பரணில் தூங்கும் விமானங்கள்!
அதிகாலையில் எழுந்து ஆளற்ற தெருவில் கொஞ்ச தூரம் நடக்கிறேன். இரவின் தடயங்கள் ஒரு கறுத்த இலையைப் போல் தெருவெங்கும் உதிர்ந்து கிடக்கிறது. டீக்கடைகாரர்கள் துயிலெழுந்து அந்த நாளுக்கான பரபரப்பை ஆரம்பித்து வை


அதிகாலையில் எழுந்து ஆளற்ற தெருவில் கொஞ்ச தூரம் நடக்கிறேன். இரவின் தடயங்கள் ஒரு கறுத்த இலையைப் போல் தெருவெங்கும் உதிர்ந்து கிடக்கிறது. டீக்கடைகாரர்கள் துயிலெழுந்து அந்த நாளுக்கான பரபரப்பை ஆரம்பித்து வைக்க சேவல் இல்லாத மாநகரத்து தெருவெங்கும் விட்டு விட்டு இயந்திரக் குரலால் அலாரங்கள் அடிக்கின்றன.
மாநகரத்து பள்ளிகள் ஏழு எட்டு மணிக்கே திறந்துவிடுவதால் பிள்ளைகளை எழுப்பி அலுவலகம் கிளம்ப ஆயத்தமாகும் பெற்றோர்களுக்கான அலாரமாக இருக்கக் கூடும்அது.
கிழக்கே ஒரு குழந்தை, மூடிய தன் பிஞ்சு விரல்களைப் திறப்பதைப் போல் சூரியன் அவிழத் தொடங்குகிறது. அருகாமைக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் தொப்பையைக் குறைக்க சோடியம் விளக்குக் கம்பங்களை எண்ணிக் கொண்டே ஓடத் தொடங்குகிறார்கள். இரவெல்லாம் கண்விழித்த களைப்பில் சோடியம் விளக்குகள் கண்ணடித்துக் கொண்டிருக்கிறது.
விடியற்காலை பொழுதுகள் மட்டும்தான் மாநகரங்களில் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றன. ஆனால், யாருமே அதிகாலையை பார்ப்பதேயில்லை என்பதை மட்டும் மாநகரத்துச் சூரியன் நிச்சயம் தெரிந்து வைத்திருக்கும்.
கிராமத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசித்து ரசித்து இளைப்பாறி மகிழ்ந்த இந்த கிராமத்து இளைஞனின் நெஞ்சமெல்லாம் அந்த மண் தந்த அனுபவங்களும், சந்தோஷங்களும்தான் நிரம்பியிருக்கின்றன.
எழுப்பாமலேயே எழுந்து விளையாட தொடங்கும் கிராமத்துக் குழந்தையைப் போல் மனது எப்போதும் புத்துணர்ச்சியாக இருந்தது அங்கேதான்.
எலி வலையில் சேமித்த நெல்மணிகளைப் போல் தேனீ மாவட்டத்தில் கேரளத்தின் எல்லையை ஒட்டி இருக்கும் கம்பம் கூடலூர் கிராமத்தின் நினைவுகள் இன்னும் யாராலும் களவாடப்படாமல் இருக்கின்றன.
கிராமத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கால் பதித்த என் கால் நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு ஒரு நாள் பிழைப்புக்காக மாநகரத்தின் கதவுகளைத் தட்டி உள்ளே உட்கார்ந்து கொண்டேன். இப்போது என் கிராமத்தை அந்தக் கதவுகளுக்கு பின் இருந்து அவ்வப்போது திறந்து மட்டும் பார்க்கிறேன்.
ஒரு முழுமையான கிராமத்தானை பார்வையாளனாகவே மாற்றி விட்ட நாடகங்கள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டேயிருக்கிறது. நான் இழந்த நேரம் என்னை பரிதாபமாகப் பார்த்துச் சிரிக்கிறது. சினிமாக்காரர்களை அதிகாலை வேளைகளில் சென்றால்தான் பார்க்க முடியும் என்ற எழுதப்படாத விதி போல்தான் என் வாழ்க்கையும் ஆகி விட்டது. பள்ளிக்கூடம் கல்வி அதிகாரிகள் வருகின்ற நாள்களில் மட்டும் பரபரப்பு அடையும். ஒட்டுப் போடப்பட்ட டவுசர்கள் உடுத்தி மாணவர்களும், நீல நிற ரிப்பனுக்கு மேல் கனகாம்பரம் பூ வைத்து பாவாடைச் சட்டையுடன் மாணவிகளும் அமர்ந்து வகுப்பறைகள் உருவானதற்கு அர்த்தம் கொடுப்பார்கள். வாசலில் போடப்பட்ட கோலத்திற்கு கீழே வண்ணப் பொடியில் வணக்கம் அல்லது வெல்கம் எல்லோரையும் வரவேற்கும். மதிய சமையல் அறை வெள்ளாட்டுக் கறி குழம்பால் அல்லோலகல்லோலப்படும்.
கேட்கிற கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்லி விடுங்கள் என மிரட்டி எடுக்கும் வாத்தியாரின் கைத் தடி மட்டும் கண் முன்னே நடமாடியபடி இருக்க, என்னை மட்டும் ஒரு கேள்வியும் கேட்டு விடக் கூடாது என தெய்வத்தை வேண்டிக் கொள்வேன். தாமதமாக வந்த இன்ஸ்பெக்டரோ சமைக்கப்பட்ட வெள்ளாட்டுக் கறியை தின்று ஓய்வு எடுக்கச் சென்று விடுவார்.
நல்ல வேளை கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை என நினைத்துக் கொண்டு வீடு வந்து சேருவோம். ஆண்டாண்டு காலமாகக் கிராமத்தின் துவக்கப் பள்ளிகள் இந்த நிலைமையில்தான் இருக்கிறது. கிராமத்தில் மரங்களில் மீது இருந்து கொண்டு இலைகளுக்கு நடுவில் ஒளிந்து கொண்டு ஆந்தைகள் மாதிரி குரல் கொடுத்து நண்பர்களை அலற வைப்பது அப்போதைய விளையாட்டுகளில் ஒன்று. ஏற முடியாத வழுக்கல்களுடனும், முட்களுடனும் சில மரங்கள் காத்திருக்கும். அவற்றிலும் லாகவமாய் ஏறுவோம். பார்ப்பதற்கு வலுவாகத் தெரியும் சில கிளைகள் கால் வைத்ததும் உடைந்து விடும். கீழே விழுந்து கால் எலும்பு முறிந்து சில நாள்கள் படுக்கையில் கிடப்பேன். மீண்டும் மரங்கள் தங்கள் உயரங்களைக் காட்டி சூதாட அழைக்கும். உயரங்களுடன் சூதாடுவது உன்னதமான விஷயம் அல்லவா?
விமானங்களால் வசீகரிக்கப்படாத குழந்தைகள் உண்டா? இன்றைக்கும் திருவிழா கடைகளில் விமானங்களின் பொம்மைகளைக் கை காட்டி வாங்கி தரச் சொல்லி அடம் பிடிக்கும் குழந்தைகளைப் பார்க்க நேர்கிறது. பறத்தலுக்கான பொருளாதாரச் சாவியை பெற்றோர் வைத்திருக்க சாவி கொடுக்கப்படாத சக்கரங்களுடன் குழந்தைகளைப் பார்த்து கண் சிமிட்டுகின்றன பொம்மை விமானங்கள்.
சிறு வயதில் அடம் பிடித்து நான் வாங்கிய பொம்மை விமானங்களும் ஹெலிகாப்டர்களும் ரெக்கை இழந்து சக்கரம் இல்லாமல், உடைந்து பரணில் உறங்குகின்றன. அவற்றின் ஞாபக அடுக்குகளில் செம்மண் தரைகளின் ஓடு தளங்களும் என் பிஞ்சு விரல்களும் வந்து போக கூடும்.
அப்போதெல்லாம் எப்போதாவது தேனீக்கு வரும் தலைவர்களின் வருகையையொட்டி விமானங்கள் தாழப் பறக்கும். தும்பைப் பூ பூத்துக் கிடக்கும் வயல் திடல்களின் மேல் வண்ணத்துப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் பறக்கும். ஒரு குட்டி ஹெலிகாப்டரைப் போல் ஹெல்மெட் கண்களுடன் இருக்கும் அவற்றின் உருவத்தால் ஈர்க்கப்பட்டு துரத்திக் கொண்டே ஓடுவோம். நூலில் அவற்றைக் கட்டி விமானமாக்குவோம். ஆயினும் இந்த ஹெலிகாப்டர்களுக்கு உயரங்கள் சாத்தியமில்லை.
எங்கள் தலைக்கு மேலாக தாழப் பறந்து தேனீக்கு போகும் ஹெலிகாப்டர்களை துரத்திக் கொண்டே ஓடுவோம். பல்வேறு தலைவர்கள் எங்கள் ஊர் சிறுவர்களின் துரத்தல்களுடன்தான் இன்றும் இறங்கி கொண்டிருக்கிறார்கள். வரலாற்றின் பக்கங்களில் சிறுவர்களுக்கு இடம் இல்லையென்பதால் வெளி உலகத்திற்கு எங்களைத் தெரியாமல் போய்விட்டது.
சினிமாவுக்காக சென்னை வந்து போன பொழுதுகளில் எல்லாம் நான் பயணமாகும் பஸ், மீனம்பாக்கம் விமான நிலையத்தை கடக்கும் அபூர்வ விநாடிகளில் விமானங்களை ஆச்சரியமாகப் பார்ப்பேன். ஏதேனும் ஒரு விமானம் மேலே எழும்பும் அல்லது கீழே இறங்கும்.
மாநகரவாசியான நீண்ட வருடங்களுக்குப் பிறகும் ஆகாயத்தில் பறக்கும் விமானங்களின் சத்தம் கேட்டால் இன்றைக்கும் அதே வியப்புடன் அண்ணாந்து பார்க்கிறேன். சென்னையின் கட்டிடங்கள் அனைத்திலும் ஏறிப் பார்த்தாகி விட்டது. கிராமத்தின் களத்து மேடுகளில் ஏறிப் பார்த்த வசீகரம் வேறு வடிவத்தில் இடம் பெயர்ந்து விட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...