நதிக்கரையில் தாகத்தோடு இருந்தோம்!
ஊரைச்சுத்தி மேற்கு தொடர்ச்சி மலை உண்டான மிச்சத்தில் பொறந்த அஞ்சாறு கரடுக. காடுகளைச் சுத்தி வறண்டு போன வயக்காடுக. எல்லா ஊர்லேயும் பேஞ்சு முடிஞ்சு இதுக்கு மேலே பொழிய இடமில்லாம கடைசியா வந்து பொழிஞ்சுட்டு


ஊரைச் சுத்தி மேற்கு தொடர்ச்சி மலை உண்டான மிச்சத்தில் பொறந்த அஞ்சாறு கரடுக. காடுகளைச் சுத்தி வறண்டு போன வயக்காடுக. எல்லா ஊர்லேயும் பேஞ்சு முடிஞ்சு இதுக்கு மேலே பொழிய இடமில்லாம கடைசியா வந்து பொழிஞ்சுட்டுப் போன மேகங்களின் எச்சத்தால் சோளம், கம்பு விதைக்கிற மக்கள். மழை பேயாட்டி தட்டாம் பயிரோ, மொச்சையோதான் நம்பிக்கை. விளைஞ்ச வீட்டுக்கு, விளையாட்டி சாமிக்குன்னு வாழ்ற வினோத விவசாயம் தேனி மாவட்டத்துலதான் இருக்கு. சிலுசிலுன்னு காத்து. குளுகுளுன்னு தண்ணி. ஒரு பக்கம் பசுமை. ஒரு பக்கம் வறட்சி. இப்படி ஒரு பின்னணியில் தாய்க்கும் மகனுக்குமான கதையை வெளிப்படுத்தி இருக்கேன்'' என்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. "தென்மேற்கு பருவக் காற்று' படத்தின் இயக்குநர். "கூடல் நகர்' மூலம் கவனத்தை ஈர்த்தவர்.
"தென்மேற்கு பருவக்காற்று' பெயரே கவிதை மாதிரி இருக்கே?
கவிதை மாதிரி இருந்தாலும் கெட்டியான கண்ணீரும் பச்சை ரத்தமும் பெண் வேர்வையும் பிசுபிசுக்கும் வாழ்க்கை இது. காதலும் கவர்ச்சியும் சினிமாவின் மையப் பொருளாக இருக்கும் போது ஓர் உன்னதமான தாயின் அன்பை சினிமாவுக்குக் கொண்டு வந்திருக்கேன். மாக்சிம் கார்க்கியின் "தாய்' நாவல்தான் இதுக்கு தூண்டு கோல். அதன் தாக்கத்துல எழுதின கதையை, நிறைய மெனக்கெட்டு சினிமாத்தனங்களோடு சமரசம் செய்து கொள்ளாமல் எடுத்துருக்கேன். மானுடப் பரப்புக்கு ஒரே பண்பாடு, ஒரே நாகரிகம் இல்லை. ஆனா தாயின் அன்புக்கும் பாசத்துக்கு எங்கும் ஒரே எல்லைதான். அந்த எல்லை வாழ்க்கையின் எந்த மூலைக்கும் நம்மை எடுத்துப் போகலாம். என் வாழ்க்கையில் வந்து போன நான்கு பெண்களின் வாழ்வுதான் இது. அப்படி சொல்லியும் இதைச் சுருக்கிவிட முடியாது. எல்லோருக்கும் தெரிந்த தாயின் அன்பை சினிமா மொழியில் சொல்லும் பெரிய முயற்சி இது. சில கற்பனைகளும் கலந்திருக்கு.
ஒரு தாயின் அன்பை மகனுக்குப் போதிக்கிற கதையா இது?
பூமியில் இன்னும் ஆதி மனிதனின் வாழ்க்கை அற்றுப் போகவில்லை என்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கு. ஆற்றங்கரையில் பொறந்த நாகரிகம் இந்த நொடி எப்படியோ மாறிவிட்டது. இதுதான் நாகரிகம்ன்னு சொல்லி இங்கு என்னவோ நடக்குது. நான் போதனை செய்ய வரல. போதனை செய்றதும் எனக்குப் பிடிக்காது. சாமானிய ஒரு தாயின் வாழ்க்கையை இதில் பதிவு செய்திருக்கேன். வீராயின்னு தமிழ்த் தாயாக சரண்யா இதில் வாழ்ந்திருக்காங்க. எல்லா மனிதனோட வாழ்க்கையும் இங்கு தாயைச் சுத்திதான் இருக்கு. அப்படிப்பட்ட ஒரு தாயின் அன்புதான் இது. கரட்டுக் காட்டு வெயிலில் காதலிக்கும் ஓணான்களின் சலசலப்போடு ஒரு காதலும் இருக்கு. நல்ல சினிமா எடுத்துருக்கேன்னு மனசு சொல்லுது. படுத்தா நிம்மதியா தூக்கம் வருது. இது போதும்.
எல்லோரும் புதியவங்க, இயக்குவது கஷ்டமாக இல்லையா?
விஜய் சேதுபதி, வசுந்தரா, அஜயன் பாலா, ஹேமலதான்னு நிறைய பேர் இருக்காங்க. விஜய் சேதுபதி கூத்துப்பட்டறை மாணவர். இதன் மூலம் பளிச்சிட்டு இருக்கார். "பேராண்மை'யில் நடித்த வசுந்தரா. இதில் பெரிசா வெளிப்பட்டு இருக்கார். அஜயன் பாலாவுக்கு முக்கியமான ரோல். எல்லோரும் சினிமா தெரிந்தவர்கள். எதையும் புரியவைக்க வேண்டி வரலை. நல்ல சினிமான்னா என்னன்னு தெரிந்த செழியன்தான் கேமிரா. நிச்சயம் பெரிய வரவேற்பு இருக்கு. கதைக்கு செழியனும் பக்கபலம்.
கார்த்திக்ராஜாதான் மியூசிக்னு சொன்னாங்க, இப்போ யாரோ புது ஆளாமே?
வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் நிராகரிப்பட்டவன் நான். நிராகரிப்பின் வலி என்னன்னு அறிந்தவன். நான் யாரையும் நிராகரிக்க மாட்டேன். சில காரணங்களால் கார்த்திக்ராஜா இதில் இல்லை. அடுத்த படத்துக்கு நிச்சயம் அவர்தான். இப்போ நந்தகுமார்ன்னு ஜி.வி.பிரகாஷ்குமார்க்கிட்ட இருந்தவர். அபூர்வமான இசை தந்திருக்கார். வைரமுத்து ஒருத்தர்தான் இந்த மாதிரி கதைக்கு பலம். படத்தைப் பார்த்துவிட்டுப் பாட்டெழுதலாம் என்றார். படம் முடிந்து வந்தவர் ""நாங்கள் நதிக்கரையில் தாகத்தோடு இருந்தோம்'' என்று என் தோள் தட்டி மெய்சிலிர்த்தார். அவரின் தனிக் கவனத்தில் பாடல் வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...