/

ஊரைத் தெரிஞ்கிட்டேன்.. உலகம் புரிஞ்சிக்கிட்டேன்..!

உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஓவ்வோர் சிறப்புகள் உண்டு. நாடுகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவே பிற நாடுகளைச் சேர்ந்தோர் வருகை தருகின்றனர்.

News image
Updated On :8 மார்ச் 2025, 6:39 pm

ராஜிராதா

உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஓவ்வோர் சிறப்புகள் உண்டு. நாடுகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவே பிற நாடுகளைச் சேர்ந்தோர் வருகை தருகின்றனர். இந்த வகையில், மக்கள் ரசிக்கும் சுற்றுலாத் தலங்கள் சிலவற்றை அறிவோம்.

நதிக்கரை நாகரிகங்கள்...

சிந்து சமவெளி நாகரிகம், நைல் நதி நாகரிகம், யூப்ரட்டீஸ் நதிக்கரை நாகரிகம் என பெரும்பாலான பழங்கால நாகரிகங்கள் நதிக்கரைகளை ஒட்டியே அமைந்தன; வளர்ந்தன. இந்த வகையில் நதிகளையொட்டி பிரபலமான சில இந்திய இடங்களை பார்க்கலாம்.

ஹம்பி:

துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள ஒரு பழைய நகரம். ராமாயண காலத்தில் 'கிஸ்கிந்தா' எனப்பட்டது. இந்தியாவின் யுனெஸ்கோ பாரம்பரிய நகர நினைவுச் சின்ன நகரங்களில் பிரபலமானது. 1336-1565-ஆம் ஆண்டுகளிடையே இது விஜயநகர பேரரசர்களின் தலைநகராக இருந்தது.

கோட்டைகள், ஆற்றங்கரை அம்சங்கள், புனித வளாகங்கள், கோயில்கள், தூண் மண்டபங்கள்,நினைவுக் கட்டமைப்புகள் என பல இன்றும் இடிபாடுகளுடன் காண வேண்டிய நிலையில் நினைவுச் சின்னங்கள் உள்ளன. விருப்பாட்சீஸ்வரர் கோயில் விஜய நகர கட்டடக் கலைக்கு சிறப்பு மிக்கது. பெங்களுரிலிருந்து 348 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரிஷிகேஷ்:

உத்தரகண்டில் டேராடூன் அருகேயுள்ள நகரம். கங்கை ஆற்றின் வலது கரையில் உள்ளது. முனிவர்கள், துறவிகள் தங்கி தியானம் செய்த இடம். கோயில்கள், ஆசிரமங்கள் காணப்பட வேண்டியவை. யோகா கலையின் உலகத் தலைநகரமான இங்கு ஆண்டுதோறும் நடக்கும் யோகா மாநாடு மிகவும் பிரபலம். சார்தாம் யாத்திரையின் தொடக்க இடம். இமயமலையில் பல சிகரங்களுக்கு ஏறத் துவங்கும் இடமும் இதுதான். இமயமலைக் காட்சிகள் கண்களைக் கவர்ந்திழுக்கும்.

வாரணாசி:

காசி, பனாரஸ் என்ற பெயர்களும் இதற்கு உண்டு. கங்கை கரையில் அமைந்துள்ள இதனை முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்று என்பர். இங்கு 64 குளியல் கட்டடங்கள் உள்ளன. இதில் தஷ்வமேத காட் படித்துறை மிகவும் பிரபலம். மாலையில் இங்கு நடக்கும் கங்கா ஆரத்தி சிறப்பாக இருக்கும்

காசி விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சி, காலபைரவர், மணிகர்ணிகா எரியூட்டும் இடம் உள்ளிட்டவை காணப்பட வேண்டியவை.

Story image

ஆலப்புழை:

கேரளத்தில் உள்ள இந்த நகரத்தின் வழியாக, பல நாடுகளுக்கு நறுமணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. படகு வீடுகள் மிக பிரபலம். படகு பயணத்தில் கேரளத்தின் பல ஊர்கள் வழியாக, எர்ணாகுளத்தை அடையலாம். வழியில் குமரகம் பகுதியில் சில குட்டித் தீவுகளைப் பார்க்கலாம். படகு வீட்டிலேயே ஸ்டார் ஹோட்டல் வசதிகள் அனைத்தும் உண்டு. இந்த காயல் பகுதியில் படகு போட்டிகளும் நடக்கும்.

மகேஸ்வர்:

மத்திய பிரதேசத்தில் ஓம்காரேஸ்வரிலிருந்து 67 கி.மீ. தூரத்தில், நர்மதாவின் வட கரையில் அமைந்துள்ளது. மராட்டிய ராணி அகல்யா தேவி கட்டிய கோட்டை உள்ளது. இங்கு நடக்கும் புடவை விழா பிரபலம். அதில் மகேஸ்வர் நெசவு புடவைக்கு மிகவும் பிரபலம். அருகில் சக்தி பீடமான விந்திய வாசினி கோயிலில் தமிழில் 'அலைபாயுதே', 'ஆரம்பம்' உள்ளிட்ட படங்களும், ஹிந்தி திரைப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நர்மதாவின் அகலம், ஆழம் சொகுசு படகு பயணங்களுக்கு உதவுகிறது.

சோனாமார்க்:

ஜம்மு- காஷ்மீர் -லடாக் எல்லையில், கந்தர்பால் மாவட்டத்துக்கு உள்பட்ட இந்த ஊரை காஷ்மீரி மொழியில்' சோனமரக்' என அழைப்பர். இங்கு பிரபலமாக உள்ள 'ஜீரோ பாயிண்ட்'- ஐ காண முன் அனுமதி தேவை. இயற்கை அழகு, சிகரங்கள்,பள்ளத்தாக்கு, கணவாய் என பல ரசிக்கவைக்கும் இடங்கள் உள்ளன. தாஜிவாஸ் பனிப் பாறைக்கு மட்ட குதிரை சவாரி உண்டு. இந்த இடத்தில் சிந்து நதி வளைந்துவளைந்து செல்வது தனி அழகு.

அமர்நாத் குகைக்குச் செல்ல நுழைவு வாயில் இது. ஏப்ரல்-ஜூன் பயணத்துக்கு சிறந்த நேரம். பூக்கள் சுற்றி பூத்துக் குலுங்கும். குளிர் காலத்தில் வெப்பம் 2 டிகிரி முதல் 12 டிகிரி வரை இறங்குவதால் பனிப் பொழிவு அதிகம். போகவே இயலாத சூழல் சகஜம். துணிச்சலான விளையாட்டுகளுக்கு பிரபலம். பல சிகரங்கள் ஏற நுழைவு வாயில். ரிவர் ராப்டிங்க்கு பிரபலம். ஸ்ரீநகரிலிருந்து 81 கி.மீ. தொலைவில் உள்ளது. கோடை விடுமுறையைக் கழிக்க, 2730 மீட்டர் உயரத்தில் உள்ள சோனாமார்க் சிறந்த கோடை வாசஸ்தலம்.

இரு நாடுகளுக்கு சொந்தமான சுற்றுலாத் தலங்கள் இந்தியாவில் உள்ள சித்ரகூடம் நகரின் ஒரு பகுதி உத்தர பிரதேசத்திலும் மற்றொரு பகுதி மத்திய பிரதேசத்திலும் உள்ளது.

இதேபோல் உலகில் சில சுற்றுலா இடங்கள் உள்ளன.

நயாகரா நீர் வீழ்ச்சி:

அமெரிக்கா, கனடா எல்லையை ஒட்டியுள்ளன. இங்கு வானவிலா பாலத்தில் பயணித்தால், அதன் மறுமுனையில் கனடா எல்லை துவங்கிவிடும். ஆக, கனடாவையும் ஒரு ரவுண்ட் வரலாம்.

ஹோட்டல் ஆர்பெஸ்:

இரவில் பிரான்ஸில் தூங்கலாம். காலையில் எழுந்தால் சுவிட்சர்லாந்து. இந்த ஹோட்டல் இரு நாடுகளையும் பிரிக்கிறது.

இமயமலை எவரெஸ்ட்:

உலகின் மிக உயரமான மலை. நேபாளம், சீனாவின் சுயாட்சி திபெத்தில் உள்ளது. இதன் உச்சிக்கு நேபாளத்திலிருந்தும், சீன திபெத் பகுதியிலிருந்தும் ஏறலாம்.

பார்லே: பெல்ஜியம், நெதர்லாந்தைப் பிரிக்கிறது. உலகின் மிக சிக்கலான எல்லை என வல்லுநர்கள் வர்ணிக்கின்றனர்.

நீயூ கினியா நகரம்:

உலகின் இரண்டாவது பெரிய தீவான இது பசிபிக் பெருங்கடலில் உள்ளது. கிழக்குப் பகுதி பப்புவா நியூ கினியா. இது ஓசியானாவில் ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ளது. பப்புவா என்பது மலாய மொழியிலிருந்து வந்ததாக இருக்கலாம். இதன் பொருள் 'சுருள் முடி'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.