சாமானின்யர்களின் அன்பு... இதுதான் "தோனிமா' படத்தின் ஒன் லைன். இரண்டே வார்த்தைகளில் கதையின் பேசுப் பொருள் பேசி அமர்கிறார் ஜெகதீசன் சுப்பு. "சிகை', "பக்ரீத்' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர்.
கதையின் உள்ளடக்கம் எப்படி இருக்கும்...
காளி வெங்கட், ரோஷ்னி பிரகாஷ் இந்த இரண்டு பேருக்குமான காதலும், அன்பும்தான் படம். வாழ்க்கையை ரசனையாக, அதன் போக்கில் காமெடியாக, உற்சாகமாகவே வாழ்கிறவன்...காளி வெங்கட். வசதி வாய்ப்பு, பெரும் தேடல்கள் என எதுவும் இல்லாத மனசுக்காரன். எந்த பிரமிப்பும் ஏக்கமும் அவனுக்கு இல்லை. யார் குறித்த அச்சமும் இல்லை.
வாழ்க்கைப் பற்றிய குழப்பமோ, சிக்கலோ இல்லை. மிக எளிமையாக இந்த வாழ்க்கையை அணுகுகிறான். அவன் மீது கொண்ட அன்பு மட்டுமே இந்த வாழ்வின் நிரந்தரம் என்ற மனப்பக்குவம் கொண்ட மனுஷி ரோஷ்னி பிரகாஷ். இந்த இரண்டு பேருக்கும் அவர்களின் காதல்தான் உலகம். வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன்போடும் கொண்டாடுபவர்களுக்கு ஒரு பிரச்னை. அதன் தீர்வும், அதற்கான நிகழ்வுகளும்தான் கதை.
இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை எதுவும் இல்லாத ஒரு எளிய வாழ்க்கைதான் படம். அழகு, நிறம், பணம் என தினம் தினம் எழுந்து வருகிற அத்தனை அபத்தங்களையும் அடிச்சு நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன் வைக்கிற காதல். எதையும் அடைந்து விட வேண்டும் என்கிற வெறி இல்லை. யாரையும் புறந்தள்ளி விடுகிற, கவிழ்த்து விடுகிற எத்தனிப்பு இல்லை. இப்படி ஒரு மனம் வாய்த்து விட்டால் அதை விடக் கொடுப்பினை ஏது...
இந்த அளவுக்கு மென்மையான ட்ரீட்மென்ட் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்குமா...?
நிச்சயமாக... பெரும் நம்பிக்கை உண்டு. புதுமையும், ரசனையும்தான் இதற்கு காரணம். பெண்தான் ஆணுக்கு பெருங்கொடை. அவர்களின் ஒரு ஸ்பரிஸம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் ஒருவனின் வாழ்க்கைதான் இந்தப் படம்.
இந்த வரியை இப்போ வாசிக்கிற உங்களை விட, என்னைவிட, நம் எல்லோருக்கும் இப்படி ஒரு தருணம் உண்டு. அப்படி முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு அழகாக, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிற போது, சாமானியனாக ஒருவன் எடுக்கும் முடிவுதான் கதை. உறவையும், பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள் எதையும் கலைத்து போட்டு விடும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் தன் மனசுக்கு நெருக்கமான பெண்களை நினைத்துக் கொள்வார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும். கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன.
இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. இதுதான் இதன் சிறப்பு.
காளி வெங்கட்.... சமீபத்தில் ஒரு ட்ரெண்ட் செட்டராக உருமாறி இருக்கிறார்....
இந்தக் கதையைப் போலவே அவரும் எளிமையானவர். அதுதான் அவரை அணுகி கதைச் சொல்ல எல்லோருக்கும் ஆசை. இதுதான் அவர் என எந்த லேபிளையும் அவர் மீது ஒட்டி விட முடியாது. ஏராளமான பாகுபாடுகள் வந்தாலும், ஒரு கலைஞனாக அவர் அதை கையாளுகிற விதம் புத்தம் புதிது. மனசுக்கு பிடிக்காத எந்த காரியத்தையும் அவர் செய்வதில்லை.
அது ஒரு கலைஞனுக்கு முக்கியமான ஒன்று. சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்கிறார். என் வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் விட்டு விட்டு போக கூடாது என நினைக்கிறார். பணம், புகழ், வெளிச்சம் எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. தரமான கதைகளை ஏற்றுக் கொள்வதில் தீர்மானமாக இருக்கிறார். மொத்தத்தில் இந்த நிமிஷம் நம்முடையது வாழ்ந்துடலாமே என்று நினைக்கிறார்.
இதுதான் இயக்குநர்களுக்கு அவரை பிடிக்க காரணம் என நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால், இன்னொரு படத்திலும் அவரை இயக்க காத்திருக்கிறேன். அன்பு, கருணை, ஈரம், கோபம் என காட்சிக்கு காட்சி ததும்பி நிற்கிறார். நகரம் குறித்து, வசதி வாய்ப்புகள் குறித்து, எந்த பிரமிப்பும் ஏக்கமும் இல்லை. யார் குறித்தும் அச்சம் இல்லை. வாழ்க்கையை பற்றிய சிக்கலோ, குயுக்தியோ இல்லாமல் அன்பையும், பாச பரிதவிப்பை மட்டுமே மனதில் வைத்து நிற்கும் இடங்களில் கலங்கடிக்கிறார்.
"வணங்கான்' ரோஷ்னி பிரகாஷை கொண்டு வந்திருக்கீங்க போல...
இந்தப் படத்துக்கு அவர் இன்னொரு பலம். தற்போது இயக்குநர் பாலாவின் "வணங்கான்' படத்தில் நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ், இந்தப் படத்தில் தனது குடும்பத்தை விடா முயற்சியுடன் போராடி முன்னெடுத்து செல்லும் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு குடும்பத்தின் சவால்களை கடப்பதற்கான அவர்களின் பயணம்தான் கதையின் மையம்.
இது நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து, பார்வையாளர்களைக் கதையுடன் ஒன்ற வைக்கும். இவர்களுடன் விஷவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் சர்மா, பி.எல்.தேனப்பன், கல்கி ராஜன், "ஆடுகளம்' ராஜாமணி, "சுப்ரமணியபுரம்' விசித்திரன், "சிகை' சசி, மொக்லி கே மோகன், பொன்னேரி சுஜாதா, மாயா முனீஸ்வரன் என எல்லோரும் மற்ற இடங்களுக்கு பொறுப்பேற்று இருக்கிறார்கள். பாக்யராஜ் மற்றும் சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இஜே ஜான்சன் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதையும் நோ்வழியில் அடைய காத்திருத்தல் அவசியம்: நீதியரசா் என். ஆனந்த் வெங்கடேஷ்
அசோகன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 51

கண்துயில் மறுத்தல்
அன்பும் பரிவும் நிரந்தரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

