தமிழ் மேடைத் திருவிழா
பொழுதுபோக்கு அம்சங்கள் அபரிமிதமாகப் பெருகிவிட்ட சூழலில், பழம்பெரும் கலையான நாடகக் கலை நசிந்து வருகிறது.


பொழுதுபோக்கு அம்சங்கள் அபரிமிதமாகப் பெருகிவிட்ட சூழலில், பழம்பெரும் கலையான நாடகக் கலை நசிந்து வருகிறது. எனவே, நாடகக் கலையின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அதனை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் 'உலக நாடகத் தினம்' ஆண்டுதோறும் மார்ச் 27-இல் கொண்டாடப்படுகிறது.
சீனாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருக்கும் 'சர்வதேச நாடக நிறுவனம்' 1961-ஆம் ஆண்டு முதல் இந்தத் தினத்தைக் கொண்டாடுகிறது. உலகமெங்கும் உள்ள நாடக ஆசிரியர்களும், நாடகக் குழுக்களும், ரசிகர்களும் இந்தக் கொண்டாட்டங்களில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர்.
சென்னை மாநகர சபாக்களின் கூட்டமைப்பின் சார்பில், முதல் முறையாக நாரத கானசபா அரங்கில் இந்த ஆண்டு நாடகத் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதில், தமிழ் நாடக உலக முன்னோடிகள் அனைவரது பங்களிப்பையும் நன்றியோடு நினைவு கூறுகிறார்கள்.
ஒரே மேடையில் பன்னிரெண்டு நாடகக் குழுக்கள் சங்கரதாஸ் சுவாமிகள் முதல் சமகால நாடகங்கள் வரை பதினேழு நாடகங்களிலிருந்து தலா ஒரு காட்சியை மேடையேற்ற இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் மறைந்த நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதனின் மகள் மற்றும் நாடக இயக்குநர் தாரிணி கோமலிடம் பேசியபோது:

'தமிழ் நாடகம் என்பது மிகுந்த வரலாற்றுச் சிறப்பு கொண்ட கலைவடிவம். சங்கரதாஸ் சுவாமிகள் 19-ஆம் நூற்றாண்டின் கடைசியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகத்தின் தனிப்பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர், சுமார் 40 நாடகங்கள் எழுதியுள்ள அவரை 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்' என்று சரித்திரம் குறிப்பிடுகிறது. பம்மல் சம்பந்த முதலியாருக்கு 'தமிழ் நாடகத் தந்தை' என்று பெயர். அவர் நாடக நடிகர், நாடக ஆசிரியர், இயக்குநர் என பல பரிமாணங்களைக் கொண்டவர்.
புராண நாடகங்களில் தந்திரக் காட்சிகளை வடிவமைப்பதில் முன்னோடியாகக் கருதப்படுபவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை. அரை நூற்றாண்டுக் காலம் நாடகக் கலைக்குத் தொண்டாற்றியவர் ஒளவை டி.கே.சண்முகம். விஸ்வநாத தாஸ் தனது நாடகங்கள் மூலமாக மக்கள் மத்தியில் தேசப் பற்றை வளர்த்தவர். அதற்காகவே அவரை ஆங்கிலேயே அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
எம்.ஆர். ராதா தனது நாடகங்களில், திரைக்கதையில் எழுதாதவற்றையும், அன்றாட நாட்டு நடப்புகளைக் கவனித்து நாடகங்களில் வசனமாகப் பேசுவார். அதனால்தான் நாடக வசனங்களை முன்னதாகவே காவல் துறையினரிடம் கொடுத்து அனுமதி பெற்ற பின்னரே நாடகங்களை நடத்த வேண்டும் என்ற சட்டமே கொண்டுவரப்பட்டது.
பல்லாண்டுகள் அமலில் அந்தச் சட்டம் நாடக ஆசிரியரும், இயக்குநருமான ஞானியின் முயற்சியால் ரத்தானது.

1970-களிலும், 80-களிலும் ஏராளமான சபாக்களும், நாடகக் குழுக்களும் தமிழ் நாடக ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைத்தன. சமகாலத்திலும் நாடகத்தின்பால் கொண்ட ஆர்வம் காரணமாக பல நாடகக் குழுக்கள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.
இப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட தமிழ் நாடக உலகத்தில் இன்று பிரபலமாக நாடகங்கள் போட்டு கொண்டிருக்கும் குழுக்களின் பங்களிப்போடு, நாடக உலக முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாம் ஏன் சென்னையில் உலக நாடக தினம் கொண்டாடக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது. சென்னை மாநகர சபாக்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளோடு பேசியபோது, அவர்கள் வரவேற்று, அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தனர். உடனே அதற்கான பணிகளைத் துவக்கினேன்.
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகம் தொடங்கி, தற்கால நாடகக் குழுக்களின் நாடகங்கள் வரை பலதரப்பட்ட நாடகங்களின் சாரத்தை ஒரே நிகழ்வில், ஒரே மேடையில் கொடுப்பது என்பது மிகவும் சவாலான காரியம்தான்.
யு.ஏ.ஏ. கிரேஸி கிரியேஷன்ஸ், குருகுலம், அகஸ்டோ, காத்தாடி ராமமூர்த்தி, டம்மீஸ் உட்பட 12 நாடகக் குழுவினர் 17 நாடகங்களிலிருந்து ஒவ்வொரு காட்சியை மேடையிலே அளிக்க இருக்கிறார்கள்.
கோமல் தியேட்டர் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகளின் தெருக்கூத்து, கே.பாலசந்தரின் மேஜர் சந்திரகாந்த், கோமலின் தண்ணீர் தண்ணீர் உள்ளிட்ட நாடகங்களின் காட்சிகளை மீண்டும் நடிக்கிறார்கள்.
எல்லோருடைய நாடகங்களின் காட்சிகளையும் மீண்டும் மேடையில் வழங்குவது என்பது சாத்தியமில்லாத சூழ்நிலையில், என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, சோ, ஆர்.எஸ்.மனோகர், மேஜர் சுந்தரராஜன், விசு, மெரீனா உள்ளிட்ட பலரது பங்களிப்பு, சாதனைகள் குறித்து நாடகக் காட்சிகளுக்கு இடையிலான உரையின்போது குறிப்பிட நினைக்கிறேன்.
ஒவ்வொரு காட்சியும் அதிகபட்சமாக ஏழு நிமிடங்களுக்கு இடம்பெறும். ஒரே மேடையில் அடுத்தடுத்து வெவ்வேறு நாடகங்கள் நடைபெற உள்ளதால் அந்தந்த காட்சிக்குரிய பின்னணி அமைப்புகளை எல்.இ.டி. தொழில்நுட்பத்தின் மூலமாக மேடையில் அளிக்க இருக்கிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு தமிழ் நாடக ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்கிறார் தாரிணி கோமல்.

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்
மூத்த அமெச்சூர் நாடகக் குழு ஒய்.ஜி.பார்த்தசாரதி தொடங்கிய யு.ஏ.ஏ. குழுவின் சார்பில் அரங்கேற்றி, சூப்பர் டூப்பர் வெற்றி கண்ட நாடகம் வெங்கட் எழுதிய 'ரகசியம் பரம ரகசியம்'. அதில் ஒய்.ஜி.பி., ஏ.ஆர்.எஸ். , நான் ஆகிய மூவரும் இடம்பெற்று நடித்த காட்சியை ஜெயச்சந்திரன், ராம்சந்தர்
ஆகிய இருவரோடு நான் மீண்டும் நடிக்கிறேன்.
மாது பாலாஜி
கிரேஸி மோகன் எழுதி நாங்கள் 900 தடவைகளுக்கு மேல் நடித்த கலக்கல் காமெடி நாடகம் 'மீசை ஆனாலும் மனைவி'. 34 ஆண்டுகளுக்கு முன்னால் அது அரங்கேற்றமானது. உலகம் முழுக்க நடத்தி இருக்கும் இந்த நாடகம்தான் 'அவ்வை சண்முகி' படத்தின் முன்னோடி எனலாம். அதில் இருந்து ஒரு சுவாரசியமான காட்சியை நாங்கள் வழங்குகிறோம்.

நாடக ஆசிரியர் அகஸ்டோ
1979-இல் அரங்கேற்றிய 'மர்டர் மிஸ்டிரி' நாடகம் 'இருட்டல்ல நிழல்'. அதன் துவக்கமே அகதா கிறிஸ்டியின் மர்ம நாடகம் போல ஒலி, ஒளி அமைப்பைக் கொண்டிருக்கும். அது 15 நிமிடக் காட்சி. அதை ஏழு நிமிடங்களாகச் சுருக்கி அளிக்க இருக்கிறோம்.
டம்மீஸ் குழுவின் ஸ்ரீவத்சன்
ஒவ்வொரு நாடகக் குழுவும் ஒவ்வொரு வகையான நாடகங்கள் மூலம் ரசிகர்களைக் கவருவார்கள். நாங்கள் அப்படி ஃபார்முலாவில் சிக்கிக் கொள்ளாமல் ஆன்மிகம் தொடங்கி மர்ம நாடகம் வரை பல்வேறு வகையான நாடகங்களை மேடையேற்றி, அந்தப் புதுமைக்காகவே ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றிருக்கிறோம். இந்த உலக நாடக தின விழாவில் பங்கேற்பதை பெருமையாக நினைக்கிறோம்.
எஸ்.வி.சேகர்
இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்கள், அமெரிக்கா முதல் ஜப்பான் வரை ஏராளமான நாடுகளில் போட்டிருக்கும் நாடகம் 'ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி', சோ தன் அரசியல் நையாண்டி நாடகங்கள் போடுவதை நிறுத்திய கால கட்டத்தில், நாங்கள் அரங்கேற்றிய அரசியல் நையாண்டி நாடகம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...