நன்றி சொல்லவே... !
இயற்கைக்கு நன்றி சொல்லும் நிகழ்வை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதங்களாக மக்கள் கொண்டாடுகின்றனா்.


உயிரினங்களில் பெரும்பாலானவை நன்றி உணர்வைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இயற்கைக்கு நன்றி சொல்லும் நிகழ்வை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதங்களாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது நன்றி செலுத்தும் நாள் ('தேங்க்ஸ் கிவ்விங் டே'). ஆண்டுதோறும் நவம்பரில் நான்காம் வியாழக்கிழமை உற்சாகத்துடன் அனைவராலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த நாளில், தித்திக்கும் பூசணி அல்வா, பக்குவமாய் வெட்டி சமைத்த வான்கோழி.. என்று கொண்டாட்டம் களைகட்டுகிறது.
பெற்றோர், உடன்பிறப்புகள், நட்புகள் எல்லோரும் வெவ்வேறு இடங்களிலும், நாடுகளிலும் இருந்தாலும் அன்றைய தினம் ஓரிடத்தில் ஒன்றுகூடி சமைத்து, அமர்ந்து உண்டு மகிழ்ந்து நேசிக்கும் நெஞ்சங்களோடு அன்பைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு சிறப்பான நாளாகும்.
அமெரிக்க மூத்த குடிமக்களும் ஐரோப்பிய குடியேற்றத்தாரும் சண்டையைவிட்டு மோதலிலிருந்து சமாதான நல்லுறவு ஏற்படுத்திக் கொண்ட நாளே நன்றி செலுத்தும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவர்கள் வான்கோழி சமைத்து உண்டதால் மரபு வழிச் சமையலாக நன்றி கூறி பரிமாறப்படுகிறது. முழு வான்கோழியை அவித்து, பொரித்து விதவிதமாகப் பரிமாறப்படும். வான்கோழி உணவுகள் கண்டிப்பாக உணவில் இடம்பெறும். இதனுடன் பூசணிக்காய் அல்வாவும் உருளைக்கிழங்கு மசியலும் கண்டிப்பாக உண்டு.
அமெரிக்க நாட்டவர்களும் புத்தாடை அணிந்து வான்கோழி போன்ற சமைத்த உணவுகளை வைத்து வழிபாடு செய்த பிறகே விருந்து படைப்பார்கள்.
வெள்ளை மாளிகையில் அதிபர் நன்றி செலுத்தும் தினத்தில் இரண்டு வான்கோழிகளுக்கு மன்னிப்புச் சடங்கு செய்து, அந்த'கொலைத் தண்டனை' யில் தப்பித்த வான்கோழிகளை நாட்டிலுள்ள ஏதாவதொரு விலங்குகள் காப்பகத்துக்குப் பரிசாக வழங்குவது நடைமுறை.
கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் முன்னோட்டமாக இந்த விழா அமைவதால் தெருக்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் பல வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு புத்தாண்டு முடியும் வரை ஒளிரவிடப்படுகிறது. ஒவ்வொரு பெரிய நகரங்களிலும் ' விளக்கு அலங்காரக் காட்சி' பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.
அமெரிக்க கலாசார கார்ட்டூன்களைப் பலூன்களில் உருவமைத்து, அலங்கார ஊர்திகளில் இசைக்கருவிகள் முழங்க, சிறு துண்டுத் தாள்களைத் தூவி வெகு விமரிசையாக ஆங்காங்கே அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெறும். இந்த மாபெரும் ஊர்வலத்தில் 'சாந்தா கிளாஸ்' எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளோடு ஆடிப்பாடிச் செல்வது வாடிக்கையாகும். பல்வேறு நகரங்களில் பனிச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு கண்காட்சியாக வைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்தை விளக்கும் பனிச் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன. நன்றி செலுத்தும் நாளுக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை 'கருப்பு வெள்ளி' என்று அழைக்கப்படும். இந்த நாளில் கடைகளில் எல்லாப் பொருள்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இதை வாங்குவதற்குக் கூட்டம் அலைமோதும்.
உறவினர்கள், நண்பர்கள் பரிசுப் பொருள்களை இந்நாளில் பரிமாறித் தங்கள் அன்பின் பிரியத்தை உணர்த்துவார்கள். வாழ்த்து மடலை உறவுகளுக்கு, நட்புகளுக்கு, காதலர்களுக்கு கொடுத்து மகிழ்வதைப் போல இங்குள்ள குழந்தைகளும் பெரியவர்களும்பூங்கொத்துகளைக் கொடுத்தும், எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வண்ண வாழ்த்து மடல்களைக் கொடுத்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள்.
செய் நன்றி மறவாமல் மக்களுக்கு உதவக்கூடிய பல்வேறு அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து விட்டு வண்ணமயமான வாழ்த்து அட்டைகளை வழங்கும் அந்த புதுமையான அற்புதமான நிகழ்வும் உண்டு.
நன்றி கூறும் இந்த நாளில் அனைத்து இடங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். கால்பந்தாட்டம் முதன்மையான விளையாட்டாக அமையும். முக்கியமான கால்பந்தாட்டப் போட்டிகள் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்படும். சிறு சிறு நகரங்களில் கூட இந்நாளில் மாரத்தான் ஓட்டம் நடைபெறும்.
ஓயாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு மூச்சு விட்டு ஆனந்த காற்றைச் சுவாசிக்க வைப்பது இதுபோன்ற விழாக்கள்தானே!
-மயில்,
படங்கள்: பிரனேஷ் ஜெயராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...