கர்ப்பகிரகத்தில் ஏற்றப்படும் தீபம்!
சாமானியர்களின் சந்தோஷம், அன்பு, கோபம், வாழ்க்கை இதுதான் நம்ம "அழகிய கண்ணே' படம். கதையின் ஒன்லைனும் இதுதான்.


சாமானியர்களின் சந்தோஷம், அன்பு, கோபம், வாழ்க்கை இதுதான் நம்ம "அழகிய கண்ணே' படம். கதையின் ஒன்லைனும் இதுதான். இரண்டே வார்த்தைகளில் திரைக்கதை வடிவம் பேசுகிறார் இயக்குநர் ஆர். விஜயகுமார் ராமகிருஷ்ணன். சீனுராமசாமியின் முதன்மை சீடர்.
""எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. இதில் நான் சொல்ல வருவதும் அதுதான். இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை... எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு அழகானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன்போடும் கொண்டாடுபவர்கள் இந்த மாதிரியான எளியவர்கள்தான். மதுரை தொடங்கி சென்னை பெருநகரம் வரை நான் பயணித்த ஒவ்வொரு நாளும் நாளும் ஓர் அனுபவம். அப்போது நான் பார்த்த, ரசித்த, வியந்த, தரிசித்த உலகங்களின் ஒரு சில காட்சிகள்தான் இந்த படம். எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், தோள் சாயந்து அழுத தோழியின் கண்ணீர்...''
"அழகிய கண்ணே'... அவ்வளவு அழகான டைட்டில்.....
நன்றி... இந்தக் கதையில் பங்களிக்கப் போவதும் ஒரு காதல்தான். பெண்தான் ஆணுக்கு பெருங்கொடை. பெண்ணின் ஒரு ஸ்பரிஸம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் ஒருவனின் வாழ்க்கைதான் இந்தப் படம். இந்த வரியை இப்போ வாசிக்கிற உங்களை விட, என்னைவிட, நம் எல்லோருக்கும் இப்படி ஒரு தருணம் உண்டு. அப்படி முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு அழகாக, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிற போது, சாமானியனாக ஒருவன் எடுக்கும் முடிவுதான் கதை. படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் தன் மனசுக்கு நெருக்கமான பெண்களை, அவர்களால் கிடைத்த வாழ்க்கையை நினைத்துக் கொள்வார்கள். இரு மனங்களின் அன்பை, கருணையை, காதலை, அவஸ்தையை, பிரிவை, நினைவை முன் வைக்கிற கதை.
படத்தின் உள்ளடக்கம் பற்றி பேசுங்க....
இது ஒரு உதவி இயக்குநரின் கதை. ஆயிரம் கனவுகளை சுமந்தோடுகிற போது, அவனுக்குள் வருகிற காதல் அவனை எங்கே கொண்டு போனது... இதுதான் இந்தப் படம். ஆயிரமாயிரம் வாய்ப்புகளையும், வசதிகளையும் அள்ளி இறைத்தப்படி மின்னிக் கொண்டு இருக்கும் இந்த சென்னையில், பிழைப்பு தேடி வந்தவர்களின் கொண்டாட்டங்கள் எங்கே இருக்கின்றன. எங்கெங்கு இருந்தோ வந்து பிழைப்புக்காக நிற்கிறோம். சினிமாதான் இலக்கு என வைத்து ஓடுகிறவர்கள்.... எல்லோரும் ஜெயித்து விட்டார்களா... தோற்றவர்களின் கதறல்கள் என்ன... ஜெயித்தவர்களின் வாழ்க்கை என்ன... நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இருந்தாலும் வாழ்க்கை எப்போதுமே அழகு. அந்த அழகின் உற்சாக தருணங்கள்தான் கதை. இங்கே வளருகிற ஒவ்வொரு இளைஞனிடமும் ஒரு வித்தை இருக்கும். பாட்டு, டான்ஸ் ஒவ்வொருவரிடமும் தனித்துவம் இருக்கும். அப்படியான ஆள்தான் நம்ம ஹீரோ லியோ சிவகுமார். திண்டுக்கல் லியோனின் மகன். ஹீரோயின் சஞ்சீதா ஷெட்டி. இந்த இருவரும்தான் அந்த காதலர்கள்.
எற்கெனவே இந்தப் பாணி கதைகள் இங்கே ஏராளம்...
உலகம் எங்கும் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதும் அன்புதானே. அதை தவிர்த்து இங்கே என்ன இருக்கிறது. பொருளையும், பணத்தையும் முதன்மைப்படுத்தாமல் வாழ்க்கைக்கு அன்புதான் முக்கியம் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்தாலே போதும், ஆரோக்கியமான தலைமுறை உருவாகி விடும். இதற்கு தேவையில்லாத தியாகங்கள் அவசியமில்லை. திடீரென்று மனதில், புத்தியில் ஏற்படுகிற அதிர்வின் காரணமாக மனமாற்றம் நிகழ்ந்து ஒரு புது வாழ்வு பரிசாகக் கிடைத்து விடும். கர்ப்பகிரகத்தில் ஏற்றப்படும் தீபம் போல் அது மகத்தனாது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அந்த நம்பிக்கைதான் இந்தப் படம்.
ஒரு படம் அந்த மொழி சார்ந்தவர்களை கவர வேண்டும். ஒரு படம் என்பது ஒரு விளக்கு போல. மழை, புயல், வெள்ளம் என எது வந்தாலும், அதை அப்படியே பொத்தி பாதுகாத்து ரசிகனிடம் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படித்தான் நான் "அழகிய கண்ணே' படத்தைப் பார்க்கிறேன். வாழ்க்கை இங்கே மிகவும் எளிமையானது. ஆனால், பயங்கரமானது இதுதான் இந்தப் படம் .
பிரபுசாலமன், விஜய் சேதுபதி..... என்ன விசேஷம்...
பிரபுசாலமன் இயக்குநராகவே வருகிறார். விஜய் சேதுபதி நடிகர். சினிமா பின்னணி கதை என்பதால், இருவரும் அப்படியே வருகிறார்கள். இதுதான் விஜய்சேதுபதி என எந்த லேபிளையும் அவர் மீது ஒட்டி விட முடியாது. ஏராளமான பாகுபாடுகள் வந்தாலும், ஒரு கலைஞனாக அவர் அதை கையாளுகிற விதம் புத்தம் புதிது. மனசுக்கு பிடிக்காத எந்த காரியத்தையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். அது ஒரு கலைஞனுக்கு முக்கியமான ஒன்று. அதே வேளையில் உதவி என்று வந்தால், அவரால் முடிந்தால் செய்து விட்டுத்தான் அடுத்த வேலைக்கு போகிறார். அப்படி அவர் செய்த உதவிதான் இது. எல்லோருக்கும் நன்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...