கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

உலகம்... உற்சாகம்... உணர்வுகள்!

உலகமே உற்றுநோக்கிய கத்தாரில் நிறைவடைந்த பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் நட்சத்திர வீரர்கள் ஆர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு மகிழ்ச்சியையும், பிரான்ஸின் மாப்பேவுக்கு சோகத்தையும் தந்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:11 am

தினமணி

உலகமே உற்றுநோக்கிய கத்தாரில் நிறைவடைந்த பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் நட்சத்திர வீரர்கள் ஆர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு மகிழ்ச்சியையும், பிரான்ஸின் மாப்பேவுக்கு சோகத்தையும் தந்துள்ளது.

மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி மேற்காசிய நாடான கத்தாரில்  நவ. 20-இல் தொடங்கி, டிச. 18-இல் நிறைவடைந்தது.  இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பின்னர் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது ஆர்ஜென்டினா. இதற்கு அதன் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் அற்புதமான ஆட்டம் முக்கிய காரணம் ஆகும்.

அதே நேரம் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வதில் பிரான்ஸ் அணியும் கடுமையாகப் போராடியது. அதன் இளம் பார்வர்ட் வீரர் மாப்பே அதி அற்புதமான ஆட்டத்தால் 4 கோலடித்து வெற்றிக்கு அருகே தனது அணியை அழைத்துச் சென்றார்.

மகிழ்ச்சியில் திளைத்த மெஸ்ஸி:

"உலகக் கோப்பை பட்டம் தனது வீட்டை அலங்கரிக்குமா?' என்ற கனவுடன் கத்தாருக்கு வந்த மெஸ்ஸி தொடக்கம் முதல் இறுதி ஆட்டம் வரை அபாரமாக ஆடி தனது ஆர்ஜென்டீனா அணியை வெற்றி பெறச் செய்து கனவை நனவாக்கினார். 35 வயதான மெஸ்ஸி,  தனது நாட்டுக்கு ஏற்கெனவே 2008-இல் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்றுத்திருந்தார். பல ஆண்டுகளாக கைகூடாமல் இருந்த கோபா அமெரிக்கா பட்டத்தையும் 2021-இல் பெற்றுத் தந்தார். தற்போது பிஃபா உலகக் கோப்பையும் சேர்ந்து விட்டது.

இந்த மகிழ்ச்சியில் மெஸ்ஸியுடன், அவரது குடும்பத்தினரும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். 5 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற மெஸ்ஸி, 26 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடிய ஒரே வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆட்டத்தின்போது முதல் பெனால்டியை கோலாக்கிய மெஸ்ஸி, கேலரியில் இருந்த தாயார் செலியா மரியாவின் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். தனது தாயின் கரங்களில் அடைக்கலமானார் மெஸ்ஸி.

பரபரப்பான ஆட்டம் முடிந்து கோப்பையை வென்ற தருணத்தை மனைவி ஆன்டொநெலா, மகன்கள் தியாகோ, மட்டியோ, ஸிரோ ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். தங்கள் கதாநாயகன் தந்தை மெஸ்ஸி மற்றும் கோப்பையுடன் படங்களும் எடுத்துக் கொண்டனர்.

கணவர் மெஸ்ஸியைப் பாராட்டி ஆன்டோநெலா வெளியிட்ட பதிவில், ""எவ்வாறு தொடங்குவது எனத் தெரியவில்லை. கடைசி வரை போராடும் குணத்தை எனக்கு கற்றுக் கொடுத்த நீங்கள், தற்போது உலக சாம்பியன். எத்தனை ஆண்டுகள் இதற்காக பாடுபட்டீர்கள் என அறிவோம்.  எனது சாம்பியன்''  எனக் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 1003 ஆட்டங்கள், 793 கோல்கள், 350 கோல் போட உதவி, 42 கோப்பைகள், 60 ப்ரீகிக், 56 ஹாட்ரிக், 7 பேலன் டி ஆர், 6 தங்கக் காலணி, 6 பிஃபா சிறந்த வீரர் விருது, 3 யுஇஎஃப்ஏ வீரர் விருதுகள் என மெஸ்லி குவித்துள்ளார்.

ஆர்ஜென்டீனாவின் ரோஸாரியோவில் 1987-இல் பிறந்த மெஸ்ஸி, 4 வயதிலேயே கால்பந்தில் ஆர்வம் கொண்டார். ஆனால் மற்ற சிறுவர்களைவிட உயரம் குறைந்து இருந்தது அவருக்கு பாதிப்பாக இருந்தது. குரோத் ஹார்மோன் குறைவுக்காக உயரம் ஆவதற்காக நாள்தோறும் ஊசி போடும் சிகிச்சையை மேற்கொண்டார். ஆனால் அவரது குடும்பத்தின் நிதிநிலை சாதகமாக இருக்கவில்லை. 13-ஆவது வயதில் குடும்பத்துடன் ஸ்பெயினுக்கு இடம் பெயர்ந்த மெஸ்ஸியை பார்சிலோனா எஃப்.சி. அணி பாதுகாத்தது.

சோகத்தால் தவித்த மாப்பே

ஆர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மூன்று கோல்களை அடித்த மாப்பே இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்பதற்கான தங்கக் காலணி விருதையும் பெற்றார்.  அற்புதமாக ஆடி ஹாட்ரிக் கோலடித்தும் கோப்பையை தவற விட்ட சோகம் மாப்பேயின் முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது. பிரான்ஸ் அதிபர் மாக்ரானே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஆறுதல் கூறினார்.

தனது 6 வயதில் கால்பந்தில் கால் பதித்த மாப்பேவுக்கு அதன்பின் தொடர்ச்சியாக ஏறுமுகம் தான். ஏஎஸ் போன்டி என்ற கிளப்பில் தந்தையிடமே பயிற்சி பெற்ற அவர் பின்னர் 2011-இல் கிளேர்போன்டைன் அகாதெமியில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து மொனாக்கோ அணியில் ஆடி வந்த மாப்பே, 17 வயதில் 2017-இல் பிரெஞ்சு லீக் சாம்பியன் பிஎஸ்ஜி அணியில் சேர்ந்தார். இதன் மதிப்பு 180 மில்லியன் யூரோவாகும்.

பின்னர் பிரான்ஸ் தேசிய அணியில் இடம் பெற்ற மாப்பே, 2018 உலகக் கோப்பையில் பிரான்ஸ் பட்டம் வெல்வதில் முக்கிய பங்காற்றினார்.

தற்போது 23 வயதான மாப்பே ரொனால்டோ, மெஸ்ஸியை விட அதிக வருவாய் ஈட்டும் வீரராக திகழ்கிறார் என ஸ்போர்டிகோ இதழ் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு அவர் 125 மில்லியன் யூரோவை ஈட்டுகிறார்.  

அவரது அலமாரியில் ஒரு உலகக் கோப்பை பட்டம், 5 லீக் 1 பட்டங்கள் அடங்கும்.  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1998 டிச. 20-இல் பிறந்த மாப்பேயின் குடும்பமே விளையாட்டு ஆர்வம் மிக்கதாகும்.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மாப்பே  ஹாட்ரிக் கோலடித்தார். இங்கிலாந்தின் ஜியாஃப் ஹர்ஸ்ட் 1966-இல் இறுதி ஆட்டத்தில் 3 கோலடித்திருந்தார். 14 உலகக் கோப்பை ஆட்டங்களில் மொத்தம் 12 கோல்களை அடித்துள்ளார் மாப்பே.

மீண்டும் வருவோம்: இறுதி ஆட்டத் தோல்விக்கு பின் மெளனமாக இருந்த மாப்பே, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மீண்டும் வருவோம் என பதிவிட்டுள்ளார்.

பிரேஸில் அணியின் முன்னாள் கேப்டனும், எவர்கிரீன் ஜாம்பவானுமான பீலே மாப்பேயின் அற்புதமான ஆட்டத்தைப் பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.