ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 36: பாடலாசிரியரான தமிழாசிரியர்!
நான் சென்னைக்கு வந்த புதிதில் முதன்முதலில் சந்தித்த திரைப்பாடலாசிரியர் ஆலங்குடி சோமு. இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் கதாசிரியர் டி.என். பாலு.


நான் சென்னைக்கு வந்த புதிதில் முதன்முதலில் சந்தித்த திரைப்பாடலாசிரியர் ஆலங்குடி சோமு. இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் கதாசிரியர் டி.என். பாலு. அப்போது அவர்கள் இருவரும் தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் குடியிருந்தார்கள். நான் அடிக்கடி ஆலங்குடி சோமுவைச் சந்திப்பேன்.
1960-ஆம் ஆண்டில் வெளிவந்த "யானைப் பாகன்' படத்தில்தான் பாடலாசிரியராக அறிமுகமானார். ஓராண்டு இடைவெளிக்குப் பின், 1961-ல் வெளிவந்த "கொங்கு நாட்டுத் தங்கம்' என்ற படத்தில் இரண்டாவது பாடலை எழுதினார். "கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்' என்று தொடங்கும் அந்தப் பாடலில்,
"மானைத் துரத்தி வந்து கானக் குறத்தி வள்ளி
மாதைக் கவர்ந்து மணம் கொண்டவா - சூரர்
மார்பைத் துளைத்து வெற்றி கண்டவா - மெய்
ஞானக் கருத்தைத் தந்தை காதிற் புகன்று அருள்
மோனப் புன்னகை செய்து நின்றவா - உன்னைக்
காணத் திரண்டுவந்தோம் மன்னவா'
என்ற இறுதிச் சரணம் சிந்து கவிதையாக இருக்கும். இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைத்தவர் கே.வி. மகாதேவன். ஆலங்குடி சோமு அவர்களின் ஆரம்பகாலப் பாடல்களுக்குப் பெரும்பாலும் இசையமைத்தவர் கே.வி. மகாதேவன் தான்.
திரைப்பாடலில் பெண்களின் கண்களைக் காவடிச் சிந்துக்கு ஒப்பிட்டு ஒழுதிய ஒரே கவிஞர் இவர்தான். "கண்களும் காவடிச் சிந்தாகட்டும். அது காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்' என்று எம்.ஜி.ஆர். நடித்த "எங்க வீட்டுப் பிள்ளை' என்ற படத்தில் இவர் எழுதிய பாடல் காலம் கடந்து வாழும்.
இவரை எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகர் அசோகன் என்பது சினிமாத் துறையிலுள்ள பலரும் அறிந்த செய்தி. இவரையும் எம்.ஜி.ஆர் உயர்த்திவிட்டார். இவர் கருணாநிதி மீது பற்றுடையவர் என்பதால் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி கண்டபிறகு அவரிடம் இருந்து ஒதுங்கிவிட்டார்.
"மெüலி' இயக்கத்தில் ஆலங்குடி சோமு ஒரு படத்தைத் தயாரித்தார். அதில் முதல் பாடலை என்னிடம்தான் எழுதி வாங்கினார். நான் வேண்டாம் என்று மறுத்தபோதும் ஐந்நூறு ரூபாயை என் கையில் திணித்துவிட்டார்.
நான் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தபோது, ""என்னுடைய பாடல்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும்; அதற்கு நீங்கள் ஆவன செய்ய வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ""தொகுத்துக் கொடுங்கள். ஏற்பாடு செய்கிறேன்'' என்றேன்.
அவர் சார்பில், "காதல்படுத்தும் பாடு' போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா பனசை மணியம் என் வீட்டிற்கு இரண்டு முறை வந்தார். ""அவருக்கு உடல் நலம் சரியில்லை. சரியானதும் அவரை அழைத்து வருகிறேன்'' என்றார். அதற்குள் விண்ணுலகத்திலிருந்து ஆலங்குடி சோமுக்கு அழைப்பு வந்துவிட்டது. அவர் சென்றுவிட்டார். அந்த வருத்தம் நீண்ட காலம் வரை என் நெஞ்சை வருத்திக் கொண்டிருந்தது.
அவர் எத்தனையோ பாடல்கள் எழுதியிருந்தாலும் "இரவும் பகலும்' படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையில் எழுதிய எல்லாப் பாடல்களும் என்னால் மறக்க முடியாத பாடல்கள்.
"செத்த பிணத்தருகே இனிச் சாம்பிணம் சூழ்ந்து கொண்டு
கத்தும் கணக்கென்ன காண்கயி லா புரிக் காளத்தியே'
என்று பட்டினத்தார் பாடியதைப் போலே,
"இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டாள்'
என்றொரு பாடலை அதில் எழுதியிருப்பார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் அவர் பாடலை. அத்தகைய சிறப்புக்குரிய கவிஞர் அவர்.
"குடியிருந்த கோயில்' படத்தில் "ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்' என்ற பாடல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதிலிருந்து மறையாது.
"மலைசாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம்சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர்சாய்ந்து போனால் சரமாகலாம்
மனம்சாய்ந்து போனால் என்ன செய்யலாம்'
"கார்த்திகைத் தீபம்' படத்தில் இவர் எழுதிய இந்தப் பாடல் இலக்கியவாதிகள் என்றென்றும் போற்றுகின்ற பாடல் அல்லவா?
அண்ணா எழுதிய ஒரு வசனத்தைப் பல்லவியாக்கிய பாடலாசிரியர் இவர்தான்.
"கத்தியைத் தீட்டாதே - உந்தன்
புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே - கொண்ட
கடமையைப் போற்று'
"விளக்கேற்றியவள்' என்ற படத்தில் இவர் எழுதிய பாட்டு இது.
"ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது
அறிவுக்கு வேலைகொடு - உன்னை
அழித்திட வந்த பகைவன் என்றாலும்
அன்புக்குப் பாதைவிடு
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலப்பா - இதை
மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல்
மறைந்தே போகுமப்பா'
இதுபோன்ற கருத்துள்ள பாடல்களை இப்போது கேட்க முடிகிறதா?
நானும் அவரும் சேர்ந்து சங்கர்கணேஷ் இசையில் "பொற்காலம்' என்ற படத்திலும் தாராபுரம் சுந்தரராஜன் இசையில் "நீச்சல் குளம்' என்ற படத்திலும் கங்கை அமரன் இசையில் "கரடி' என்ற படத்திலும் எழுதியிருக்கிறோம்.
இதுவரை படங்களுக்குப் பாடல் எழுதியவர்களில் இலக்கணப் புலமை இலக்கியப் புலமையுடைய பெரும் புலவர் புலமைப்பித்தன் ஒருவர் தான். கண்ணதாசனே வியந்து பாராட்டிய புலவர் இவர். இவர் ஒரு படத்தில், "காய்ச்சிய பாலில் ஆடை இருக்கும் காமத்துப் பாலுக்கு ஆடை எதற்கு' என்று ஒரு வரி எழுதியிருப்பார். ""அவன் படித்த தமிழ் எப்படியெல்லாம் விளையாடுகிறது பார்த்தாயா விசு...'' என்று அண்ணன் எம்.எஸ். விசுவநாதனிடமே சொல்லிப் பாராட்டியிருக்கிறார் கண்ணதாசன்.
வல்லினம் மெல்லினம் இடையினம் என்பதை வைத்து காதல் பாடல் எழுதிய கவிஞர் இவர்தான்.
ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் - மெய்
எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
பெண் : மனதினிலே இருக்கும் ஆசை வல்லினம் - என்
மன்னனுக்குப் பிடித்ததெல்லாம் இடையினம்
இப்படியெல்லாம் எழுதுவதற்குப் பெரும் புலமை பெற்றிருக்க வேண்டும். இவர் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
ஒரு கவியரங்கத்தில், "பாடுகின்ற நேரத்தில் கடல் அலைகள் ஏன் நெளிந்து கொண்டிருக்கின்றன' என்பதைச் சொல்லும்போது, "ராஜராஜ சோழனின் கப்பற் படை அணி வகுப்பைத் தாங்க முடியாமல் நெளிய ஆரம்பித்த கடல் இன்று வரை நெளிந்துகொண்டிருக்கிறது' என்றார். இது அணியிலக்கணத்தில் தற்குறிப்பேற்ற அணியாகும்.
கிளப் டான்ஸ் பாடலில் கூட, "மது... ஒரு காலை வைத்தால் அது மாது' என்று எழுதியிருப்பார். எம்.ஜி.ஆர். படங்களில் என்னைவிட அதிகப் பாடல்கள் எழுதியவர் இவர்.
"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தில் "தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்' என்றொரு பாடல் எழுதியிருப்பார். அதில் சரணத்தில், "பாவையுடல் பாற்கடலில் பள்ளிகொள்ள நான்வரவா'
என்றொரு வரிவரும். இதன் பொருளை ஆழ்ந்து பார்த்தால் ஒரு மாதிரியாகத் தெரியும். ஆனால் பாடலைப் படிக்கும் போது ஏதோ ஆழ்வார்கள் பாடலைப் படிப்பது போல் ஓர் உணர்வு ஏற்படும்.
இப்படித்தான் காதல் பாடல்கள் இலைமறைக் காயாக இருக்க வேண்டுமே தவிர, சில கவிஞர்கள் எழுதுவதைப் போல விரசமாக இருக்கக் கூடாது. என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கவிஞர்களில் இவரும் ஒருவர்.
கலைவாணர் அரங்கில் அப்போது நடந்த கவியரங்கம் ஒன்றில் நான் பாடும்போது "தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்' என்ற பாடலில் வருகிற சரணத்தின் மேற்கண்ட அந்த வரிக்காகவே இவரைத் தமிழக அரசு சிறந்த பாடலாசிரியராக இந்த ஆண்டு தேர்ந்தெடுக்க வேண்டுமென்று கூறினேன். நான் கூறியது போலவே அந்த ஆண்டு சிறந்த திரைப்படப் பாடலாசிரியராகப் புலமைப்பித்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
புலமைப்பித்தன் எழுதிய பாடல்கள் அனைத்துமே புலமைப் பொய்கையில் பூத்த பொற்றாமரைகள் என்றால் மிகையல்ல.
"இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவில்
தொட்டிலைக் கட்டிவைத்தேன் - அதில்
பட்டுத்துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்'
என்ற "நீதிக்குத் தலைவணங்கு' படத்தின் பாடல்,
"சிரித்து வாழவேண்டும் - பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும் - பிறர்
உழைப்பில் வாழ்ந்திடாதே'
என்ற "உலகம் சுற்றும் வாலிபன்' படத்துப் பாடல் போன்ற பல பாடல்கள் காலத்தால் அழியாத காவியப்பாடல்கள். எத்தனையோ படங்களில் நாங்கள் சேர்ந்து எழுதியிருக்கிறோம். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மேலவைத் துணைத் தலைவராகவும் அரசவைக் கவிஞராகவும் எனக்கு முன் பதவி வகித்தவர். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவராக இருந்த பெருமைக்குரியவர்.
ஈழத்தமிழர் விடுதலைக்கு முழக்கமிட்டவர்களில் இவரும் ஒருவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அத்தகைய இன உணர்வு, மொழியுணர்வு எல்லாம் தமிழ்நாட்டில் இன்று மழுங்கி வருகிறது. கர்நாடகத்தில் அது வளர்ந்து வருகிறது.
(இன்னும் தவழும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...