/

தமிழகத்தின் முதல் பெண் முதல்வர்

'தமிழகத்தின் முதல் பெண் முதல்வர்' என்ற பெருமையைப் பெற்றவர் வி.என்.ஜானகி என்கிற ஜானகி எம்.ஜி.ராமசந்திரன்.

News image
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் - ஜானகி எம்.ஜி.ராமசந்திரன்
Updated On :1 டிசம்பர் 2024, 3:19 am

முனைவா் வைகைச்செல்வன்

'தமிழகத்தின் முதல் பெண் முதல்வர்' என்ற பெருமையைப் பெற்றவர் வி.என்.ஜானகி என்கிற ஜானகி எம்.ஜி.ராமசந்திரன். ஒரு மாதம் கூடத் தாண்ட முடியாத அமைச்சரவையாக அவரது அமைச்சரவை இருந்தாலும், வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைத் தக்க வைத்திருக்கிறார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர அரசியல் களத்தில் ஆரம்ப நாள்களில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்த அவர், பங்கேற்பாளராக மாறி முதல் ஆளாக நின்றது காலத்தின் கட்டாயம். அவருக்கு அரசியலும், அதிகாரமும் ஒரு புதிய அனுபவம் என்றாலும், நாகரிகமாகவே எதிரணியை அணுகினார். அவர் எம்.ஜி.ஆரோடு அரசியல் களத்திலும், அதிகாரத்திலும் தொட்டுவிடும் இடத்தில் இருந்தாலும், தூர இருந்து மட்டுமே பார்க்கக் கூடியவராகத் தன்னை வைத்திருந்தார். பல கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்பதில், ஜானகி

யோடு நிறைய உரையாடல்கள் எம்ஜிஆருக்கு இருந்தாலும், அந்த அனுபவத்தைப் பெற்றிருந்தாலும் களத்தில் நிற்கிறபோது அவருக்கு அது ஒரு புதிய அனுபவமாகவே இருந்திருக்கிறது.

தனது கணவரின் உழைப்பாலும், போராட்டங்களினாலும் உருவான கட்சி சிதைந்து தகர்ந்து போவதில் ஜானகிக்கு விருப்பம் இல்லை. இந்த எண்ணங்கள் மனதில் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் 1989-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வந்துவிட்டது. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த கட்சி 'ஜானகி அணி' என்றும், 'ஜெ.ஜெயலலிதா அணி' என்றும் இரண்டு அணிகளாகப் பிரிந்து தேர்தல் களத்தில் நின்றன. 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணி 27 தொகுதிகளில் வென்றது. ஜானகி அணியில் பி.ஹெச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார்.

'தொடர் வெற்றிகளைக் குவித்த அதிமுக' என்கிற ஒரு கட்சி காணாமல் போவதை விரும்பாத ஜானகி, கெளரவமாக அரசியலில் இருந்து விலக முடிவெடுத்தார். தனது அணியையும், கட்சி அலுவலகத்தையும் முறைப்படி ஒப்படைத்து விட்டு, அரசியலில் இருந்து ஒதுங்கினார். அரசியல் களத்தில் ஒரு தெளிவு பிறந்தது. ஒன்றுபட்ட 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' உருவானது. எம்.ஜி.ஆரிடம் தான் கற்றுக் கொண்ட தாய்மைப் பாசத்தையும், தலைமைப் பண்பையும் மிக அற்புதமாகக் கையாண்டார் ஜானகி.

ஒன்றுபட்ட அஇஅதிமுகவுக்காக இரட்டை இலைச் சின்னத்தையும், தன்னுடைய பெயரில் இருந்த தலைமைக் கழகத்தையும் ஒப்படைத்த பெரும் தியாகத்தையும் எளிதில் மறந்து கடந்து போய் விட முடியாது. அவருடைய இந்த நூற்றாண்டு விழா பொழுதில் அதை நினைத்துப் பார்க்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.

'இருட்டு கவ்விக் கிடக்கிற போது ஒரு சிறிய வெளிச்சம் பற்றிப் படராதா?' என்று எல்லோருடைய மனதும் ஏங்கித் தவிக்கும். அப்படி ஒரு விளக்காக வெளிச்சத்தைத் தந்தவர்தான் ஜானகி.

கீழே இருந்து கண்டெடுத்த ரூபாய், நம் சட்டப்பையில் உள்ள பணத்தைவிட அரிதாகத் தென்படக் காரணம், அதன் மீதான கூடுதல் கவனமேயாகும். அப்படி நாம் தவறவிட்டதையும், கண்டெடுக்க வேண்டியதையும், நினைவுறுத்தப்பட வேண்டியதையும், மீட்டுருவாக்கத்துக்கு உள்ளாக்கப்படக் கூடியதையும் காலத்தின் அவசியமாகப் பார்க்கப்பட வேண்டும்.

ஏனென்றால், அதிகாரப் பசி கொண்டவர்களின் மனம், அதிகாரத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதையும் விட்டுக் கொடுப்பதையும், ஒத்துக் கொள்வதில்லை. ஆனால், ஜானகியுடைய தியாகம் என்பது தன்னைக் கரைத்துகொண்டு அல்லது தன்னையே வெளிச்சமாக்கிக் கொண்டு, இருண்ட உலகத்துக்கு வெளிச்சத்தைத் தருவதைப் போன்றது. ஆகவேதான், இன்று புகழுக்குரியவராக இருக்கிறார். ஏனென்றால், பெறுவதை விடக் கொடுப்பது உயர்ந்ததன்றோ!

வார்த்தைகள் என்பது வெறும் பரிமாற்றம் மட்டும் அல்ல; அது நாம் இன்னொருவரை எப்படி நேசிக்கிறோம் என்பதற்கு சாட்சியாகத் திகழ்கிறது. ஒரு வகையில் வார்த்தைகள் என்பது மனதின் குரல். எல்லையில்லாத அன்பை அது வெளிப்படுத்தி விடும். ஆகவேதான், மனிதர்களுடைய கண்டுபிடிப்புகளில் மகத்தானது சொற்களாக இருக்கிறது. அது விதைகளைப் போன்றது. விளைநிலத்தில் விதைக்கப்படும்போது, வளர்ந்து செழிப்பதோடு இன்னொரு விதையாகவும் மாறுகிறது. சொல்லை விதையாக்குவதும், வீணாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது.

எம்.ஜி.ஆர். என்கிற விதை ஊன்றிப் பற்றிப் படர்ந்து வானம் தொட்டு நிற்பதற்கு அவரின் மனிதநேயப் பண்புக்கும், மானுடப்பற்றுக்கும், கருணைக்கும், காருண்யத்துக்கும் கிஞ்சிற்றும் இடையூறு ஏற்படாத வண்ணம் தாய்மைப் பாசத்தை இணைத்து குழைத்து தந்தவர் ஜானகி. ஒருவருடைய வளர்ச்சி, சுற்றி உள்ளவர்களுடைய அரவணைப்பிலும், அவர்கள் காட்டுகிற பாசத்திலும், எல்லையில்லாத உற்சாகத்திலும், தளராத முயற்சியினாலும்தான் ஏற்படுகிறது. ஜானகியுடைய வரலாறு மிக எளிதானதாக அவர் பெறவில்லை.

கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பாலக்காடு அருகே உள்ள வைக்கத்தில் 1923 நவம்பர் 30-இல் பிறந்தார். கர்நாடக இசை உலகில் புகழ்வாய்ந்த பாடலாசிரியரான பாபநாசம் சிவனின் தம்பி ராஜகோபால ஐயரின் மகள்தான் ஜானகி. வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கம்தான் வி.என். ஜானகி.

சரியான வாய்ப்பு கிடைக்காமல் நின்றிருந்த போதுதான், 'மெட்ராஸ் மெயில்' என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்பு பாடலாசிரியரான ராஜகோபாலுக்குக் கிடைத்தது. வாய்ப்புகளைத் தக்க வைக்க உறவினர்களின் அறிவுரையின்படி 1936-இல் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து குடியேறினார்.

கலைக்குடும்பம் என்பதால் இயல்பாகவே பாடல், நடனம் இவற்றில் ஈர்ப்புக் கொண்டிருந்த ஜானகிக்கு சென்னை வாழ்க்கை திசைமாற்றத்தை ஏற்படுத்தியது. படிப்பதுடன் தனக்குப் பிடித்தமான பாடலுக்கு நடனம் இவற்றில் அவர் தீவிரக் கவனம் செலுத்தினார். முறையாக அவற்றைக் கற்று தேர்ச்சியும் பெற்றார். குடும்ப நண்பரான பிரபல இயக்குநர் கே.சுப்ரமணியம் நடத்தி வந்த 'நடனகலா சேவா' என்னும் நாட்டியக் குழுவில் இணைந்து நடித்து வந்தார்.

இந்தியா முழுவதும் பல நகரங்களில் இந்தக் குழு நாட்டிய நாடகங்களை நடத்தி வந்தது. நடனகலா சேவா குழுவின் நாடகங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகம் 'வள்ளி திருமணம்'. இதில் முருகன் வேடத்தில் ஜானகி நடித்தார். இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் துணைவியார் எஸ்.டி.சுப்புலட்சுமி வள்ளியாக நடித்தார். ரசிர்கர்களின் ஏகோபித்த வரவேற்பு ஜானகிக்குக் கிடைத்தது.

நாடகத் துறையில் கிடைத்த பிரபலத்தால், ஜானகியை சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. கே.சுப்ரமணியத்தின் 'மோஷன் பிக்ஷர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம், 'இன்பசாகரன்' என்ற கதையைத் திரைப்படமாகத் தயாரித்தது. படத்தை இயக்கிய கே.சுப்ரமணியம் வி.என்.ஜானகியை இதில் அறிமுகப்படுத்தினார்.

ஜானகிக்கு அப்போது வயது பதிமூன்று. துரதிருஷ்டவசமாக ஸ்டுடீயோ முற்றிலும் தீப்பிடித்து எரிந்து படத்தின் மொத்த நெகட்டிவ்களும் எரிந்து சாம்பலானது. அதன்பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. 'சகடயோகம்' என்ற திரைப்படத்தில்தான் முதன்முதலில் கதையின் நாயகியாக முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். 'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்ற திரைப்படம் ஜானகிக்கு பெயரும், பெரும் புகழும் பெற்றுத் தந்தது. இது ரசிகர்களால் பெரிதும் பேசப்படும் திரைப்படமாகத் திகழ்ந்தது.

புகழ்வாய்ந்த நடிகையாக ஜானகி இருந்த நிலையில், எம்.ஜி.ஆரை விரும்பினார். 'மருநாட்டு இளவரசி' படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜானகி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணையானார். அதன் பின்னர் ராமாபுரம் தோட்டத்துக்கு குடியேறிய பின்னர், எம்.ஜி.ஆரின் திரை, அரசியல் வாழ்வில் ஜானகிக்குப் பெரும் பங்கு உண்டு.

ஜானகியை 'ஜானு' என்று எம்.ஜி.ஆர். நெஞ்சுருக அழைப்பார். சமையலில் கை தேர்ந்தவரான ஜானகியின் கைப்பக்குவத்துக்கு எம்.ஜி.ஆர். தீவிர ரசிகராகிவிட்டார். கணவரின் உதவும் குணத்துக்கு ஒருபோதும் தடை போடாத குணமும், பிறர் மீது கணவர் கோபித்துகொள்கிறபோது அவர்களைச் சமாதானப்படுத்துகிற பெரும் பங்கும் ஜானகிக்கு இருந்தது.

புகழ்பெற்ற நடிகரின் மனைவி, பின்னாளில் முதல்வர் மனைவி என்றாலும் வீட்டில் இல்லத்தைப் பேணி காக்கும் பெண்மணி போலத்தான் இருப்பார். எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்குப் பெரும் பக்கபலமாக இருந்தார். அவர் கையால் சோறுண்டவர்கள் அண்ணா முதற்கொண்டு எத்தனையோ அரசியல் ஆளுமைகளைச் சொல்லலாம்.

எம்.ஜி.ஆரின் கைகள் கொடுத்துச் சிவந்தவை. உண்மையில் ஜானகியையும் அப்படியே குறிப்பிடலாம். பொது இடங்களில் தன் கைகளில் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும், வீட்டில் உதவி கேட்டு வருவோர், திருமணப் பரிசுகள் போன்றவற்றை மனைவி ஜானகியின் கையால்தான் எம்.ஜி.ஆர். கொடுக்கச் செய்வார்.

ராமாபுரம் தோட்டத்தில் எப்போதும் சமையல் அடுப்பு எரிந்த வண்ணம் இருக்கும். ஏழை, எளியோரானாலும், உயர்பொறுப்பில் இருப்பவர்களானாலும் உண்ணாமல் அனுப்ப மாட்டார்கள் எம்.ஜி.ஆரும், ஜானகியும்! முதல்வரானவுடன் எம்.ஜிஆர். அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் மனைவி ஜானகிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. ஜானகியும் அதை விரும்பியதில்லை. ஆனால், காலத்தின் கட்டாயம் 24 நாள்கள் முதல்வராகத் தொடர்ந்தார் என்பதில் அவர் வரலாறாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

(நவ.30- வி.என். ஜானகி ராமசந்திரன் நூற்றாண்டு பிறந்த தினம்)

எம்.ஜி.ஆரை போன்ற கொடைத்தன்மை கொண்டவர்...

-எம்.ஜி.ஆரை போல் கொடைத்தன்மையைக் கொண்டவர் வி.என்.ஜானகி. அவர் தியாகத் தலைவி'' என்கிறார் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம்.

ஜானகி எம்.ஜி.ஆரின் நினைவுகள் குறித்து சண்முகத்திடம் கேட்டபோது:

''எம்.ஜி.ஆரின் வள்ளல்தன்மையைக் கொண்டவர் ஜானகி. எம்.ஜி.ஆரை ஜானகி, 'ஐயா' என்றே அழைப்பார். கட்சியினர் நாங்கள் எம்ஜி.ஆரை. 'அண்ணா' என்றும் ஜானகியை 'அண்ணி' என்றும் அழைப்போம்.

அவசர நிமித்தமாக, கட்சியினர் யார் சென்று உதவி கேட்டாலும் எம்.ஜி.ஆர். மனம் கோணாமல் அள்ளிக் கொடுப்பார். அவரைப் பார்த்துவிட்டு, ஜானகி அம்மாவிடம் சென்றாலும் அவரும் மனம் கோணாமல் கொடுப்பார். இருவரும் வாரி வழங்கிய வள்ளல்கள். அந்தக் காலத்திலேயே ஐம்பதாயிரம் ரூபாய் வரை ஒவ்வொருவரும் சாதாரணமாகவே அளிப்பார்கள்.

வீட்டுக்கு எப்போது போனாலும், 'சாப்பிட்டு போங்கள்' என்று சாப்பிட வைத்தே அனுப்புவார் ஜானகி. ராமாபுரம் தோட்டத்து வீட்டு டைனிங் ஹாலில் பதினைந்து பேர் வரை ஒருசேர சாப்பிடலாம்.

ஆரணி எம்எல்ஏவாக நான் இருந்தபோது, எனது திருமண நிச்சயதார்த்தம் சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடைபெற்றது. தொடக்கத்தின்போது வந்த ஜானகி, நிகழ்ச்சி நிறைவுபெறும் வரை இருந்து உணவு அருந்திவிட்டே சென்றார். ஆரணியில் நடைபெற்ற எனது திருமணத்தை நடத்திவைத்த முதல்வர் எம்.ஜி.ஆர்., 'ஜானகியின் தீவிர விசுவாசி சண்முகம்' என்று பாராட்டியதை நான் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

எம்.ஜி.ஆர். மறைவுற்றபோது, இறுதிச் சடங்காக சந்தன கட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய வெண்கலப் பாத்திரத்தை என்னை சுமந்துவரக் கட்டளையிட்டார் ஜானகி. 13 கி.மீ. தொலைவுக்கு அந்தப் பாத்திரத்தைச் சுமந்து வந்த பாக்கியம் கிடைத்தது பெரும் பேறு.

எம்.ஜி.ஆர். இறந்தவுடன் முதல்வரான ஜானகி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 'நலத்திட்டங்கள் தடையின்றி மக்களுக்குத் தொடர வேண்டும்' என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.

அதிமுக உடைந்து, சட்டப் பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தபோது, ஜானகி புதுதில்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியை சந்தித்து ஆதரவு கோரினார். 'எம்.ஜி.ஆர். உருவாக்கிய ஆட்சியைக் கலைக்க அனுமதிக்க மாட்டோம்' என ராஜீவ் காந்தி சொன்னார். அவர் ஆதரவளித்திருந்தால், ஜானகி முதல்வராக நீடித்திருப்பார். அவரது தலைமையில் நல்லாட்சி மலர்ந்து, அவருடைய ஆட்சித்திறன் வெளிப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆருக்கு ஐநூறு கோயில்கள் உருவாகியிருக்கும்.

தேர்தலில் ஜானகி அணி தோல்வியுற்றவுடன் அடுத்த விநாடியே கட்சி நிர்வாகிகளுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தோட்டத்துக்கு வரவழைத்து, 'ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைக்கப் போகிறேன். எனது பெயரில் இருக்கும் அலுவலகத்தையும் அளிக்கிறேன்' என்று கூறினார். இப்படிப்பட்ட தியாகத் தலைவி அவர்'' என்கிறார் சண்முகம்.

அவர் பேசும்போது, வார்த்தைக்கு வார்த்தை ஜானகியை 'அம்மா', 'அண்ணி' என்று நெகிழ்ந்துப் பேசியதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

வீட்டுக்கு வந்தவர்களை சாப்பிட வைக்காமல் அனுப்ப மாட்டார்...

''தனது வீட்டுக்கு வந்தவர்களைச் சாப்பிட வைக்காமல் அனுப்ப மாட்டார்'' என்கிறார் சென்னை ஆர்.எம்.கே. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம்.

அவரிடம் கேட்டபோது:

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். சென்னை அண்ணா சாலையில் ஆபட்ஸ்பரி மாளிகையில் (தற்போதைய ஹயாத் ஹோட்டல்) எனது உறவினர் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதற்கு அழைப்பு விடுக்க, ராமாபுரம் தோட்டத்துக்கு எனது மனைவியுடன் சென்றிருந்தேன். அப்போது, 'உடல்

நலக் குறைவால் முதல்வர் யாரையும் சந்திக்க விரும்பவில்லை' என உதவியாளர்கள் கூறினர். பின்னர், அங்கிருந்து நான் கிளம்பி கேட் அருகே வந்தபோது, உதவியாளர் ஓடி வந்து, '' உள்ளே வாங்க? 'யார் வந்து சென்றது' என்று முதல்வர் கேட்டார். 'மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வந்திருந்தார்' என்றோம். 'உடனே வரச்சொல்லுங்கள்' என்று கூறினார். வீட்டினுள் சென்றோம்.

அப்போது ஜானகி அம்மா வீட்டின் கீழிருந்து வந்து மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு எம்.ஜி.ஆர். அமர்ந்திருந்தார். அழைப்பிதழை அளித்தேன். பெற்றுகொண்டார். உடனே ஜானகி அம்மா, ''நீங்கள் இருவரும் சாப்பிட்டுவிட்டுதான் செல்ல வேண்டும்'' என்று அன்போடு கூறினார். அதன்படியே இருவரும் சாப்பிட்டுவிட்டு, அம்மாவிடம் சந்தித்து வாழ்த்துப் பெற்று திரும்பினோம். திருமண விழாவில் எம்.ஜி.ஆர். பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

தலைவரைப் பார்க்கும்போதெல்லாம் அவருடன்தான் தகவல் பரிமாற்றம். ஜானகி அம்மா அருகில் இருப்பார். எங்களது உரையாடலைக் கவனிப்பார். பேச மாட்டார்'' என்றார் முனிரத்தினம்.

- தி நந்தகுமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.