இரண்டரை அடி உயரம்தான் இருக்கலாம், எழுந்து உட்காரக் கூட முடியாது, கை- கால்கள் இரண்டையும் ஒடுக்கிக் கொண்டு, எப்போதும் படுத்தே கிடக்கிறார் சுகுணா பன்னீர்செல்வம். அவர் முகநூலில் கவிதைகளை எழுதிக் குவிக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள கொத்தம்பட்டியைச் சேர்ந்த ஆர். பன்னீர்செல்வம்- வாசுகி தம்பதியின் இரண்டாவது மகள் சுகுணா பன்னீர்செல்வம். முப்பத்து மூன்று வயது நிரம்பியவர்.
வீட்டின் தாழ்வாரமும் கயிற்றுக் கட்டிலும்தான் அவரின் வசிப்பிடம். கட்டிலின் குறுக்கே படுத்திருக்கும் சுகுணாவுக்கு, இருபுறமும் சில நூல்கள், செல்போன். கட்டிலுக்குக் கீழே ஒரு நாய்க்குட்டி, சில கோழிகள். அருகே ஒரு மின்விசிறி.
புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின்போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுத்தவாறே வந்து, சில நூல்களை வாங்கிச் சென்றபோதுதான் சுகுணாவை சமூகத்தில் பலருக்கும் தெரியும்.
ஆனால், அதற்கு முன்பே இளம் கவிஞர் வட்டத்தில் சுகுணா பிரபலம். கவிதைக்குழுமம், இமைக்காவிழிகள், சந்திரோதயம், எழுத்தாணி, முத்தமிழ்க் கவிவனம் என்பன போன்ற முகநூல் கவிஞர்கள் குழுக்களில் சுகுணா தொடர்ந்து கவிதை எழுதுபவர்.
தனது கவிதைப் பயணம் குறித்து சுகுணா பேசியதாவது:
'எனது மூத்த சகோதரி மாதவி, இயல்பான உடல் நலத்துடன் திருமணமாகி சென்னையில் உள்ளார். இளைய சகோதரி சுகந்தி என்னைப் போலவே, வளர்ச்சி குன்றியவர். எனக்கு கவிதை எழுதப் பிடிக்கிறதோ அதைப்போல, சுகந்திக்கு பென்சில் கொண்டு நிறைய வரையப் பிடிக்கும்.
எங்கள் ஊருக்கு அருகேயுள்ள புனல்குளம் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை இருவரும் சேர்ந்தே போய்ப் படித்தோம். அதன்பிறகு தொலைதூரம் சென்று படிக்க வேண்டும் என்பதால் கல்வி நின்றே போனது.
நகர்ந்துகொண்டே எங்கள் ஊரையே சுற்றிவருவேன். தொடக்கத்தில், பக்கத்திலுள்ள சித்தப்பா வீட்டில் சில இதழ்களை வாசித்திருக்கிறேன். எனது தந்தையின் பாட்டி (கொள்ளுப்பாட்டி) நிறைய கதைகளைச் சொல்லி வளர்த்தார்.
2014-இல் முகநூலில் இணைந்தவுடன் தொடர்ந்து கவிதைகளை எழுதுகிறேன். முகநூல் குழுக்கள் இணையப் போட்டிகளை நடத்தி சான்றிதழ்களைத் தருகின்றனர். சுகுணா படைப்புகள் என்ற பெயரில் யுடியூப் சானலும் தொடங்கியிருக்கிறேன்.
விடியோக்களை எடிட் செய்து வெளியிடுவதற்கு செல்போனில் முடியவில்லை. கணினி ஒன்று கிடைத்தால் எளிதாகும். மீண்டும் கொத்தம்பட்டியைச் சுற்றிவர ஆசை. பேட்டரி வாகனம் கிடைத்தால் மகிழ்ச்சி'' என்றார்.
சுகுணாவின் தந்தை பன்னீர்செல்வம் கூறியதாவது:
'குழந்தையாக இருக்கும்போதே எங்காவது இல்லத்தில் கொண்டுபோய் விட்டு விடலாமே எனப் பலரும் சொன்னார்கள். நாம் பெற்ற பிள்ளையாச்சே. மனம் வரவில்லை.
மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் உதவித் தொகை வருகிறது. நானும் எனது மனைவியும் விவசாயக் கூலி வேலைக்குச் செல்கிறோம். மனநிறைவுடன் இருக்கிறோம். எல்லாவிதமான உதவிகளையும் எங்கள் மகளுக்கு செய்வோம்'' என்றார்.
ஆசிரியர் தினத்தையொட்டி அண்மையில் முகநூலில் சுகுணா எழுதிய கவிதை-
ஆலமரத்தடியில் கற்பித்து
ஆகாயம் முழுக்க வியாபித்து
ஆற்றல் இழக்க உரைத்து
ஆயுள் கரைய உழைத்து
ஆறாம் அறிவை வளர்த்து
ஆசை ஆசையாய் அணைத்து- அந்த
ஆசானை கொஞ்சம் நினைத்து
ஆருயிர் உள்ளவரை மதித்து- ஓர்
ஆசை மனதில் உதித்து சொல்கிறேன்
ஆசிரியர் தின வாழ்த்து
- சா. ஜெயப்பிரகாஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மயிலாடுதுறை: காப்பறைகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


