ மறைகுறியீடு குற்றம்
எஸ்.சுரேஷ் - தகவல் தொழில்நுட்பக் குற்றம்
கா.மு.சிதம்பரம் - மின்னணுப் பொறிவழிக் குற்றம்
வானவில் மூர்த்தி - வலைத்தவறு/ வலைவழித் தவறு/ மின்மாயக் குற்றம்
CYBERCRIME, கணினிவழி நடக்கிறது; இணையதளம் வழி நடக்கிறது; செல்பேசிவழி நடக்கிறது. செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பியும் குற்றம் செய்கிறார்கள். கணினி, இணையதளம், செல்பேசி எல்லாமே மின்னணுக் கருவிகளாக இருக்கின்றன. அதனால் மின்னணுக் கருவிகள்வழி நடைபெறும் குற்றங்களைக் கோ. மன்றவாணன் குறிப்பிட்டிருக்கும் மின்னூடகக் குற்றம் என்று சொல்லலாம்.
CYBERCRIME - மின்னூடகக் குற்றம்
அடுத்த வாரத் தேடல் - Liaison
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...