இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது' எனும் தேசப்பிதா மகாத்மா காந்தியின் கூற்றுக்கு ஏற்ப கிராமப்புற பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல கோடி நிதியை ஒதுக்கீடு செய்து ஊக்குவிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டங்களைக் கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு இயந்திரம் மட்டுமின்றி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இயங்கிவரும் கிரட் எனும் கிராமியக் கல்வி மற்றும் வளர்ச்சி மையமாகும். பெண்களுக்குத் தொழில் பயிற்சிகளை அளிப்பது, சுயஉதவிக் குழுக்களை உருவாக்குவது, குழந்தைகளைப் பராமரிப்பது, இளையோருக்கான வேலைவாய்ப்புப் பயிற்சி அளிப்பது எனக் கிராமப்புறப் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்நிறுவனம்.
இந்நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கண்மணியிடம் பேசினோம்.
""எங்கள் நிறுவனம் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அக்கால கட்டத்தில் எங்கள் பகுதியில் கிராமப்புற மக்களிடம் எழுத்தறிவு, சுகாதார விழிப்புணர்வு என்பது மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருந்தது. இதைக் கருத்தில்கொண்டே எனது கணவர் அழகேசன் இந்நிறுவனத்தை ஆரம்பித்தார். பின்னர், 1990-ம் ஆண்டில் நான் நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
வயல் வேலை உள்ளிட்ட கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக, வாடிப்பட்டி பகுதியில் உள்ள குலசேகரன்கோட்டை, சாணாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் குழந்தைகள் காப்பகங்களைத் தொடங்கினோம். சமூக நல வாரியத்தின் உதவியுடன், இன்றைக்கு 12 காப்பகங்கள் என்ற அளவில் 250 குழந்தைகள் வரை பராமரித்து வருகிறோம். 6 மாத குழந்தை முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்குக் காப்பகங்களில் மதிய உணவு, விளையாட்டுச் சாமான்கள் அளித்து பராமரிக்கின்றோம்.
கடந்த 1992-ம் ஆண்டில் மதுரை மாவட்டத்தில் சுயஉதவிக் குழுக்களைத் தொடங்கும் பணியை மேற்கொண்டோம். முன்பின் அறிமுகம் இல்லாத பெண்களை ஒருங்கிணைக்கும் இப்பணி எங்களுக்கு மிக சவாலாக இருந்தது. தொடர் முயற்சிகளின் பலனாக, அரசு மகளிர் நலத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களில் சேருவதற்குப் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். தற்போது, வாடிப்பட்டி தாலுகாவில் சுமார் 9 ஆயிரம் பெண்கள் பங்கேற்றுள்ள 700 மகளிர் குழுக்களை அமைத்துள்ளோம். அவர்களுக்குத் தையல் பயிற்சி, சுயவேலை வாய்ப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறோம். ஏற்கெனவே 600 பேருக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வாடிப்பட்டி அருகே ஜவுளிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளதால், பெருகி வரும் வேலைவாய்ப்பு காரணமாக மேலும் 2 ஆயிரம் பேருக்கு தையல் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தண்ணீர், காற்று ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு அவர்களே குடிநீரின் தரத்தை கண்டறியும் பரிசோதனைப் பயிற்சியையும் அளித்துள்ளோம். இதற்கான பரிசோதனை கருவிகளையும் வழங்கியுள்ளோம். மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ஜல்தாரா என்ற திட்டத்தில், குடிநீர் சுத்திகரிப்புத் தொட்டியையும் வழங்கி உள்ளோம்.
அவசர காலங்களில் மகளிர் குழுக்களுக்கு உதவுவதற்காகவே ஆம்புலன்ஸ் வாகனத்தையும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இந்த வாகனம் வாங்குவதற்கு எங்கள் பகுதி எம்எல்ஏ ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்து ஊக்குவித்தார். இதன் மூலம், பாம்பு கடிபட்டவர்கள், வலிப்புநோயால் பாதித்தவர்கள், பிரசவம் ஆகியவற்றுக்கு உதவிட முடிந்தது.
நான் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதால், கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப நல ஆலோசனை மையத்தையும் நடத்தி வருகிறேன். இதுவரை 1998 குடும்பங்களுக்கு குடும்ப ஆலோசனையை வழங்கியுள்ளோம். இதில் 90 சதவீதம் பேர் சமரசம் பெற்றுச் சென்றுள்ளனர்.
தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சமமான வேலைவாய்ப்பு பெருகிவருவதால், கிராமப்புற பெண்களுக்கு உதவித் தொகையுடன்கூடிய கொத்தனார் பயிற்சியை அளிக்க உள்ளோம். இதுவரை இந்த வேலையில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் அரசு மகளிர் திட்டத்தின் உதவியுடன் இப்பயிற்சியை அளிக்க உள்ளோம்.
இதுதவிர, சூரிய ஒளி மூலம் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று அங்குள்ள இயற்கைக் காட்சிகள், மூலிகைகள், பாரம்பரிய உணவு முறைகள் குறித்து எடுத்துக் கூறி, சுற்றுச்சூழல் சுற்றுலாவையும் (உஇஞ-பஞமதஐநங) மேம்படுத்த மாவட்ட சுற்றுலாத் துறையுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம்'' என்றார் கண்மணி.
- வே.சுந்தரேஸ்வரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


