கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இங்கே போயிருக்கிறீர்களா?: வாசிப்பாளர்களின் வரப்பிரசாதம்!

அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:22 pm

வனராஜன்

அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன. சென்னை கோட்டூர்புரத்தில் 2010-ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி ஒன்பது தளங்களோடு தொடங்கப்பட்டு வாசிப்பாளர்களுக்கும், மாணவர்களுக்கும் வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது.

பத்தாண்டுகளைக் கடந்த நூலகம் பற்றிய சிறப்புப்பார்வை:

8 ஏக்கர் பரப்பளவில் 3.75 லட்சம் சதுர அடியில் 8 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன. 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. வார நாள்களில் 1200 பேரும், விடுமுறை நாள்களில் 1500 பேரும் வருகை தருகிறார்கள். மற்ற நூலகங்களைப் போன்று புத்தகங்களை வெளியே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. குறிப்பு எடுப்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு. பேட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தரைத்தளத்தில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பார்வையில்லாதவர்களும் படிக்க வசதி:

பார்வையற்றவர்கள் படிக்க இங்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பார்வைத்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்காக பிரெய்லி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆடியோ புத்தகங்கள், பேசும் புத்தகங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பார்வையற்றவர்கள் இமெயில் முகவரி கொடுத்தால் போதும் அன்றாடம் அவர்களுக்கு செய்தித்தாள் ஆடியோவாக மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் அவர்கள் விரும்பும் புத்தகம் ஆடியோவாக மாற்றப்பட்டும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் பணியை செய்வதற்குத் தன்னார்வலர்கள் இங்கு உள்ளனர்.

நூலகத்தில் உறுப்பினர் ஆவதற்கு தனிநபர்களாக இருந்தால் ரூ.250, ஒரு குடும்பத்திற்கு (இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் உள்பட) ரூ.500, மூத்த குடிமக்கள் என்ற பிரிவுக்கு ரூ.100, மாணவர்களுக்கு ரூ.150 என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருக்கும் சொந்த நூல் பிரிவு, இ-புக்ஸ், இ-நூலகம், நூலகத்தின் வைஃபை போன்றவைகளை பயன்படுத்தலாம்.

இ-நூலகம்: மூவாயிரம் எழுத்தாளர்களின் அனுமதியோடு இங்கு இ-நூலகம் செயல்பட்டு வருகிறது. வீட்டில் புத்தகம் படிக்க முடியாதவர்கள் இங்கு தங்களது புத்தகத்தைக் கொண்டு வந்து படிக்கலாம். குழுவாக அமர்ந்து படிக்க அனுமதியில்லை. ஆனால், தேர்வு நேரங்களில் மட்டும் குழுவாக அமர்ந்து படிக்கலாம்.

நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் பல நாளிதழ்களும், பருவ இதழ்களும் உள்ளன. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, சமயம், மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தமான பருவ இதழ்களும் உள்ளன. கூடுதலாக பழைய நாளிதழ்களும், பருவ இதழ்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் "அ' மற்றும் "ஆ' என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

Story image

"அ' பிரிவில், அண்ணா எழுதிய மற்றும் அண்ணாவைப் பற்றிய நூல்கள், பெரியாரின் நூல்கள், பொது அறிவு நூல்கள், கணினி அறிவியல், கலைக் களஞ்சியம், தொகுப்பு நூல்கள், இதழியல், தத்துவம் மற்றும் உளவியல், சுய முன்னேற்ற நூல்கள், சமய நூல்கள், ஆன்மிகம், சமூகவியல், அரசியல், பொருளியல், சட்டம், வணிகவியல், திரைப்படவியல், விளையாட்டு பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன.

"ஆ' பிரிவில், சங்க இலக்கிய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், புதினம், நாடகம், பயணக் கட்டுரைகள், கடிதங்கள், நகைச்சுவை நூல்கள், வாழ்க்கை வரலாறு மற்றும் அரிய நூல்கள் மிகச்சிறந்த முறையில் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது முதல் ஏழாம் தளம் வரை ஆங்கில நூல்கள் பாடவாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பொதுஅறிவு, கணினி அறிவியல், நூலகம் - தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், அறஇயல் மற்றும் மதம், சமூகவியல், புள்ளியியல் மற்றும் அரசியல் தொடர்பான நூல்கள் உள்ளன.

நான்காவது தளத்தில் பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளன. ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல், கணிதவியல், வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல் மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்கள் உள்ளன.

ஆறாவது தளத்தில் பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டடக்கலை, நுண்கலை, மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்கள் உள்ளன.

ஏழாவது தளத்தில் வரலாறு, புவியியல், வேதியியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன. மேலும், இ- லைப்ரரி என்ற இணையம் வழியாக தகவல்களைப் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. கீழ்த்திசை ஓலைச்சுவடிகள் நூலகம் உள்ளது. எட்டாவது தளத்தில் அலுவலகம் மற்றும் நிர்வாகப் பிரிவு உள்ளது.

சிறுவர்கள் மரத்தின் கீழ் அமர்ந்து படிக்கும் வகையில் செயற்கை மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறுவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிறிய மேடையும், அவர்கள் விளையாடுவதற்காகப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கூட்ட அரங்கு, கலையரங்கு, கருத்தரங்கு நடத்துவதற்கு தனி அரங்குகள் உள்ளன. 400-க்கும் மேற்பட்ட கார்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

800 பேர் அமரக் கூடிய திறந்தவெளி அரங்கமும் இந்நூலகத்தில் பெற்றுள்ளது. இந்நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலக'த்துடன் (வேர்ல்டு டிஜிட்டல் லைபரரி) இணைக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் சனிக்கிழமையில் "பொன்மாலைப் பொழுது' என்ற நிகழ்ச்சி பல்வேறு துறைகளை மையப்படுத்தி நடத்தப்படுகிறது. அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை தோறும் காலைப் பொழுதுகளில் குழந்தைகளுக்கான கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், நடனமாடுதல் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஞாயிறு மாலையில், இளைஞர்களைப் போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் சிறப்பு நிபுணர்களைக்கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

வாசிப்பைச் சரளமாக்குவதில் நூலகமே முக்கிய பங்கை வகிக்கிறது. பத்தாண்டுகளைக் கடந்து பலரின் அறிவுக்கு விருந்தாக செயல்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் வாசிப்பாளர்களின் வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.