வெளிநாட்டவராக இருந்தாலும், இந்தியர்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் மார்க் துலி. இந்திய அரசியல், சமூக மாற்றங்கள், ஆன்மிகத் தேடல்கள், கிராமங்கள், சாமானியர்களை மிக நுணுக்கமாக அறிந்துகொண்டு, பத்திரிகை வாயிலாக அவற்றை எடுத்துச் சென்ற இவர், தனது தொண்ணூறாவது வயதில் அண்மையில் மறைவுற்றார்.
1936-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த மார்க் துலியின் தந்தை இந்தியாவில் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரி. இதனால் அவரது ஆரம்பக் கல்வியும், வாழ்க்கை அனுபவங்களும் இந்திய மண்ணிலேயே தொடங்கின. இந்தியாவின் கலாசாரம், மதம், மக்கள் வாழ்க்கை ஆகியன அவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. பிற்காலத்தில் இங்கிலாந்து சென்று கல்வியைத் தொடர்ந்தாலும், இந்தியா அவரது உள்ளத்தில் இருந்து நீங்கவே இல்லை.
மார்க் துலி தனது பத்திரிகை வாழ்க்கையை பி.பி.சி. நிறுவனத்தில் தொடங்கினார். அவர் இந்திய நிருபராக தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட, இங்கிருந்து இந்தியச் செய்திகளைப் பல்லாண்டுகளாக உலகுக்கு வழங்கினார்.
அவரது உரைகள், நேர்காணல்கள், வானொலி நிகழ்ச்சிகள் ஆகியன இந்தியர்களுக்கே உரிய மொழியையும் உணர்வையும் பிரதிபலித்தன. அதனாலேயே அவர் 'இந்தியாவின் குரல்' என அழைக்கப்பட்டார்.
இந்திய அரசியல், தேர்தல்கள், சமூக மாற்றங்கள், அவசர நிலை உள்ளிட்டவற்றையும் கூர்ந்து நோக்கிச் செய்திகளை அளித்தவர். இந்திரா காந்தி, ராஜுவ் காந்தி, நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைமுறை அரசியல்வாதிகளை அவர் அருகில் இருந்து கவனித்தவர். ஆனால், அவர் செய்திகளில் எந்த பாரபட்சமும் இல்லாமல், ஆட்சியாளர்களுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே சமநிலையுடன் நின்று உண்மையை வெளிப்படுத்தினார்.
இவர் 'நோ ஃபுல்ஸ்டாப் இந்தியா', 'இந்தியா இன் ஸ்லோமோஷன்', 'நான்-ஸ்டாப் இந்தியா', 'தி ஹார்ட் ஆஃப் இந்தியா' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். இந்த நூல்களில் இந்தியாவின் வேகமான வளர்ச்சியும், அதே நேரத்தில் அதன் பாரம்பரியமும், முரண்பாடுகளும், நம்பிக்கைகளும் மிக இயல்பாக சித்திரிக்கப்பட்டுள்ளன. 'இந்தியா ஒரு எளிய நாடல்ல; அது பல அடுக்குகளைக் கொண்ட ஒரு சிக்கலான சமூக அமைப்பு' என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
ஆன்மிகத்தைப் போற்றியவர்:
மார்க் துலி மதம் அல்லது ஆன்மிகத்தை மூடநம்பிக்கையாகப் பார்க்கவில்லை. அதே நேரத்தில், அதனை முழுமையாகப் போற்றியும் பேசவில்லை. இந்திய ஆன்மிகம் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை அவர் விளக்கிய விதம் தனித்துவமானது.
இந்தியர்களின் நண்பன்:
மார்க் துலி இந்தியாவை விமர்சித்த தருணங்களும் உண்டு. ஆனால், அவை எதிர்மறை மனப்பான்மையுடன் அல்லாமல், ஜனநாயகச் சிக்கல்கள், ஊழல்கள், நிர்வாகக் குறைபாடுகள் ஆகியவற்றை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டின. அதேநேரத்தில் ஜனநாயக வலிமை, மக்களின் பொறுமை, சமூக ஒற்றுமை ஆகியவற்றையும் அவர் வியப்புடன் பதிவு செய்திருக்கிறார். இந்த நேர்மையே அவரை 'வெளிநாட்டுச் செய்தியாளர்' என்ற நிலையில் இருந்து உயர்த்தி, 'இந்தியர்களின் நம்பிக்கைக்குரிய நண்பன்' என்ற நிலைக்கு மாற்றியது.
இவருக்கு 'பத்ம பூஷண்' உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், 'விருதுகளைவிட, இந்தியர்கள் என் மீது காட்டிய அன்பும் மரியாதையும்தான் எனக்கான உண்மையான விருது' என்று அவர் கூறுவார்.
அனுபவங்கள்:
1975 முதல் 77 வரையிலான அவசரநிலை காலகட்டத்தில் இந்தியாவில் ஊடக சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. வெளிநாட்டுப் பத்திரிகைகளின் இந்திய நிருபர்களை இந்திய அரசின் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு, அதன்படி பணியாற்றுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி, கட்டாயப்படுத்தியபோது, மார்க் துலி உள்ளிட்ட சிலர் அதனை ஏற்கவில்லை. இதை சகித்துக் கொள்ளாத இந்திரா காந்தி, '24 மணி நேரத்தில் அந்த நிருபர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும்' என உத்தரவிட்டார்.
இந்தியாவைவிட்டு வெளியேறியபோதிலும், இந்தியர்களிடம் பேசி, பல தகவல்களை அறிந்து, இந்தியாவின் அரசியல் நிலைமை குறித்து தொடர்ந்து எழுதினார் மார்க் துலி.
மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வி அடைந்து, நெருக்கடி நிலை திரும்பப் பெறப்பட்ட பிறகு, அவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.
1984- ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்திரா காந்தி படுகொலையும், அதனைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களும் மார்க் துலியின் பத்திரிகை பயணத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அரசியல் விளைவுகளைக் காட்டிலும், அந்த வன்முறைகளிலும் சிக்கியர்களின் துயரங்களை மையமாகக் கொண்டு அவர் செய்திகளை வழங்கினார்.
ராஜுவ் காந்தியின் அரசியல் எழுச்சியையும் வீழ்ச்சியையும், போர்பஸ் ஊழல் விவகாரம் குறித்தும் அவர் விரிவான செய்திகளை அளித்தார்.
காலிஸ்தான் இயக்கம் செயல்பட்ட காலத்தில், பஞ்சாப்பில் வன்முறைச் சூழ்நிலையில், உயிர் அபாயம் இருந்தபோதிலும் டுல்லி நேரில் சென்று, கிராம மக்கள், காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்கள், பயங்கரவாதி பிந்தரன் வாலே உள்ளிட்டோரிடம் பேட்டி எடுத்தார். இந்தியாவை செய்திப் பொருளாக அல்லாமல், வாழும் சமூகமாக அனுபவித்ததே மார்க் துலியின் பத்திரிகை வாழ்க்கையின் சாரமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1980 : எதிர்பாராத முடிவு, மீண்டும் எம்ஜிஆர்!

தேர்தல் 1971 : மீண்டும் திமுக ஆட்சி, கருணாநிதி முதல்வர்!

சோனியா காந்தி விரைவில் வீடு திரும்புவார்: மருத்துவமனை தகவல்!

தொண்டு ஒரு தொடர்கதை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


