பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சொல் புதிது - 38

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து' என்பது பழமொழியா? விடுகதையா? என்று முடிவு செய்ய முடியவில்லை.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:39 am

முனைவர் ம. இராசேந்திரன்

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து' என்பது பழமொழியா? விடுகதையா? என்று முடிவு செய்ய முடியவில்லை. ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்க என்று போர்க்களத்திற்கு அனுப்பிய தாயைப் புறநானூறு பாடுகிறது. இந்த மண்ணில் "பந்திக்கு முந்து படைக்குப் பிந்து' என்பது பழமொழியாக வந்திருக்க முடியுமா? இது "பழமொழி இல்லை விடுகதை' என்று சிலர் சமாதானம் சொல்கிறார்கள். வலது கை, சாப்பாடு என்றால் முன்னே வரும்; சண்டை என்றால் அம்பை நாணில் வைத்து வில்லை வளைத்து இழுத்துவிட பின்பக்கமாகப் போகும் என்று விடுகதைக்குப் பதில் சொல்கிறார்கள்.

சாப்பாடு, சண்டை கிடக்கட்டும். அன்றாட வாழ்க்கையில் முந்துகிறவர்களைக் கவனித்துப் பாருங்கள். சாலைகளில் முந்துகிறார்கள்; வரிசையில் முந்துகிறார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதாய் நினைத்து வரிசையிலும் சாலைகளிலும் முந்துகிறார்கள்.

முந்துவது வேறு; முன்னேறுவது வேறு. பல நாடுகளில் சாலைகளில் வாகனங்களில் செல்வோர் முன்னே செல்லும் வாகனத்தைக் குறிப்பிட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் மீறி மேற்செல்லக்கூடாது என்று தடை விதித்திருக்கிறார்கள்.

எதிரே வருகிறவர்கள் நம்மைக் கடந்து நமக்குப் பின்னே செல்கிறார்கள்; நம் பின்னே வருகிறவர்கள் நம்மைத் தாண்டி நமக்கு முன்னே போகிறார்கள். நம்மைத் தாண்டி நமக்கு முன்னே போகிறவர்கள் நம்மைத் தாண்டிக் குதித்துச் செல்வதில்லை. நாம் போகிற திசையிலேயே நம்மை விட விரைவாகப் போகிறார்கள். நமது வழிக்குப் பக்கத்தில் நுழைந்து நமது வழியில் குறுக்கீடு செய்தும் போகிறார்கள்.

தனிமனிதர் என்று மட்டுமில்லை, நாடுகளும் அப்படித்தான் இன்னொரு நாட்டை ஓவர்டேக் செய்கின்றன.

ஓவர்டேக் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்கள் தெரிவித்துள்ளவை வருமாறு:

டி.வி.கிருஷ்ணசாமி - பின்தொடர்ந்து கைப்பற்றுதல்/ முந்துதல்/ எடுத்துவிடு

சந்திரா மனோகரன் - தொடர்பிடி/ தொடர் முந்து/ முந்திப்பற்று/ மேற்சென்றெட்டு

எம்.எஸ்.இரணியநாதன் - முந்திச் செல்க/ கடந்து போகவும்/ முன்னேறு

ராஜசிம்மன் - பின்தொடர்ந்து முன் செல்லுதல்

இராம.வேதநாயகம் - தவறாக முந்துதல்/ மாறாக முந்துதல்

மீனா கண்ணன் - முந்து/ முந்திச்செல்/ முன்னேறிச் செல்

சோ.முத்துமாணிக்கம் - முந்து/ முந்திச்செல்/ பின்தொடர்ந்துசெல்

எஸ். சுரேஷ் - முன்னே முந்திச்செல்

க.மா.க.விவேகானந்தம் - முந்திச் செல்லுதல்/ ஆட்படுதல்/ தாண்டிச் செல்லுதல்

செ.சத்தியசீலன் - முந்து/ முன்செல்லல்/ பின்தள்ளல்

க.மோகனசுந்தரம் - விலக்கி முந்து/ கடந்து முந்து

என்.ஆர்.ஸத்தியமூர்த்தி - முந்து/ முந்திச் செல்/பின்தள்ளிச்செல்/ கடந்துசெல்

கோ. மன்றவாணன் - முந்து/ முந்திச்செல்/ தடம் மீறி முந்து/ விலகி முந்து/ கடந்துசெல்

ப.இரா.இராசஅம்சன் - முற்சென்றுபிடி/ முந்திச்செல்/ மேற்சென்று முந்து/ தாண்டிச்செல்

ஓவர்டேக் என்பது எதிர்பாராத வகையிலும் நிகழும்; முந்துவது என்பது முன்னேற்றத்தை மட்டும் குறிப்பதில்லை. முந்திரிக்கொட்டை போல எதற்கெடுத்தாலும் முந்திக் கொண்டு வருகிறான் என்று சொல்வதில் "முந்துவது' பாராட்டுதற்குரியதாக இல்லை. ""முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி'' என்பதில் முந்து என்பதற்குத் "தொன்மை' என்ற பொருளும் இருக்கிறது. ""உந்தி முதலா முந்து வளி'' என்ற தொல்காப்பிய நூற்பாவில் முந்து வளி மேலெழும் காற்றினைக் குறிக்கிறது. ""நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்'' (335) எனும் குறளில் மேற்சென்று என்பது "விரைந்து' என்று பொருள் தருகிறது.

""விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்'' எனும் "இடைமருது மேவிய ஈசனாரை'ப் பாடும் தேவாரத்திலும் "மேற்செல்' என்பது வாகனத்தில் விரைந்து செல்லுதல் என்றே பொருள் தருகிறது.

முந்துதல் என்பதைவிட நம்மைக் கடந்து முந்தி மேற்செல்லுதல் என்பதே ஓவர்டேக் என்பதாக இருக்கிறது; மேற்சென்று இடிக்காமல் செய்யும் ஓவர்டேக் என்பதை முந்தி மேற்செல் என்றே சொல்லலாம்.

Overtake - முந்தி மேற்செல்

அடுத்த வாரத் தேடல் - Smart phone

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.