பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நீலகிரி மலையில் இதயத்துக்கு இதமான இயற்கை மூலிகைகள்

இதய நோய் என்றாலே அதற்கான மருந்து வெளிநாடுகளிலிருந்தே வரவழைக்கப்பட வேண்டுமென்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், இதய நோய்க்கு மருந்தாகப் பயன்படும் முக்கியமான 55 வகையான மூலிகைகளில் 6 வகைகள் ந

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:09 pm

ஏ. பேட்ரிக்

இதய நோய் என்றாலே அதற்கான மருந்து வெளிநாடுகளிலிருந்தே வரவழைக்கப்பட வேண்டுமென்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், இதய நோய்க்கு மருந்தாகப் பயன்படும் முக்கியமான 55 வகையான மூலிகைகளில் 6 வகைகள் நீலகிரி மலைப்பகுதியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட இத்தகைய மூலிகைகளில் டிஜிட்டாலிஸ் என்ற மூலிகையே முக்கியமானது. உலகெங்கிலும் உள்ள குளிர்ப் பிரதேசங்களில் இத்தகைய மூலிகை பயிரிடப்பட்டு வருவதோடு, இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகளவிலும், வட மாநிலங்களில் காஷ்மீர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வகையில் பயிரிடப்படுவதாகவும் உதகையைச் சேர்ந்த மருத்துவ தாவர ஆராய்ச்சியாளரான டாக்டர் எஸ்.ராஜன் தெரிவிக்கிறார்.

இந்த மூலிகை மருத்துவக் குணம் வாய்ந்தது என்ற விவரம் அறியப்படாத காலத்திலேயே பழங்குடி இன மக்கள் தங்களுக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டால் உடனடியாக இம்மூலிகையின் இலையை கசாயமாக்கி அருந்துவர். அப்போது நெஞ்சுவலி குறைந்து வந்ததால் தொடர்ந்து இதைப் பயன்படுத்தி வந்ததாகவும், இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக டாக்டர் வில்லியம் விதரிங் என்ற ஆங்கிலேய மருத்துவரே மருத்துவரீதியில் இதை முதன்முதலில் பயன்படுத்தியவர் எனவும், இந்த ஆராய்ச்சி தொடர்பாக அவர் எழுதிய புத்தகம் 1775-ல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ராஜன் தெரிவித்தார்.

 இந்த மூலிகையிலிருந்து ஆங்கில மருத்துவ முறைக்குப் பயன்படும் வகையில் டிஜாக்சின் மற்றும் டிஜிடாக்சின் என்ற இரண்டு நுண்ணிய மருத்துவக்குணம் வாய்ந்த மருந்துகள் தயாரிக்கப்படத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த மருந்தாக்கியல் வல்லுநரான கிளாட் என்பவர். டிஜிட்டாலிஸ் மூலிகை இதய நோய்க்கு மட்டுமில்லாது சிறுநீரக கோளாறுகளுக்கும் தேவையான மருந்துப் பொருளைத் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது உபரித் தகவல்.

 இதைப்போலவே ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட புரூம் என்ற மூலிகையும் நீலகிரி மலைப் பகுதிகளில் காணப்படும் மூலிகையாகும். மொத்தம் 30 வகையிலான இந்த மூலிகையில் 4 வகை மட்டுமே இந்தியாவில் வளரக் கூடியவை. ஆனால், இவை நான்குமே நீலகிரி மலைப் பகுதியில் காணப்படுவது விசேஷமானது.

 ஹோமியோபதி மருத்துவத் துறையில் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய இந்த மூலிகை, இதயத்தைப் பலப்படுத்துவதற்கு மிக முக்கியமான மருந்துப் பொருளாக செயலாற்றுகிறது. இதிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருளான ஸ்பார்ட்டைன் சல்பேட் இதயத்தைப் பலப்படுத்துவதோடு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், சமச்சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

இந்த மூலிகை உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவையும் கட்டுப்படுத்துவதால் சிறுநீரக நோய்களுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.  இவ்விரண்டு மூலிகைகளுமே நீலகிரிக்கு வந்த ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது மருத்துவத்துறையில் மிக முக்கியப் பங்காற்றிவரும் மூலிகைகளாகும்.

இந்த மூலிகைகளைக் குறித்து அறிந்தவர்கள் தாங்களாகவே இதைப் பயன்படுத்தாமல் இதன் மருத்துவக் குணத்திற்கேற்ப மருத்துவர்களின் தக்க ஆலோசனையின் பேரிலேயே பயன்படுத்த வேண்டுமெனவும் மனித உடலின் முக்கியமான இரு அவையங்களான இதயம் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீலகிரி மலையில் காணப்படும் இவ்விரு மூலிகைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது  அவசியம்.

ஆர்ட்டிசோக் தாவரம் உலகில் 15 வகைகளில் காணப்படுகின்றன. இதில் ஒரு வகை மட்டுமே இந்தியாவில் உள்ளது.

இந்த வகைப் பூவில் தயாரிக்கப்படும் சூப்பை தொடர்ந்து அருந்துவதன் மூலமாக சிறுநீரகக் கோளாறு மற்றும் மூட்டுவலிக்கு உடனடியாக நிவாரணம் கிடைப்பதாகவும், இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் இனுலின் என்ற வேதிப்பொருள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முக்கிய காரணியாகவும் திகழ்கிறது. ஆர்ட்டிசோக் இதய நோய்க்கு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது'' என்றார் டாக்டர் ராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.