உலகத் தரத்தில் கரோனா மருத்துவமனை நம்மாளும் முடியும்
தமிழகத்தில் நடந்த அதிசயம், சென்னை கிண்டியில் அமைந்துள்ள அரசு கரோனா சிறப்பு மருத்துவமனை.


தமிழகத்தில் நடந்த அதிசயம், சென்னை கிண்டியில் அமைந்துள்ள அரசு கரோனா சிறப்பு மருத்துவமனை.
இத்தனைக்கும் மிகக் குறுகிய காலத்தில், 14 நாளில் உருவான மருத்துவமனை இது தான்.
அமெரிக்காவைப் பார்- சீனாவைப் பார்- ஜப்பானைப் பார் என்றும் -அவர்களால்தான் முடியும் என்றும் பேசப்பட்டு வந்த நிலையில், சென்னையில் ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்
தூரார் மருத்துவமனை எனப் பல அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், உலகத்
தரத்துடன் கரோனா நோயாளிகளின்தன்னம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது இந்தக் கரோனா மருத்துவமனை.
மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்
750 கரோனா நோயாளிகள் ஒரே நேரத்தில் சிகிச்சை பெற படுக்கை வசதி, 100 மருத்துவர்கள், 90 செவிலியர்கள், 100 மருத்துவப் பணியாளர்கள், 60 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு, 10 படுக்கைகளுடன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு, சி.டி ஸ்கேன் மையம், இரண்டு நடமாடும் எக்ஸ்ரே கருவிகள், 25 வென்டிலேட்டர், 40 உயர் ஓட்ட ஆக்ஸிஜன் கருவிகள் ,10 நடமாடும் ஆக்ஸிஜன் கருவிகள், கரோனா பரிசோதனை மையம், வெளிப்புற நோயாளி பிரிவு, மருந்தகம், ரத்த சேகரிப்பு அறை, கதிரியக்கப்பிரிவு, செயல் விளக்க அறை, நவீன சிகிச்சை அரங்கு, மைய ஆய்வகம், கிருமி நீக்கல் பிரிவு, மருத்துவ நிர்வாக அலுவலர் பிரிவு எனப் பலவும் உண்டு. நூலகம் ஒன்றும் இயங்குகிறது.
இந்தியாவிலேயே இல்லாத அளவு உலகத்தரத்துடன் மருத்துவத் தலைநகரான சென்னையில்அமைக்கப்பட்டுள்ள இந்தக் கரோனா மருத்துவமனையில் யோகா பயிற்சிக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய முதியோர் நல மையமாகச் செயல்பட்டு வந்த மருத்துவமனை 14 நாள்களில் அரசு கரோனா மருத்துவனையாக ஆனது எப்படி? ஓமந்தூரார் அரசு பல் நோக்கு மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியும், கதிரியக்க சிகிச்சை
நிபுணருமான ஆனந்த குமார்விவரிக்கிறார்:
""சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் குழு கிண்டிலுள்ள இந்த மருத்துவமனையைப் பார்வையிடுகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க இதை கரோனா நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். அப்போது அங்கு 300 சாதாரணப் படுக்கைகள் மட்டுமே இருந்தன. 100 ஆக்சிஜன் லைன் கொடுப்பதற்கான வசதிகள் இருந்தன. ஆனால் சாலை வசதி இல்லை. புதுக் கட்டடம். ஆனால் பயன்படுத்தபடாமல் இருந்தது.
கட்டடத்தைப் பார்வையிட்டதும் தேனாம்பேட்டையிலுள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கிறார். அப்போது தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநர் (என்.ஹெச்.எம்) செந்தில்ராஜ் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் (டி.என்.எம்.எஸ்.சி) உமாநாத் ஆகியோர் மருத்துவமனைத் தயார் செய்து விடலாம் என்று சம்மதம் தெரிவித்து, என்னுடைய பெயரை பரிந்துரைக்கிறார்கள். காரணம் ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனை வடிவமைப்பதில் பணி அனுபவம் உண்டு என்பதால் தமிழக அரசு சார்பாக எனக்கு அந்தப் பணி தரப்பட்டது.
அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை அழைத்து விவரத்தைச் சொன்னதும், மறுநாள் காலையிலேயே கிண்டியிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டேன். அங்கிருந்த சிவில், எலக்ட்ரிக்கல், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த நபர்களுடன் கலந்து ஆலோசித்து விரிவான அறிக்கை ஒன்றை, அமைச்சருக்கு அனுப்பி வைத்தேன்.
உடனே சுகாதாரத்துறையில் இருந்து உங்கள் பணியைத் தொடங்குங்கள். மருத்துவமனைக்கு என்ன தேவையோ அது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் அனுசியா மற்றும், ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜனுக்கு, இமெயில் மூலம் உங்கள் தேவைகளைத் தெரிவியுங்கள். சுதந்திரமாக உங்கள் பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதன் படி செய்தேன்.
கரோனா சிறப்பு மருத்துவமனை என்றால் கட்டாயம் சி.டி. ஸ்கேன் வசதி வேண்டும் என்ற சொன்னவுடன் இரண்டு வாரத்தில் சி.டி. ஸ்கேன் வசதி கிடைக்கப்பெற்றது. பொது முடக்கக் காலத்தில் இது யாராலும் சாத்தியப்
படாது. ஆனால் இங்கு சாத்தியமானது.
தினந்தோறும் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் பணிகளைப் பார்வையிட்டு விரைவுபடுத்தினார். மேற்பார்வை அதிகாரியாக ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குநர் விமலா ஆலோசனை வழங்கினார். குறிப்பாக உயர் மருத்துவச் சாதனங்கள் உடனே கிடைக்கப் பெற்றன. கரோனா நோயாளிகளுக்காக 10 தானியங்கி வசதி கொண்ட படுக்கைகள் வரவழைக்கப்பட்டன. இவை மூச்சு திணறலுடன் வரும் நோயாளிகளுக்குப் பயன்படும் வகையில் கீழ் தளத்திலேயே வைக்கப்பட்டன.
14 நாள்களில் இந்தப் பணிகளைச் சிறப்பாக முடிப்பதற்குப் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்து, மிகப்பெரிய பலமாக இருந்தார். இந்த மருத்துவமனைக்கு வருவதற்கு பாதை கூட இல்லாமல் இருந்தது. உடனே புதிய கான்கீரிட் சாலை அமைத்து அவசர ஊர்தி வந்து செல்வதற்கு வசதியாக எல்.ஈ.டி விளக்குகளுடன் வசதிகள் செய்து கொடுத்தார். நோயாளிகள் பயன்பெறும் வகையில் 100 ஆக்சிஜன் லைன்களை 300 ஆக மாற்றிக் கொடுத்தார்.
பொது முடக்கக் காலம் என்பதால் வேலைக்கு வரும் நபர்களை ஆங்காங்கே பிடித்துவிடுவார்கள். காலை 6 மணி முதல் 9 மணி வரை அவர்களைப் பேசி விடுவிப்பதே என்னுடைய காலைப்பணியாக இருந்தது. மாலை 6 மணிக்குள் எந்தளவு அவர்களிடம் வேலையை வாங்க முடியுமோ கூடவே இருந்து அவர்களைப் பணிகளைச் செய்ய வைத்ததால் மட்டுமே இந்தப் பணியைக் குறிப்பிட்ட தினங்களுக்குள் முடிக்க முடிந்தது.
500 படுக்கை கொண்ட மருத்துவமனைக்குப் பதிலாகக் கூடுதலாக 250 படுக்கை வசதி செய்யப்பட்டது. தொழில் நுட்ப ரீதியில் மற்ற மருத்துவமனைகளில் உள்ள குறைபாடு இங்கே இருக்கக்கூடாது என்பதற்காக நோயாளிகள் தங்களது குடும்பத்தாரிடம் உடனே தொடர்பு கொண்டு பேசுவதற்கு வசதியாக ஒவ்வொரு தளத்திலும் "வைஃபை' வசதி செய்யப்பட்டது. இது பி.எஸ்.என்.எல் அதிகாரிகளால் இரண்டே நாளில் சாத்தியமானது. மேலும் நான்கு தளங்களிலும் 50 சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு மருத்துவமனை முழுவதும் கண்காணிக்கப்படுகிறது.
யோகா அரங்கு
கொவைட் நோய்த்தொற்று எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பது யோகா. அதனால் இரண்டாவது தளத்திலுள்ள தேர்வு அரங்கு, யோகா அரங்காக மாற்றப்பட்டது. யோகா பயிற்சியாளர்கள் கவச உடைகளுடன் சொல்லிக் கொடுக்க இங்குள்ள நோயாளிகள் யோகா கற்றுக் கொள்கிறார்கள்.
இந்த மருத்துவமனையின் முக்கிய அம்சம் மருத்துவர்கள், மற்றும் மருத்துவ பணியாளர்கள் கரோனா நோய் தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ஐ.சி.யூவில் பிரத்யேக கருவி ஒன்று பொருத்தியுள்ளோம். இது தனியார் மருத்துவமனைகளில் உள்ளது. அதாவது காற்றைச் சுத்திகரித்துக் கிருமிகளைக் கொன்று விடும். ஜப்பான் நிறுவனத்தின் தயாரிப்பு. தீவிர சிகிச்சை பிரிவு நுழைவு வாயிலில் இதனைப் பொருத்தியிருப்பதால் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காற்றோட்ட வசதி
நோயாளிகளுக்கு உணவளிக்க மாடூலர் கிச்சனை உருவாக்கியுள்ளோம். நோய் எதிர்ப்பு அதிகப்படுத்த இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்களுக்குப் புரதசத்துள்ள உணவுகளும், கபசுர குடிநீரும், 24 மணி நேரமும் வெந்நீர் கிடைக்கப் பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று வேளைக்கான உணவுகள் உணவங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நோயாளிக்கும், ஒரு மின் விசிறி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரபட்சம் இல்லாமல் அனைவரும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதனைச் செய்துள்ளோம். குழந்தைகளைத் தவிர மற்ற வயதினர் அனைவருக்கும் இங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், ஏன் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு கரோனாவிலிருந்து மீண்டு வர சிகிச்சை பெறலாம்.
இன்று இந்தியாவிலேயே எந்த மருத்துவமனையிலும் இல்லாத காற்றோட்ட வசதி இங்கு உள்ளது. சிறந்த மருத்துவ நிபுணர்கள், உயர் ரக மருத்துவக் கருவிகளைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. உள் கட்டமைப்பு சரியான முறையில் உருவாக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனை தொடங்கியது முதல் இன்று வரை ஐநூறுக்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்து திரும்பியிருக்கிறார்கள். இதற்கு கரோனா மருத்துவமனையின் இயக்குநர் நாராயணசாமி தலைமையிலான குழுவினரின் கடின உழைப்பு முக்கிய காரணம்.
நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள்
அனைத்துப் பணிகளும் முடியும் தருவாயில் ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவர்களைப் பணியமர்த்துவது பற்றிப் பேச்சு வந்தது. பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் இங்கே பணியமர்த்தப்பட்டார்கள். அவர்களில் மூன்று மாதம் தொடர்ச்சியாக கரோனா தடுப்புப் பணிகளில் இருக்கிறோம். எங்கள் குடும்பத்தாரைப் பார்க்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனர். உடனே இதனை சுகாதாரத்துறை அமைச்சரிடம் கொண்டு சென்றதும், அவரே இ- பாஸ் வாங்கிக் கொடுத்து மருத்துவர்களுக்கு 1 வாரம் விடுமுறை அளித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். மேலும் கிண்டி மருத்துவமனையில் பணிபுரிவதற்கு வசதியாக எங்களுக்குத் தங்குமிடம் அருகிலேயே இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனடியாக அந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. மருத்துவமனைத் திறப்பதற்கு இரண்டு நாள்கள் இருந்த நிலையில் எனக்கு கரோனாத்தொற்று ஏற்பட்டது. எனவே திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
தொலைக்காட்சி வழியாகத் தான் திறப்பு விழாவைப் பார்த்தேன். மக்கள் சேவையில் என்னால் முடிந்த பங்களிப்பை நினைத்த போது ஆனந்த மிகுதியால் கண்ணீர் வழிந்தது'' என்றார் மருத்துவர் ஆனந்த குமார்.
உயிரிழப்புகளைத் தவிர்க்கும் உன்னத சிகிச்சை!
கிண்டியில் அமைந்துள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் இதுவரை ஓர் உயிரிழப்புகூட நேரிடவில்லை என்று பெருமிதம் தெரிவிக்கிறார் அந்த மருத்துவமனையின் இயக்குநர் நாராயணசாமி. அதற்கான காரணங்களையும் அவரே விளக்குகிறார்...
""மற்ற மருத்துவமனைகளைப் போல அல்லாமல் கரோனா சிகிச்சைக்காக மட்டுமே பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது கிண்டியில் அமைந்துள்ள இம்மருத்துவமனை. இங்கு அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நோயாளிகளையும் தனிப்பட்ட முறையில் நேரடியாக சந்தித்து மருத்துவர்கள் சிகிச்சையளிக்கின்றனர். இயக்குநர் என்ற முறையில் நானும் நாள்தோறும் நோயாளிகளைச் சந்தித்து நிறை, குறைகளைக் கேட்டறிகிறேன்.
அதுமட்டுமல்லாது, தனியார் மருத்துவமனையைக் காட்டிலும் அதீத அக்கறையுடனும், அதி நவீன மருத்துவ வசதிகளுடனும் இங்கு சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் இதுவரை ஓர் உயிரிழப்பு கூட நேரிடவில்லை. மருத்துவமனையின் முதுநிலை மருத்துவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புணர்வுடன் சேவையாற்றுவதே அதற்கு பிரதான காரணம்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மருத்துவர் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...