புது ஆறு நிகழ்த்திய புரட்சி!
மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, கல்லணையிலிருந்து "கல்லணைக் கால்வாய்' என்ற புது ஆறு 1925- ஆம் ஆண்டில் வெட்டத் தொடங்கப்பட்டு, 1934-இல் நிறைவுற்று ஆகஸ்ட் 28-இல் திறக்கப்பட்டது.


மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, கல்லணையிலிருந்து "கல்லணைக் கால்வாய்' என்ற புது ஆறு 1925- ஆம் ஆண்டில் வெட்டத் தொடங்கப்பட்டு, 1934-இல் நிறைவுற்று ஆகஸ்ட் 28-இல் திறக்கப்பட்டது. தற்போது புது ஆறுக்கு 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தக் கால்வாயை அன்றைய ஆங்கிலேய அரசின் ராணுவப் பொறியாளரான கர்னல் டபிள்யூ.எம். எல்லிஸ் வடிவமைத்தார். இயற்கையாக அமைந்த ஆறுகள் கடைசியில் கடலில் சென்று கலக்கும். செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஆறு கடைசி வரை விவசாயத்துக்குப் பயன்படும்விதமாக ஏரியில் முடிக்கப்பட்டுள்ளது.
அடிப்படையில் இது ஒரு கால்வாயாக இருந்தாலும், "புது ஆறு' என்றே மக்கள் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு தென் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக, பொருளாதார ரீதியாக மாற்றத்தை இந்த ஆறு ஏற்படுத்தியுள்ளது.
கல்லணைத் தலைப்பில் தொடங்கி பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, தற்போதைய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் ஆகிய வட்டங்களில் ஏறத்தாழ 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் விதமாக 148.76 கி.மீ. தொலைவுக்கு இந்த ஆறு வெட்டப்பட்டது.
மணமேல்குடி அருகேயுள்ள மும்பாலை ஏரியில் முடிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது. இதில், 109 கி.மீ. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும், மீதமுள்ள தொலைவு சுதந்திர இந்திய அரசாலும் வெட்டப்பட்டது. இந்த "ஏ' பிரிவு கால்வாயிலிருந்து பி, சி, டி, இ என வெட்டப்பட்ட 327 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ. ஆகும். இதனால் 694 பாசன ஏரிகளுக்கும் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டது. இதன் வரைபடத்தைப் பார்த்தால் "நரம்பு மண்டலம்' போன்று இருக்கும்.
கல்லணையிலிருந்து பிரியும் மற்ற ஆறுகள் இயற்கையானவை. இந்த ஆறுகளுக்கு முறையான கரையோ, வழித்தடமோ இல்லாததால், பெரு வெள்ளக் காலங்களில் பாதை மாறிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இவற்றில் மழைநீர், கழிவுநீர் கலப்பதும், வெள்ள காலங்களில் கரைகளை உடைத்துக் கொண்டு வெளியேறுவதும் இயல்பானது. இந்த ஆறுகளிலிருந்து கல்லணைக் கால்வாய் முற்றிலும் மாறுபட்டது.
விவசாயத்துக்காக வெட்டப்பட்ட இக்கால்வாயின் வழித்தடத்தில் ஏற்கெனவே ஓடிய வடிகால்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் உருவாக்கப்பட்டது. இந்தக் கால்வாயில் எங்குமே கழிவுநீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்க முடியாத அளவுக்கு குறுக்கே "சைபன்' என்கிற சுரங்கங்கள், மேலே "சூப்பர் பேசேஜஸ்' என்கிற மேல்நிலை கால்வாய்கள், பெரு வெள்ளக் காலத்தில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற தொட்டி பாலங்கள், தண்ணீரின் விசையைச் சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் நீரொழுங்கிகள் போன்ற புதுமைகளும் ஏற்படுத்தப்பட்டன.
பெரு வெள்ளக் காலங்களில் தண்ணீரை எளிதில் வெளியேற்றும் வகையில் இயற்கை இடர்பாடு மீட்பு தத்துவத்துக்கு உதாரணமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த புது ஆறு. இதனால் பாசனப் பொறியியலின் உன்னதமாகவும் போற்றப்படுகிறது.
இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால், பாசனத்துக்காக வெட்டப்பட்ட இந்தச் செயற்கை ஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்கிறது. கடைமடைப்பகுதி வரை தண்ணீர் தடையில்லாமல் செல்லும் விதமாக கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அடி உயரம் கொண்ட நிலப் பகுதிகளை வரைகோடுகள் மூலம் துல்லியமாக இணைத்து அதற்கேற்ப மேடான பகுதிகளை வெட்டி உருவாக்கப்பட்ட சம உயர் கால்வாய் இது. இதனால், இந்த ஆறு தஞ்சாவூர் பெரிய கோயிலை ஒட்டி 30 அடி பள்ளத்திலும், ஒரத்தநாடு அருகே வெட்டிக்காடு பகுதியில் 30 அடி உயரத்திலும் செல்லும்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும், சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதருமான மணிமாறன் கூறியது:
'தஞ்சாவூர் மாவட்டத்தின் வடக்கு பகுதி காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளால் செழிப்பான பூமியாகக் காணப்படுகிறது. அதற்கு நேர் மாறாக தெற்கு பகுதி வறண்ட பூமியாக இருந்தது. இந்தப் பகுதியில் காவிரியிலிருந்து பாசனம் பெறக் கூடிய ஆறுகளோ, வாய்க்கால்களோ இல்லாததே இதற்குக் காரணம். வானம் பார்த்த பூமியாகக் காணப்பட்ட இந்தப் பகுதியில் மழை பெய்யாவிட்டால் விவசாயமே இல்லை என்ற நிலைமை 90 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.
இதனால், சாகுபடி நிலங்கள் ஏராளமாக இருந்தாலும், விவசாயிகள் வறட்சியையே சந்தித்து வந்தனர். இச்சூழ்நிலையில்தான் இப்பகுதியை நன்செய் நிலமாக மாற்றுவதற்கான முயற்சியாக செயற்கை ஆறு உருவாக்கப்பட்டது.
மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயும் வெட்டப்பட்டது. முதலில் இந்தக் கால்வாயைப் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தத் திட்டத்தைச் சில காரணங்களால் தவிர்த்த நிலையில், இதைத் தஞ்சாவூர் வழியாகக் கொண்டு செல்ல அப்போதைய திவான்பகதூர் சர். சி.பி. ராமசாமி அய்யர் பெருமுயற்சி மேற்கொண்டார்.
இந்த நீர் வழித்தடத்தில் பூதலூரிலிருந்து தஞ்சாவூர் பெரியகோயில் வரை ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவுக்கு பாறை இருந்தது. இதற்காக லண்டனிலிருந்து தலா ரூ. 1 லட்சம் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்ட இரு இயந்திரங்களின் உதவியுடன் பாறைகளை உடைத்து, இந்தக் கால்வாய் வெட்டப்பட்டது. இக்கால்வாயை வெட்டுவதற்கு அக்காலத்தில் மொத்தம் ரூ. 4.50 கோடி செலவானது'' என்கிறார் மணி.மாறன்.
இதுகுறித்து பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் ஓய்வு பெற்ற பொருளாதாரத் துறைப் பேராசிரியர் ஆர். பழனிவேலு கூறியது:
'வானம் பார்த்த பூமியாக இருந்த இப்பகுதியில் சோளம், கேழ்வரகு போன்றவைதான் முதன்மையான உணவாக இருந்தது. இந்தப் புது ஆறு வந்த பிறகுதான் நெற்பயிர் பயிரிடும் பழக்கம் உருவானது. இதனால் அரிசி சோறு சாப்பிடும் வழக்கத்துக்கு வந்தது. காட்டாறுகளைத் தவிர வேறெந்த பாசன ஆறுகளும் இல்லாத இப்பகுதியில் பெரும்பாலும் மேடும், பள்ளமாகவும், சவுக்கு, முந்திரி காடுகள் நிறைந்ததாகவும் காணப்பட்டது. தற்போது முப்போகம் விளையும் பூமியாக மாறிவிட்டது.
மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்த இந்தப் பகுதியில் வடக்குப் பகுதியிலுள்ளவர்கள் இங்கு பெண் கொடுக்கவும், பெண் எடுக்கவும் தயங்கிய காலம் இருந்தது. அந்த நிலைமையை மாற்றி கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றிய சமூகமாக மாற்றியது இந்தப் புது ஆறுதான். சமூக, பொருளாதாரத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இந்த ஆறு மட்டும் வெட்டப்படாமல் இருந்தால், இப்பகுதி மேலும் பின் தங்கிய பகுதியாக மாறியிருக்கும்'' என்கிறார் பழனிவேலு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...