ஆசிய சாம்பியனான தாய்லாந்து நாய்!
நாய் வளர்ப்பதால் மனதிற்கும், உடலுக்கும் புது தெம்பு கிடைக்கிறது'' உதகையில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் பங்கேற்ற பலரது வாக்குமூலம்தான் இது.


நாய் வளர்ப்பதால் மனதிற்கும், உடலுக்கும் புது தெம்பு கிடைக்கிறது'' உதகையில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் பங்கேற்ற பலரது வாக்குமூலம்தான் இது.
செல்லப்பிராணி என்ற நிலையைத் தாண்டி தற்போது நாய்கள் பேரிடர் மீட்பு, வேட்டைப்பணி, காவல்துறை மற்றும் சுங்கத்துறையில் மோப்ப பணி, வெடிகுண்டை கண்டறிதல், போதைப்பொருட்களைக் கண்டறிதல் என பல்வேறு பிரிவுகளிலும் திறம்பட செயலாற்றி வருகின்றன. இச்சூழலில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் ஆசிய-பசிபிக் நாய் கண்காட்சியை நடத்த நாய்கள் குறித்த கூட்டமைப்பான சர்வதேச கைனோலோஜிக் அமைப்பு தீர்மானித்திருந்தது. அதன்படி இவ்வாய்ப்பு சர்வதேச சுற்றுலா மையமான உதகைக்கு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சர்வதேச நாய்கள் குறித்த கல்வி கூட்டமைப்பு, ஆசிய கெனல் கிளப், இந்திய கெனல் கிளப் ஆகியவை இணைந்து உதகையில் நடத்தப்பட்ட இந்த நாய் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், ஹவுண்டு, பீகிள், டெரியர் போன்ற வெளிநாட்டு ரக நாய்களுடன், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை போன்ற உள்ளூர் ரக நாய்களுமாக சுமார் 60 பிரிவுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
இக்கண்காட்சியில் சர்வதேச நாய்கள் கூட்டமைப்பின் சார்பில் சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்தும் நடுவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் பங்கேற்ற பின்லாந்து நாட்டை சேர்ந்த நடுவரான கெரி ஜார்வினன் கூறுகையில், ""நாய்கள் தற்போது செல்லப் பிராணிகள் என்ற நிலையைத் தாண்டி பேரிடர் மீட்பு, வேட்டைப் பணி, பாதுகாப்பு பணி என பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன.
குறிப்பாக மீட்பு பணிகளில் நாய்களின் சேவை விவரிக்க முடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக உள்ளது. அத்துடன் நாய்களை வளர்ப்பதால் மனிதர்களுக்கு மனம் மற்றும் உடல்ரீதியான தெம்பும் கிடைப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய-பசிபிக் நாய் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இக்கண்காட்சியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பின்லாந்து நாட்டில் உலக நாய் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுமார் 25,000 நாய்கள் பங்கேற்க உள்ளன'' என்றார்.
இந்த நாய் கண்காட்சியில் பங்கேற்ற நாய்களின் உடலில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருந்தது. அதன்மூலம் நாயின் வயது, எடை, அதன் தனித்துவம், குடும்ப வரலாறு, மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நொடிப்பொழுதில் கணினித் திரையில் காட்டப்பட்டன. இது இக்கண்காட்சியை காண வந்திருந்த சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியது.
உதகையில் நடைபெற்ற இந்த சர்வதேச நாய் கண்காட்சியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த யார்க்க்ஷயர் டெரியர் இன நாய் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் ஆசிய சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.
உதகையில் ஆண்டுதோறும் கோடை சீசனின்போது நாய் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தாலும், நடப்பாண்டில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த ஆசிய-பசிபிக் நாய் கண்காட்சி நாய் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் உதகையிலிருந்த அனைவருக்குமே புதிய அனுபவமாக இருந்தது என்றால் மிகையாகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...