/

நடனத்துக்கு இடையே ஓவியம்...

சென்னை லலித் கலா அகாதெமியில் 'லோக்கல் 24' கண்காட்சி பெரிதும் கவர்ந்தது

News image
Updated On :22 ஜூன் 2024, 6:30 pm

எஸ். சந்திரமெளலி

முழுக்க, முழுக்க நம்ம ஊர் விஷயங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், ஃபேஷன் ஆடைகள் ... என சென்னை லலித் கலா அகாதெமியில் அண்மையில் நடைபெற்ற "லோக்கல் 24' என்ற கண்காட்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இவற்றைப் படைத்த இளைய தலைமுறையினர் "மைஷா ஸ்டூடியோ' என்ற டிசைனிங் பள்ளியின் மாணவர்கள். இவர்களுடைய திறமையை மேம்படுத்தி பயிற்சி அளித்து வரும் ஐஸ்வர்யா மணிவண்ணனுடன் பேசியபோது:

""நான் சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பும், சிங்கப்பூரில் முதுகலைப் பட்டப் படிப்பும் முடித்தேன். இன்டீரியர் டிசைனிங் துறையில் பணியாற்றுகிறேன்.

எனது மைஷா ஸ்டூடியோ மூலமாக, இளைய தலைமுறையினருக்கு ஓவியம், சிற்பம், புகைப்படக் கலை உள்ளிட்ட கலைகளைக் கற்றுக் கொடுக்கிறேன். வழக்கமான ஓவியக் கல்லூரிகள் போல குறிப்பிட்ட கால அளவுக்கு பாடத் திட்டங்களை வகுத்து, பயிற்சி வகுப்புகளை நடத்துவது இல்லை.

ஒவ்வொருவரது ஆர்வமும், திறமையும், ஈடுபாடும் மாறுபட்டது. ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தைத் தேவைகள் மாறுபடுகின்றன. எனவே, ஒவ்வொருவருக்கும் எதில் ஆர்வம் என்பதற்கேற்ப, எங்கிருந்து தொடங்குவது?, என்னென்ன சொல்லித் தருவது என்று தனித்தனியாக நிர்ணயித்து, அவரவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். எட்டு வருடங்களாக மாணவர்களாக இருப்பவர்கள் கூட இருக்கின்றனர்.

கற்றுக் கொடுப்பதோடு எனது பணி நின்றுவிடவில்லை. அவர்களுக்குத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறேன். விமர்சனங்களும், தாக்கங்

களும் ஒரு படைப்பாளிக்கு முக்கியம். ஆகவேதான், எனது மாணவர்களுடைய ஓவியங்கள், இதர படைப்புகளைக் காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைக் கொடுத்து, அந்தத் தளத்தில் அவர்களின் கற்பனைக்கு ஏற்ப படைப்புகளை உருவாக்கி கண்காட்சிகளை நடத்துகிறேன்.

கடந்த முறை நடத்திய "வெண்மை' என்ற கருப்பொருளில் நடத்திய கண்காட்சியில், கற்பனைக்கு எட்டாத வகையில் அற்புதமான விஷயங்களை எனது மாணவர்கள் உருவாக்கி பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றனர்.

இந்தாண்டு ஐந்தாவது கண்காட்சியாக "லோக்கல் 24' என்ற தலைப்பில் நடத்தினேன். அவரவர் தங்கள் வாழும் பகுதிகளில் வெகு சகஜமாக காண்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, அதிலே கற்பனையைப் புகுத்தி ஒரு கலைப்படைப்பை உருவாக்கி கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.

இந்தக் கண்காட்சியில் சிலர் தங்களைச் சுற்றி காணும் சில விஷயங்களை ஓவியங்களாக வரைந்திருந்தனர். உதாரணமாக , டாஸ்மாக் மதுக்கடையின் முன் வரிசையில் நிற்கும் மனிதர்கள், கோழிச்சண்டை, தெருவோர வியாபாரிகள், கோயில் கோபுரத்தில் கடவுள் உருவங்களுக்குப் பதிலாக அன்றாடம் நாம் காணும் சாமானிய மனிதர்கள்.. என்று பல வகைகளில் கலைப்படைப்புகள்.

சமூகத்தில் எந்த அளவுக்கு கைப்பேசியில் தொடங்கி பல்வேறு மின்னணு சாதனங்களும் தவிர்க்க முடியாதவைகளாக விளங்குகின்றன என்பதை விளக்கும் ஓர் உலோகச் சிற்பமானது பெரிதும் கவர்ந்தது. ஒரு வாழை இலையில் உணவுப் பொருள்களுக்குப் பதிலாக மின்னணு சாதனங்களும், அவற்றின் பாகங்களும் இடம்பெற்றுள்ளன. இன்றைய யதார்த்தத்தை முகத்தில் அறைந்தாற்போலச் சொல்லும் சிற்பம் அது. புகைப்படக் கலையில் ஆவம் கொண்ட ஒருவர் வட சென்னையில் உள்ள காசிமேடு பகுதியில் சுற்றிச் சுற்றி புகைப்படங்கள் எடுத்து, அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு ஆல்பத்தைப் பார்வைக்கு வைத்திருந்தார்.

இந்தக் கண்காட்சிக்கு இன்னும் சில சிறப்புகளும் உண்டு. கிராமிய நடனம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்போது, அதனை இரண்டு ஓவியர்கள் ஓவியமாக வரைய, பார்வையாளர்கள் நடனத்தையும், ஓவியத்தையும் ஒரு சேரக் கண்டு ரசித்தனர்.

இந்தக் கண்காட்சி தொடங்குவதற்கு முந்தைய தினம், மாற்றுத் திறனாளி சிறுவர்களும், சிறுமிகளும் பிரத்யேகமாக அழைத்துவரப்பட்டு ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர், ""எனக்கு படம் வரைவதில் ஆர்வம் உண்டு. ஓவியக் கண்காட்சிகள் குறித்த செய்திகளைப் படிக்கும்போது, அங்கு சென்று ரசிக்க வேண்டும் என ஆசைப்படுவேன். இப்போது ரொம்ப சந்தோஷம்' என்று கூறியபோது ரொம்பவும் மகிழ்ந்தோம். இனியும் தொடரும்' என்கிறார் ஐஸ்வர்யா மணிவண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.