தீவிர தன்மையோடும், உண்மையோடும் சினிமாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். வேலை என்பது விருப்பம் சார்ந்த விஷயமாக இருப்பதுதான் இங்கே சிறப்பு. இந்த சந்தோஷமே என்னை ஒவ்வொரு நல்ல சினிமாவுக்கும் கடத்திச் சேர்க்கும். எல்லோரைப் போலவும், நானும் சினிமாவின் ரசிகன்.
அதுவும் நல்ல சினிமாக்களின் ரசிகன். பார்த்த படங்களை மறுநாள் பள்ளி வளாகங்களில் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள தொடங்கி வளர்ந்தவன். கதையாகவும், காட்சியாகவும் அந்த கதைகள் உள்ளுக்குள் விரிந்து கொண்டே இருந்தன. சினிமா தாகம் இருந்ததே தவிர, யாரிடம் உதவியாளராக போய் சேரவில்லை. சினிமாவை நானாகவே கற்றுக் கொண்டேன்.
எல்லாமே கேள்வி ஞானம் என்பார்களே.... அதுதான். உள்ளங்கை ரேகை தேய்த்தப்படி பேசுகிறார் இயக்குநர் குணா சுப்ரமணியம். 'சீசா' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
சீசா... என்ன மாதிரியான படம்....
சீசா என்பது பூங்காக்களில் சிறுவர்கள் ஏறி, இறங்கி விளையாடும் தடவாளம். ஒரு சிறுவன் ஏறுவான். ஒருவன் இறங்குவான். இதுதான் வாழ்க்கையும். இன்றைய வியாபார உலகம் வேறு மாதிரி இருக்கிறது.
அதுவும் ஓ டி டி தளங்கள் வந்த பிறகு தமிழ் சமூகம் என்றில்லாமல் எல்லோருக்குமான தலைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால்தான் ஆங்கிலத்தில் தலைப்பு. இது சினிமா வியாபாரத்தில் இப்போது தவிர்க்க முடியாதது. எல்லோரும் பொருத்தருள வேண்டும். அதே நேரத்தில் இந்த தலைப்பு கதையின் மனசாட்சியை பிரதிபலிக்கும். காந்தியும் ஹிட்லரும் ஒரே தெருவில் இருந்தால் எப்படியிருக்கும்.
அப்படி எழுகிற சூழலை கடக்கிற சில மனிதர்களின் கதைதான் இது. சந்தோஷத்தை எதிர்கொள்கிற அதே நேரத்தில் உண்மையைப் பார்த்தால் மனுஷனுக்குப் பயம். இதுதான் வாழ்வின் பெரும் சவால். சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறோம். அது அந்த நேரத்தில் அழகாக இருக்கும். கீரிடமாக ஜொலிக்கும். ஆனால், உண்மை அம்மணமாக நிற்கும்.
ஒரு கட்டத்தில் ஏசுநாதர் தலையில் இருந்த முள் கீரிடம் மாதிரி குத்தும். அதனால்தான் உண்மையை கண்டு ஓடி ஒளிகிறோம். சந்தோஷம் மட்டுமே கண்ணுக்கு தெரிய, பொய் துரத்த... உண்மை நெருக்க பலர் சாமியார்களாகத் திரிகிறார்கள்.
சிலர் பைத்தியமாகிறார்கள். என்னை கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும் உசுரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படியோர் அனுபவம் இங்கே சிலருக்கு கைக் கூடி வருகிறது.
உள்ளடக்கம் பற்றி பேசினால் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறக்கும்....
எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவு, நண்பர்கள் மாற்றி எழுதும் வாழ்வு என சிக்கல்கள் ஏராளம். எண்ணங்கள் பொருந்தி போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும்.
அது மனித வாழ்வுக்கு பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு. பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும்... அப்படியோர் பாதையில்தான் இந்த கதை பயணமாகும். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான்.
இரு துருவ மூளை கோளாறு என்ற நோய் தாக்கிய ஒருவனின் பயணம். ஒரு கொலை குற்றத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியின் பயணம். கதையின் இரு பக்கங்களாக இருக்கும். நிறைய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன. சமூகத்தின் தேவை உணர்ந்து நான் எடுத்து வைக்கிற கதை இது.
நீங்கள் பேசுகிற விதம் சரி.. இப்போதுள்ள ட்ரெண்ட் பிடித்து கதை சொல்லுவதுதான் இங்கே முக்கியம்....
ஒரு குற்றமும் அந்த குற்றத்தை செய்ய தூண்ட கூடிய அம்சங்களும்தான் இங்கே ஆதாரம். இந்தக் கதையை எழுதியவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கா. செந்தில்வேலன். அவர் ஒரு மனநல மருத்துவர். அறிவியல் சார்ந்து இந்தக் கதையை உருவாக்கி தந்திருக்கிறார். அதனால் இந்தக் கதையும், இதில் உலவும் மனிதர்களும் அழுத்தமாக இருப்பார்கள்.
அதே போல். குடும்ப உறவுகளால் பின்னிப் பிணைந்த உணர்வுப்பூர்வமான கதை திரைக்கதையைத் தாங்கிப் பிடிக்கும். ஒரு சினிமா பார்ப்பவர்களை மட்டுமல்ல.... அதைப் படைத்தவனையும் மாற்றி விடும் என்பது நான் கண்டடைந்த உண்மை. 'உன்னில் இருந்தே தொடங்குகிறது உலகம்' இல்லையா? அப்படித்தான் என்னிலிருந்து இறங்கி, இந்த சினிமாவை அடைந்திருக்கிறேன். எனக்கான உலகத்தை நீங்களும் உங்களுக்கான உலகத்தை நானும் ஏகோ ஓர் புள்ளியில் வந்தடைந்து விடுவோம்.
நடிகர்கள்....
இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் சினிமாவுக்கு அவ்வளவாக பொருந்தி வந்திருக்கிறார் நட்டி.
வழக்கமான சினிமா போலீஸ்காரர்களுக்கு மாற்றாக, ரியல் போலீஸ் இன்ஸ்பெக்டராக எதார்த்தமான நடிப்பு தந்திருக்கிறார். ஹாட்ஸ்டார் ஓ. டி. டி. தளத்தில் வெளியான 'ஹார்ட் பீட்' தொடரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற பாடினிகுமார் கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, படத்தின் மற்றொரு நாயகனாக 'பன்றிக்கு நன்றி சொல்லி' மற்றும் 'பருந்தாகுது ஊர் குருவி' படத்தின் மூலம் அறிமுகமான நிஷாந்த் ரூசோ.
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கா. செந்தில்வேலன் இந்த பெரும் வாய்ப்பை தந்திருக்கிறார். அவருக்கு என் ஆயிரம் நன்றிகள். புதுமுகமான என்னை நம்பி இந்த பெரும் பொறுப்பை தந்திருக்கிறார். 'கனலே' என்ற பாடலுக்கும், படத்தின் ட்ரெய்லருக்கு ஏக வரவேற்பு. அதே நம்பிக்கையை இந்த சினிமாவும் தரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
உன்னதமான நேரம் இது!
கனவை நிஜமாக்கும் மாயாஜாலம்

கோலிவுட் ஸ்டூடியோ!

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

