/

பறவைகளின் காதலி!

பறவைகள் என்றால் கொள்ளை பிரியம் ரத்ன வர்ஷினிக்கு. வித்தியாசமான பறவைகளை எங்கு பார்த்தாலும் தன் கேமிராவால் "கிளிக்'கித் தள்ளும் வர்ஷினி,நம்ம கோயமுத்தூர் பொண்ணு. அதைவிட முக்கியம் அவர், விஞ்ஞானியும், பிரபல

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:09 pm

ஜி.மீனாட்சி

பறவைகள் என்றால் கொள்ளை பிரியம் ரத்ன வர்ஷினிக்கு. வித்தியாசமான பறவைகளை எங்கு பார்த்தாலும் தன் கேமிராவால் "கிளிக்'கித் தள்ளும்

வர்ஷினி,நம்ம கோயமுத்தூர் பொண்ணு. அதைவிட முக்கியம் அவர், விஞ்ஞானியும், பிரபல தொழில் மேதையுமான ஜி.டி. நாயுடுவின் கொள்ளுப் பேத்தி.

வர்ஷினி படிப்பது, சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாமாண்டு. விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், கோவை "ஓசை' அமைப்பு நடத்திய வன உயிரினங்கள் கண்காட்சியில் பங்கேற்று தன் புகைப்படங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்.

நீர்ப்பறவைகள், கடல் நண்டு, நத்தைக்குத்தி நாரை, ராக்கொக்கு, செம்பருந்து, கம்புள் கோழி, பச்சைக் கிளி, பெலிகன், கொக்கு, ப்ளூ பேர்ட், நாமக்கோழி, தோகை விரித்தாடும் மயில், சாம்பல் பறவைகள் என்று விதவிதமான பறவைகள், மனதை மயக்கும் இயற்கைக் காட்சிகள், அரிய வகை விலங்கினங்கள் கலர்ஃபுல்லாக வித்தியாசமான "போஸ்'களில் அசத்தின.

கடந்த 4 ஆண்டுகளாக வன உயிரினங்களைப் புகைப்படம் எடுத்து வருகிறார் வர்ஷினி. இவரது ஆர்வத்துக்கு தூண்டுகோலாய் இருப்பவர்கள் தாத்தா கோபால் நாயுடுவும் (ஜி.டி. நாயுடுவின் மகன்), தாய் சாந்தினி, தந்தை வெங்கட் செüத்ரியும்.

""வன உயிரினங்கள் குறிப்பாக பறவைகள் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர் என் தாத்தா கோபால்தான். வானில் பறக்கும் ஒவ்வொரு பறவையையும் ரசிக்க எனக்குக் கற்றுத் தந்தவர் தாத்தா. சுற்றுலா செல்லும்போது அரிய வகைப் பறவைகள், வன உயிரினங்களை சுட்டிக் காட்டி எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவர். விளையாட்டாக ஆரம்பித்த புகைப்பட ஆர்வம், பின்னர் தீவிரமடைந்தது. நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காகவே பறவைகள் சரணாலயங்கள் மற்றும் இயற்கை சுற்றுலாத் தலங்களுக்கு என் பெற்றோர்கள் என்னை அழைத்துச் செல்வார்கள்.

 சில நேரங்களில் அதிகாலை நேரத்தில்கூட பறவைகளைத் தேடிச் செல்ல வேண்டி இருக்கும். அப்போதெல்லாம் என் அம்மா என்னுடனேயே வருவார்கள். இப்படி குடும்பத்தினர் அனைவரின் ஒட்டுமொத்த ஆதரவும், ஒத்துழைப்பும் இருப்பதால்தான் இதுபோன்ற புகைப்படங்களை எடுக்க முடிகிறது...'' என்கிறார் வர்ஷினி புன்னகை மாறாமல். பறவைகளைப் புகைப்படம் எடுப்பதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையின் பாண்டியாறு பள்ளத்தாக்கு, நீலகிரி மலை, திருநெல்வேலியின் கூத்தக்குளம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காரைக்கால், நாகப்பட்டினம், கோடிக்கரை, மைசூர், கோவை அருகே சூலூர், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், கொடைக்கானலின் பெரிஜாம் ஏரி, கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறார்.

  வர்ஷினியின் புகைப்பட ஆர்வத்தைப் பார்த்து இவரது தங்கை சரிதா லக்ஷ்மியும், கண்ணில்படும் இயற்கை காட்சிகளை "சுட்டுத்' தள்ளுகிறாராம். அக்கா, தங்கைகள் எடுத்த புகைப்படங்களைத் தொகுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக டேபிள் காலண்டர் வெளியிட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கி வருகிறார்கள்.

""சென்னையிலுள்ள போட்டோகிராபிக் சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் அமைப்பில் நான் உறுப்பினராக உள்ளேன். இதனால் தேசிய அளவில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சிகளில் இரண்டு முறை பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

கோவை "ஓசை' அமைப்பு சார்பில் மூன்று முறை வன உயிரினங்கள் புகைப்படக் கண்காட்சியில் பங்கேற்று என் படைப்புகளை காட்சிப்படுத்தியிருக்கிறேன். பிஎஸ்ஜி கல்லூரியில் 2009-ல் நடைபெற்ற கோவை மாவட்ட கல்லூரிகளுக்கிடையிலான புகைப் படப் போட்டியில் மூன்றாம் பரிசு கிடைத்தது'' என்னும் வர்ஷினி, 12 ஆண்டுகளாகப் பரத நாட்டியமும் கற்று வருகிறார்.

  பல மேடைகளில் நடனமாடியிருக்கும் வர்ஷினி, தனது சகோதரி மற்றும் தாயுடன் இணைந்து ஜெர்மனியில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். ஆதர

வற்றோருக்கு நிதி திரட்டுவதற்காக நடந்த நிகழ்ச்சி அது.

பறவைகளின் மீது கொண்ட தீராத காதலால் தான் எடுத்த பறவை புகைப்படங்களின் தொகுப்பை மையப்படுத்தி

வெப்-சைட்டையும் துவக்கியிருக்கிறார்.

""இயற்கை மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு அதிகம். சலீம் அலி போன்ற பறவையியல் நிபுணர்கள் எழுதிய பல புத்தகங்களைப் படித்ததன் விளைவாக இந்த ஆர்வம் மேலும் விசாலமடைந்திருக்கிறது. அதுபோன்ற புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிப்பது என் வழக்கம்.

 பறவைகள், விலங்குகள், இயற்கை அமைப்புகளைக் காப்பது இப்போது மகிழ்ச்சியான கடமையாக மாறிவிட்டது எனக்கு. என் வருங்காலப் பாதை எது என்பதை நான் எப்போதோ தீர்மானித்துவிட்டேன். புகழ்பெற்ற வன உயிரினப் புகைப்படக் கலைஞராகப் பேசப்படுவதையே விரும்புகிறேன்...'' என்கிறார் வர்ஷினி கண்களில் நம்பிக்கை ஒளி மின்ன. சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் பறவைக்கு வானமே எல்லை!

படங்கள்: எம்.ஆனந்த்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.