நம்பிக்கை துரோகத்தின் வலி!
அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கிறது. அது நல்லதோ கெட்டதோ...


அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கிறது. அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடுகிறது. அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஒரு அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது.
ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்த கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக, த்ரில்லர், ஹாரார் கலந்து கொடுப்பதில் நிறைய சவால்.'' கதையின் உள்ளடக்கம் பேசி கரம் கொடுக்கிறார் இயக்குநர் சிவம். இயக்குநர் கஸ்தூரிராஜாவின் உதவியாளர். இப்போது "பி 2' படத்தின் இயக்குநர்.
நீங்கள் பேசுகிற விதம் சரி.... இப்போதுள்ள டிரெண்ட் பிடித்து கதை சொல்லுவதுதான் இங்கே முக்கியம்...
பி 2 என்பது இரு நபர்களைக் குறிக்கும். அந்த இரு நபர்களைச் சுற்றிய கதை இது. ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது.
அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம்.
குறிப்பாக காதல். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை.
என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு செய்து முடித்திருக்கிறேன்.
எப்படி வந்திருக்கிறது படம்...
நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஆறாத வலி இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். அந்த கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான். ஆனால், க்ரைம் த்ரில்லரில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். படத்தின்
மேக்கிங் இன்னும் பலம். . நம்மைச் சுற்றி நடந்து வருகிற சம்பவங்கள்தான். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும். அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. போராடுவதும் வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. அன்பும், போராட்டமும்தான் இந்த மானூடத்தின் நிரந்தரம். நல்லவனாக வாழத்தான் எல்லோருக்கும் ஆசை.
ஆனால், காலம் எல்லாவற்றையும் கண்ணெதிரே கலைத்து போட்டு விட்டு ஒன்றும் தெரியாத சிறுப் பிள்ளை போல் ஓடி ஒளிந்து கொள்கிறது. நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்பினமோ, அதை வெறுக்கிறோம், ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததை கொடுத்து கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்த காலம் ஒரு தனி மனிதனுக்கு என்ன பரிசளித்தது என்பதுதான் இங்கே கதைக்களம். நம்பிக்கை துரோகத்தின் வலியை இன்னும் அக்கறையாக முன் வைக்கும் திரைக்கதை.
இதில் ஹாரார் பக்கம் எது...
கதையில் ஹாரார் கதை சொல்லல் முக்கியமானது. பேய் கதை என்று மட்டுமில்லாமல் அதில் ஒரு அக்கறையையும் முன் வைக்கிறேன். அது எல்லாமே இளம் தலைமுறைக்கான புரிதலாகத்தான் இருக்கும்.
ஒரு படம் என்னென்ன அனுபவங்களைத் தரும் என எனக்குள்ளேயே ஒரு கணக்கு இருக்கிறது. அதற்கு தகுதியாக இந்தப் படம் வந்திருக்கிறது. இந்தப் படம் ஒரு அசல் வாழ்க்கையை விட்டு, கொஞ்சமும் விலகாமல், ஏற்றி வைத்தும் சொல்லாமல், அச்சு அசலாக வந்திருப்பதுதான் விசேஷம். சொல்லியே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறேன். சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை.
ஆரம்பத்திலிருந்து உழைப்புதான் நம்மை உயரத்துக்கு கொண்டு போகும் என எண்ணுகிறேன். அந்த முயற்சியில் இறங்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டு விடும். காதல், அன்பு, கலாட்டா, துரோகம் எல்லாமும் கதை. காமெடி, ஃபேமிலி பேக்கேஜ் இரண்டும் இந்தப் படத்தில் சரி பாதி இருக்கும். எல்லாமே புது காட்சிகளாக எடுத்து முடித்திருக்கிறேன். சில விஷயங்கை ஊடுருவிப் பார்த்தால், இது எல்லோருக்குமான சினிமாவாகவும் இருக்கும். வாய்ப்புக்கு நன்றி.
நடிகர்களின் பங்களிப்பு...
கன்னடம், தெலுங்கு மொழிகளில் பரிச்சயமான மனோஜ் இதில் ஹீரோ. "யாத்திசை' படத்தில் நடித்த சித்து குமரேசன் ஹீரோயின். இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா மற்றும் மஸ்காரா அஸ்மிதா இவர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தப் படம் வந்திருக்காது.
படத்தை முடித்து விட்டு பார்க்கும் போது, அவ்வளவு நிம்மதி. "தேனிசை தென்றல்' தேவா இசையமைக்கிறார். அவ்வளவு அக்கறையாக கதையை உள் வாங்கி இசை தந்திருக்கிறார் தேவா சார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு எவ்வளவு தேவை என்பதை என்னையே உணர செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி. எடிட்டிங் மாதவன். இப்படி எல்லா திசைகளிலும் ஓடோடி வேலைப் பார்த்திருக்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...