திருக்குறளை வீடுகள்தோறும், வீதிகள்தோறும், ஊர்கள்தோறும் கொண்டு செல்வதுடன், புதுவையையே திருக்குறள் மாநிலமாக்கும் முயற்சியை மேற்கொண்டுவருகிறார் தொன்னூறு வயதைக் கடந்த தமிழ் ஆர்வலரும், 'புதுமம்' அமைப்பின் தலைவருமான சுந்தர லட்சுமிநாராயணன்.
''வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்
புகழ் கொண்ட தமிழ்நாடு' என்றார் மகாகவி பாரதியார். உலகில் உள்ள இலக்கியங்களில் சிறந்த இலக்கியம் திருக்குறள். நாடு, மொழி, மதம் என அனைத்து நிலைகளையும் தாண்டி மனிதநேயம், அறவாழ்வு என வாழ்வில் அடித்தளத்தை மனிதர்களுக்கு உணர்த்தும் மகத்தான இலக்கியம்தான் திருக்குறள்.
சங்கக் காலம் முதல் அறிவியல் வளர்ச்சி உச்சம் பெற்ற தற்காலம் வரையில் திருக்குறளால் தமிழும், தமிழரும் பெருமைப்படும் நிலையில், வெளிநாட்டு மொழிகளில் நூலாக்குவது, அறிவியல்ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்துவது என பல வகைகளிலும் பலரும் தொண்டாற்றி வருகின்றனர். இவர்களைவிட புதுச்சேரியில் சிறப்பான வகையில் தொண்டாற்றி வரும் சுந்தர லட்சுமிநாராயணனிடம் பேசியபோது:
''புதுச்சேரியில் கம்பன் விழா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது.
2011- ஆம் ஆண்டில் புதுச்சேரியில் இலக்கிய விழாவுக்கு வந்திருந்த தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், தனது பேச்சில், 'கம்பனுக்கு விழா எடுக்கும் புதுச்சேரியில் திருக்குறளை இளந்தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் விழா நடக்கவில்லை' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவரது பேச்சு எனக்கு நெருடலை ஏற்படுத்தியது. அதனடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் 'புதுவை திருக்குறள் மன்றம்'. அதைத்தான் சுருக்கமாக 'புதுமம்' என அழைக்கிறோம்.
இல்லங்கள்தோறும் திருக்குறள் ஒலிக்கவும், வீதிகள்தோறும் திருக்குறள் எழுதப்படவும், ஊர்கள்தோறும் திருக்குறள் விழா நடக்கவும், புதுவை மாநிலமே திருக்குறள் மாநிலமாக அழைக்கப்படவும் அமைக்கப்பட்டதே 'புதுமம்' அமைப்பாகும்.
அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 175 வாழ்நாள் உறுப்பினர்களின் வாயிலாக, திருக்குறள் முற்றோதலை நடத்திவருகிறோம். குழந்தைகள் பிறந்த நாள் உள்ளிட்ட விசேஷ நாள்களில் விரும்பும் தமிழன்பர்கள் இல்லங்களில் புதுமம் அமைப்பினர் திருக்குறளை முற்றோதலைச் செய்துவருகின்றனர். இதுவரை சுமார் 250 வீடுகளுக்கும் மேலாக திருக்குறள் முற்றோதல் நடத்தப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் நடைபெறும் திருக்குறள் முற்றோதலில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டுவருவது மகிழ்ச்சியாக உள்ளது.
பத்து ஆயிரம் குழந்தைகளுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆச்சார்யா, புதுமம் இணைந்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை அடிப்படையாக வைத்து நடனம், ஓவியம், பேச்சு, ஒப்புவித்தல், கட்டுரை உள்ளிட்ட கலைப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆதித்யா வித்யாஸ்ரத்துடன் இணைந்து ஆசிரியர்களுக்கான திருக்குறள் போட்டிகளை நடத்திவருகிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மூகாம்பிகை நகர், நயினார் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகளில் வந்தாரை வரவேற்கும் வகையில் முகப்பில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளன.
சாரம் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடச் சுவர்களில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளன. அதே பள்ளியில் திருவள்ளுவரின் மார்பளவுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
புதுமம் திருக்குறள் நிகழ்ச்சிக்கு குன்றக்குடி அடிகளார், தமிழறிஞர்கள் அவ்வை நடராஜன், சத்தியசீலன், க.ப.அறவாணன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் என தமிழாய்ந்தோர் பலரும் வந்து சிறப்புச் செய்துள்ளனர். ஓரிரு நாள்கள் நடைபெறும் புதுமம் விழாவை பல நாள்கள் தொடர்ந்து நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதன்படி திருக்குறளை புதுவையின் அடையாளத் திருவிழாவாக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளோம்.
திருக்குறளுக்கான விழாக்களை எதிர்காலத்தில் விரிவுபடுத்துவதுடன், பல நாள்கள் விழாவாகவும் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தில் புதுமம் விழாவும் தமிழ் ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
புதுவை மாநிலத்தையே திருக்குறள் மாநிலம் என அறிவிக்கும் திட்டத்தையும் முன்மொழிந்துள்ளோம். அதனையடுத்தே திருக்குறளைத் தேசிய நூலாக அறிவித்திட வலியுறுத்தி,
2023- ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் தனித்தீர்மானமும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்
பட்டுள்ளது. ஆகவே, புதுவையை திருக்குறள் மாநிலமாக்கும் எங்களது திட்டத்தை அனைத்து அரசியல் கட்சியினர், அரசுத் துறையினர், தமிழ் ஆர்வலர்கள் நிச்சயம் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மகாகவி பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன் என பலரும் வாழ்ந்து பெருமையுற்ற புதுவை மண்ணை திருக்குறள் மாநிலமாக மாற்றுவதே அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக அமையும்'' என்கிறார் சுந்தர லட்சுமிநாராயணன்.
'எங்கெங்கு காணினும் சக்தியடா.' என்ற மகாகவி பாரதியின் வாக்குக்கேற்ப யாரைப் பார்த்தாலும், எவரிடம் பேசினாலும் திருக்குறள் குறித்த கருத்துகளைப் பரிமாறிவரும் சுந்தர லட்சுமி நாராயணனின் கனவு நனவாக வேண்டும்.
படங்கள்- கி.ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

இடைக்கால பட்ஜெட் பொருளாதாரத்தில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு செல்லும்

சுந்தர நாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

திருக்குறளின் நோக்கமே அறன் வலியுறுத்தல்தான்: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

