பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 41: பாடலால் எழுந்த பிரச்னை!

மலர்களில் சிறந்தது தாமரை; நதிகளில் சிறந்தது கங்கை; மலைகளில் சிறந்தது இமயம்; மனிதர்களில் சிறந்தவர் எம்.ஜி.ஆர் என்பதைப் போல் அரசர்களில் சிறந்தவர் அசோகர்; புலவர்களில் சிறந்தவர் கபிலர்;

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:20 pm

கவிஞர் முத்துலிங்கம்

மலர்களில் சிறந்தது தாமரை; நதிகளில் சிறந்தது கங்கை; மலைகளில் சிறந்தது இமயம்; மனிதர்களில் சிறந்தவர் எம்.ஜி.ஆர் என்பதைப் போல் அரசர்களில் சிறந்தவர் அசோகர்; புலவர்களில் சிறந்தவர் கபிலர்; நடிகர்களில் சிறந்தவர் சிவாஜி; இன்றைய தலைவர்களில் சிறந்தவர் ஜெயலலிதா என்று- ஜெயலலிதா இருந்த காலத்திலேயே கட்சி மேடைகளில் பேசும்போது அடிக்கடி குறிப்பிடுவேன்.
""ஹாலிவுட்டின் சிறந்த நடிகரான மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால் சிவாஜியைப் போல ஓரளவு நடிக்கலாம்'' என்று அண்ணாவால் பாராட்டப் பெற்றவர் நடிகர் திலகம். நடிப்புக் கலையின் பல்கலைக்கழகம் அவர்.
வடநாட்டு சிவாஜி வாளால் அரசாண்டவர். தமிழ்நாட்டு சிவாஜி நடிப்பால் உலகாண்டவர். அங்க அசைவுகளில் அவர் காட்டும் மெய்ப்பாட்டை எங்கும் ஒரு நடிகர் இது வரைக்கும் காட்டியதில்லை. சிவாஜியின் புருவ நெளிப்பில்கூட புதியதோர் நடிப்பிருக்கும். உடல் மட்டுமல்ல; அவர் உரோமமும்கூட நடிப்பின் நுணுக்கத்தை நமக்கெல்லாம் கற்றுத் தரும்.
அவர் மீசைத் துடிப்பிலும் மேம்பட்ட நடிப்பிருக்கும். அவர் மூக்கும் செவியும் கூட முதல் தரமாய் நடிக்கும். இவர் போலத் தமிழைப் பிழையின்றி உச்சரிக்கும் நடிகர் இப்போது கிடையாது. 
தமிழ் தெரியாதவர்களாக இருந்தால்தான் தமிழில் நடிப்பதற்குத் தகுதியானவர்கள் என்று கருதுகிற காலமாக இக்காலம் மாறிவிட்டது. ஈடற்ற கலைஞரான சிவாஜியை சிறந்த நடிகரென்று இந்திய அரசாங்கம் இதுவரை தேர்ந்தெடுக்கவே இல்லை. அது இந்திய அரசுக்குத்தான் இழுக்கென்று நான் சொல்வேன்.
நாம் கர்ணனைப் பார்த்ததில்லை. வீரபாண்டியக் கட்டப்பொம்மனைப் பார்த்ததில்லை. கப்பலோட்டிய தமிழனைப் பார்த்ததில்லை. அவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்பதை அந்தந்தப் பாத்திரங்களில் நடித்த சிவாஜி மூலம் தான் அறிந்திருக்கிறோம். அவர் ஒரு சகாப்தம்.
""தம்பி சிவாஜியுடன் பல நடித்த நடித்தும் கூட சில நடிகைகள் இன்னும் நடிப்புத் திறமையை வளர்த்துக் கொள்ளவில்லை'' என்று எம்.ஜி.ஆரே ஒரு பேட்டியில் சிவாஜியின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அப்படிப்பட்ட சிவாஜி நடித்த ஏழு படங்களில் நான் பாடல் எழுதியிருக்கிறேன். அதிலும் அவர் பாடுவதுபோல் உள்ள படங்கள் இரண்டுதான். அதில் முதலில் எழுதிய படம் "ஊருக்கு ஒரு பிள்ளை'. "பொன்னூஞ்சல்' படத்தைத் தயாரித்த குற்றாலிங்கம்தான் இந்தப் படத்தையும் தயாரித்தார். கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலை மாற்றி எழுத வேண்டும் என்று கேட்டபோது கண்ணதாசன் மாற்றி எழுத மறுத்துவிட்டார். அந்தப் பாடலுக்குப் பதிலாக வேறு பாடல் எழுத வேண்டும் என்று சொல்லி வசனகர்த்தா ஏ.எல். நாராயணன் என்னை அந்தக் கம்பெனிக்கு அழைத்துச் சென்றார். அவர்தான் அந்தப் படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியவர்.
அந்தப் படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன். படத்தை இயக்கியவர் யோகானந்த். எம்.ஜி.ஆர். நடித்த "மதுரை வீரன்' போன்ற பல படங்களை இயக்கியவர் இவர். 
கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலுக்குப் பதிலாக நான் எழுதிய பாடல் அவர்களுக்குப் பிடித்துவிட்டது. அதை சிவாஜியிடம் காட்டியபோது அவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. அதனால் அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் நானே எழுதும் சூழ்நிலை ஏற்பட்டது. சிவாஜி, டைரக்டர் யோகானந்த், ஏ.எல். நாராயணன் எல்லாவற்றுக்கும் மேலாக எம்.எஸ். விஸ்வநாதன் இவர்களின் ஏகோபித்த முடிவுதான் இதற்குக் காரணம்.
அப்படி எழுதிய பாடலால் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அந்தப் படத்தில் நம்பியார் ஏற்ற பாத்திரத்தின் பெயர் ராஜாங்கம். அவர் அந்த ஊரில் அடாவடித்தனம் செய்து வருவார். அவரைக் கண்டித்து சிவாஜியும் மற்றவர்களும் பாடுவது போல் ஒரு பாடல். நம்பியார் ஏற்ற பாத்திரத்தின் பேரைக் குறிப்பிட்டுக் கூடப் பாடல் இருக்கலாம் என்று ஏ.எல். நாராயணன் சொன்னார். விஸ்வநாதன் அண்ணன் போட்ட மெட்டுக்குப் பல்லவி எழுதினேன்.
""அட - ராஜாங்கம் - உன் - அதிகாரம் - இன்னும்
எத்தனை நாளைக்கு நடக்கும் - நாங்க
துணிஞ்சாலே - உண்மை - புரிஞ்சாலே
உன்னை - ஊரு பார்த்துச் சிரிக்கும்
நாங்க - கலங்கரை விளக்கு
நீங்க - களங்கத்தின் கணக்கு'' 
இதுதான் பல்லவி.
சரணம் :-
""குழந்தையாக இருக்கும்போது வஞ்சங்கள் இல்லை - இங்கு
கோபுரமாய் வளர்ந்தவர்க்கு நெஞ்சங்கள் இல்லை
தவழும்பிள்ளை சிரிக்கையிலே உதிர்வது முல்லை - அது
தலைவனாகிச் சிரிக்கையிலே வருவது தொல்லை
இங்கே - பொய்ம்மைகள் இல்லை
அங்கே - உண்மைகள் இல்லை""
இதுபோல் இன்னும் இரண்டு சரணங்கள் வரும். இதில் முதல் சரணத்திலும் பல்லவியிலும்தான் பிரச்னை வந்தது.
அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த நேரம். அதுவும் இரண்டாவது முறை முதலமைச்சராக இருந்த நேரம்.
"அட - ராஜாங்கம் உன் அதிகாரம் இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்' என்ற முதல் வரியே எம்.ஜி.ஆர் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு கோபத்தை உண்டாக்கிவிட்டது.
"மேலும் குழந்தையாக இருக்கும்போது வஞ்சங்கள் இல்லை - இங்கு கோபுரமாய் வளர்ந்தவர்க்கு நெஞ்சங்கள் இல்லை' என்ற சரணம் மேலும் கோபத்தை உண்டாக்கிவிட்டது. எம்.ஜி.ஆர் தரப்பிலிருந்து பல கேள்விகள் எழுந்தன.
"வாலிதான் இப்படி எழுதியிருப்பார்' என்று "என்ன இப்படி எழுதிவிட்டீர்கள்?' என்று எம்.ஜி.ஆர் தரப்பில் கேட்டிருக்கிறார்கள். "நான் எழுதவில்லை' என்று சொல்லியிருக்கிறார் வாலி. "கண்ணதாசன் எழுதியிருப்பாரா?' என்று கேட்டிருக்கிறார்கள். "இல்லை. முத்துலிங்கம் எழுதிய பாடல்' என்று வாலி சொன்னவுடன் அவர்களுக்கு அதிர்ச்சி. அதை எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருக்கிறார்கள். "என்ன நம்ம முத்துலிங்கமா?' என்று சொல்லிவிட்டு அந்தப் பாடலை மீண்டும் போட்டுக் கேட்டிருக்கிறார். கேட்டுவிட்டு சிரித்துக் கொண்டாராம். அவர் சிரிப்புக்குப் பல அர்த்தங்கள் இருக்கும். ஆனால் எம்.ஜி.ஆர் அதைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்கவில்லை. என்மீது அப்படியொரு நம்பிக்கை அவருக்கு.
அப்போது என்னிடம் அதைப் பற்றி யாரும் சொல்லவும் இல்லை. எம்.ஜி.ஆர் அலுவலக மேலாளர் குஞ்சப்பன்தான் ஒருநாள் இதை என்னிடம் கூறினார். அதன் பின் அண்ணன் வாலியும் கூறினார். அதற்குப் பிறகுதான் இப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்பது எனக்குத் தெரிந்தது.
இப்படியெல்லாம் பிரச்னை வருமென்று நான் நினைக்கவில்லை. அந்தக் காட்சிக்கு இதுதான் பொருத்தமென்று நினைத்து எழுதினேன்.
""நாங்க - கலங்கரை விளக்கு
நீங்க - களங்கத்தின் கணக்கு''
என்ற வரிதான் என்னைக் காப்பாற்றியிருக்குமென்று நினைக்கிறேன். "கலங்கரை விளக்கு' எம்.ஜி.ஆர் நடித்த படம். அந்தப் படத்தில் நான் எழுதிய இரண்டாவது பாடல் கல்வியைப் பற்றியது. ஏ. எல். நாராயணன் எனக்குக் காட்சியை விளக்கினார்.
பள்ளிக்கூடம் திறந்திருக்கிறது. ஆனால் அந்தக் கிராமத்துப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் ஆடு மேய்க்க ஆடுகளை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில ஆடுகள் அங்குமிங்கும் ஓடுகின்றன. ஓடுகின்ற ஆட்டைப் பிடித்து ஒழுங்காக மந்தைக்குக் கொண்டு வருகிறார்கள். இதுதான் காட்சி. இதற்கேற்ப கல்வியின் சிறப்பை விளக்கும் வகையில் பாடல் இருக்கவேண்டும் என்றார்.
""புரியாத வெள்ளாடு தெரியாமே ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்
சரியான பாதையில் ஒழுங்காகப் போகவே
புத்திமதி நாம் சொல்லிப் பார்ப்போம்''
என்று நான் எழுதிய முதல் பல்லவியே அனைவருக்கும் பிடித்துவிட்டது.
அப்போது சிவாஜி காங்கிரஸில் இருந்தார். அதனால் அந்தக் கட்சியின் கைச்சின்னம் வரும்படி மறைமுகமாக எழுத வேண்டும் என்றார் ஏ.எல். நாராயணன். அதன்படி எழுதினேன்.
""பணிவுக்குப் பூமியில் மதிப்பு - உயர்
பண்பாடு வாழ்வுக்குச் சிறப்பு
உழைப்பால் உயரவேணும் கைகள்
உயர்ந்த வாழ்க்கையை உருவாக்கும் கலைகள்''
இதுஅநுபல்லவி.
சரணம் :-
""உயிருக்குத் தேவையெல்லாம் வயிற்றுக்குச் சோறு
அறிவுக்குத் தேவையெல்லாம் புத்தகக் காடு
படிப்புக்கு நிகரான செல்வங்கள் ஏது
பாமரனை உலகம் என்றும் மதிக்காது கேளு
இரவுக்குத் தீபம் என்று நிலவுக்குப் பேரு
இதயத்தின் தீபமென்று கல்வியைக் கூறு
துணிவுக்குக் கொடியேற்றி துன்பத்தை வெல்லு
சோம்பல்களை நீக்கிவிட்டுப் புகழ்வாங்கச் செல்லு''
இதுபோல் இன்னும் ஒரு சரணம் வரும். இந்தப் பாடலை சிவாஜியும், கே.ஆர். விஜயாவும் பாடுவதுபோல் காட்சி இருக்கும்.
இதைப் போல நடிகர் ராமராஜன் நடித்து 2011-ஆம் ஆண்டு வெளிவந்த "மேதை' என்ற படத்திலும் கல்வியின் சிறப்பைப் பற்றி ஒரு பாடல் எழுதினேன். தினாவின் இசையமைப்பில் எழுதிய அந்தப் பாடலுக்கு 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பாடலாசிரியராக 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு என்னைத் தேர்ந்தெடுத்தது. அதை எப்போது வழங்குவார்கள் என்பது தெரியவில்லை.
(இன்னும் தவழும்)

படம் உதவி: ஞானம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.