பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உதகையில் "புல்லட்' திருவிழா!

கடந்த வாரத்தில் உதகையில் "ரீ யூனியன்', "அசெம்பிளி வார்ஸ்', "கேரி யுவர் பைக்', "ஸ்லோ ரேஸ்', "வீலிங்' என்ற வார்த்தைகள் தொடர்ந்து ஒலித்த வண்ணமிருந்தன. இதற்கு காரணம் உதகையில் கடந்த வாரத்தில் சுற்றிக் கொண்

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:38 pm

ஏ. பேட்ரிக்

கடந்த வாரத்தில் உதகையில் "ரீ யூனியன்', "அசெம்பிளி வார்ஸ்', "கேரி யுவர் பைக்', "ஸ்லோ ரேஸ்', "வீலிங்' என்ற வார்த்தைகள் தொடர்ந்து ஒலித்த வண்ணமிருந்தன. இதற்கு காரணம் உதகையில் கடந்த வாரத்தில் சுற்றிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான புல்லட் மோட்டார் பைக்குகளேயாகும்.

 அக்கால இளைஞர்களின் கனவு வாகனம் என்று சொன்னால் அது புல்லட் தான். அதன் சப்தமும், தாங்கும் சக்தியும், கரடு முரடான சாலைகளிலும், மேடு பள்ளங்களிலும் அனாயசமாகச் செல்லும் போக்கும் புல்லட் என்றால் புல்லட்தான்.

 இந்தப் புல்லட் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் சார்பில் உதகையில் "ராயல் என்பீல்டு ரீ யூனியன்' நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதுவரை, கோவா மாநிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்த இந்நிகழ்ச்சி தென்னக மோட்டார் சைக்கிள் ரைடர்களின் கோரிக்கைக்கேற்ப முதன்முறையாக உதகையில் நடத்தப்பட்டது.

 இதில் பங்கேற்பதற்காக தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, கொச்சி, மைசூர், ஷிமோகா, உடுப்பி, கோட்டயம் மற்றும் கள்ளிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் உதகை வந்திருந்தனர். இதனால், உதகை நகரில் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் புல்லட் ஓசையாகவே இருந்தது.

 இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர்களுக்காக பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. பைக்கை பகுதி, பகுதியாகப் பிரித்து மீண்டும் முன்பிருந்ததைப் போலவே இணைக்கும் நிகழ்ச்சி "அசெம்பிளி வார்ஸ்' என்ற பெயரிலும், சுமார் 200 கிலோ எடையுள்ள புல்லட்டை 4 பேர் சேர்ந்து 30 மீட்டர் தூரத்திற்கு தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி, "கேரி யுவர் பைக்' என்ற பெயரிலும், வேகமாக ஓட்டக்கூடிய புல்லட் பைக்கை, தரையில் கால்களை ஊன்றாமல் மிக நீண்ட நேரத்துக்கு மெதுவாக ஓட்டும் போட்டி "ஸ்லோ ரேஸ்' எனவும் அழைக்கப்பட்டது. இந்த சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் அனைவருமே தங்களது திறமையை வெளிக்காட்டினர்.

 நிகழ்ச்சி குறித்து ராயல் என்பீல்டு நிறுவன முதன்மை செயல் அலுவலர் வெங்கி பத்மநாபன் கூறுகையில், ""ராயல் என்பீல்டு நிறுவன வாடிக்கையாளர்களின் நட்புறவை வளர்க்க இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கோவாவில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி, தென்னிந்திய வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க முதன்முறையாக இந்த ஆண்டு உதகையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு கிடைத்துள்ள வரவேற்பு தொடர்ந்து இத்தகைய நிகழ்ச்சிகளை உதகையில் நடத்தத் தூண்டுவதாகவும் தெரிவித்தார்.

 வீலிங் எனப்படும் சாகசத்தை செய்துகாட்டியும், ஒரே மோட்டார் பைக்கில் 10-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டும் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த பாராட்டுதல்களைப் பெற்ற மதுரையைச் சேர்ந்த மாரி கூறுகையில், ""புல்லட் மோட்டார் சைக்கிள் எனது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று. எனது மோட்டார் பைக்கைப் பிரிந்து ஒரு நிமிடம்கூட இருக்க முடியாது'' என்றார்.

 எத்தகைய சாலையானாலும் ஆடாமல், அசையாமல் செல்லும் புல்லட் பைக்குக்கென தனியாகவே ரசிகர்கள் உள்ளனர். சென்னையிலிருந்து புதுவைக்கும், ஏன் மும்பைக்கும் கூட புல்லட் பைக்கிலேயே சென்று வந்த சுவாரஸ்ய தகவல்களையும் பிரபலங்களே பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 புல்லட் மீதான மோகம் காரணமாகவே இப்போதும் உதகைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் "பைக் ரைடர்கள்' மும்பைக்கு வந்தவுடன் அங்கிருந்து கோவாவுக்குச் சென்று அங்கு புல்லட்டைப் புதிதாகவோ அல்லது வாடகைக்கோ வாங்கிக் கொள்கின்றனர். அங்கிருந்து கோவா, கர்நாடகம், உதகை வழியாக தமிழகத்தைச் சுற்றிவிட்டு கேரளத்துக்குச் சென்று மீண்டும் தங்கள் சொந்த நாட்டுக்கு புறப்படும்போதுதான் பைக்கை விட்டுச் செல்கின்றனர்.

 "பட பட' இரைச்சலுடன் 3 நாட்களாக அணிவகுப்பைப் போல புல்லட்கள் உதகையில் சுற்றி வந்ததற்கு அதைக் கூடி நின்று ரசித்த மக்களே இதற்குச் சாட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.