/

கருவூலம்: பல்லுயிரியம் (BIO DIVERSITY)

வம்ச நாசத்திற்கான மிக முக்கிய காரணம் உயிரிகளின் இருப்பிட அழிவே (HABITATE LOSS). பயிர்ப்பரப்பு அதிகரித்தல், சாலைகள் குடிநீர்த்திட்டங்கள், தொழிற்சாலைகள் கட்டுமானம், சுற்றுலா மேம்பாடு

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:04 pm

கோட்டாறு கோலப்பன்

1.வாழ்விடங்கனின்சிதைவு மற்றும் அழிவு

வம்ச நாசத்திற்கான மிக முக்கிய காரணம் உயிரிகளின் இருப்பிட அழிவே (HABITATE LOSS). பயிர்ப்பரப்பு அதிகரித்தல், சாலைகள் குடிநீர்த்திட்டங்கள், தொழிற்சாலைகள் கட்டுமானம், சுற்றுலா மேம்பாடு, அதிகரித்து வரும் குடியிருப்புப் பகுதிகள் போன்றவை உயிரிகளின் இருப்பிடத் சிதைவுக்கு முக்கிய காரணங்கள்!

2. அன்னிய உயிரிகளை அறிமுகம் செய்தல்

ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்த உயிரிகளை திணைசார் (ENDEMIC SPECIES) உயிரிகள் என்கிறோம். பல வருட சமரசங்களின் இறுதியில்தான் ஒரு உயிரி குறிப்பிட்ட அப்பகுதி சார்ந்த உயிரியாக மாறுகிறது. தெரிந்தோ தெரியாமலோ பிற பகுதி சார்ந்த உயிரிகளை இப்பகுதிக்குக் கொண்டுவரும்போது பல்லுயிர்ப் பெருக்கம் சாத்தியப்படாமல் போகிறது. தமிழகத்தில் "பார்த்தீனியம்' செடியின் பரவல் திணை சார்ந்த தாவரங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியதை இதற்கு சான்றாகக் கூறலாம். 

3. இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகச் சுரண்டல்

இயற்கை வளங்களை தொடர்ந்து அளவுக்கு அதிகமாக சுரண்டிவந்தால் 2015 ஆம் ஆண்டில் வெப்ப மண்டலக் காடுகளிலுள்ள உயிரிகளில் எட்டு சதவிகிதம்வரை என்றென்றைக்கும் மீட்டு வரமுடியாதபடிக்கு முற்றிலும் அழிந்து போகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றார்கள். 

4. சுற்றுச்சூழல் மாசு.

மண், நீர், காற்று மண்டலம் போன்றவற்றில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாசுபாடு பல்லுயிரியம் சந்திக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தல். 

5.பருவநிலை மாற்றம்.

பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரிப்பு, அவற்றை வீரியமிழக்கச் செய்யும் திறன் படைத்த உயிரிகளின் எண்ணிக்கையிலும் ஏற்பட்டுள்ள அசாதாரணமான குறைபாடு போன்றவை ஆபத்தான பருவநிலை மாற்றங்களுக்கு காரணமாகியுள்ளன. வெப்பநிலை அதிகரிப்பையும், அதன் தொடர் விளைவான இருப்பிடச் சிக்கலையும் சமாளிக்க முடியாமல் மறைந்தது போகின்றன. சுமார் 10000 உயிர்வகைமைகள் காணாமல் போய்விட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் சுமார் 60,000 உயிர் வகைமைகள் காணாமல் போய்விடும் என எச்சரிக்கின்றனர். 


ஆபத்துக்கு உள்ளான உயிரினங்கள் 
(ENDANGERED SPECIES) 

"சர்வதேச யூனியன் ஃபார் கன்சர்வேஷன் ஆஃப் நேச்சர் அண்ட் நேச்சுரல் ரிசோர்ஸ்' அமைப்பின் புள்ளி விவரப்படி தற்போது இந்த பூமியிலிருக்கும் சுமார் 40 % உயிரிகளும் அபாயகரமான கட்டத்தில் இருக்கின்றனவாம். இவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு நாடும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

ஒரு உயிரியின் கன்சர்வேஷன் தகுநிலையை அடிப்படையாகக் கொண்டே அதற்கு எந்தவிதமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. தற்போதைய அதன் எண்ணிக்கை, காலந்தோறும் அந்த எண்ணிக்கையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், அது இப்போது சந்தித்து வரும் அச்சுறுத்தல்கள் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையிலேயே ஒரு உயிரியின் கன்சர்வேஷன் தகுநிலை முடிவு செய்யப்படுகிறது.இத்தகைய ஆய்வுகளின் முடிவில் ஐ.யூ.சி.என். வம்ச நாச அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள (THREATENED SPECIES) வகை மாதிரிகளின் பட்டியலை எல்லா ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இதுவே ரெட் டேட்டா புக்! இதில் ஒரு உயிரியின் கன்சர்வேஷன் தகுநிலை அடிப்படையில் அது பல்வேறு பிரிவுகளிலாக அடக்கப்படுகிறது. அத்தகைய சில முக்கியப் பிரிவுகள். 

1. வம்ச நாசம் ஏற்பட்டவை. (EXTINCT)
சுவடையில்லாமல் முற்றிலுமாக அழிக்கப்பட்டவை. சான்று சஞ்சாரி புறா, டோடோ பறவை, கரீபியன் மங்ஸீன்.
2. திணை பூமியில் வம்ச நாசம் நேரிட்டவை.
(EXTINCT IN THE WILD) தமது இயல்பான வாழ்விடங்களில் அருகிப்போய் சரணாலயங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில் மட்டுமே காணப்படுபவை. சான்று-தென் சீனப்புலி, 
3. அபாயகரமான ஆபத்தை எதிர்நோக்குபவை. (CRITICALLY ENDANGERED) மிகக் குறைந்த எண்ணிக்கையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும், அபாயத்தின் விளிம்பில் நிற்கும் உயிரிகள். சான்று- ஐரோப்பிய ஈல், சீனாவின் மிகப் பெரிய சலமாண்டர், ஆசிய சிறுத்தை, இந்தியக் கழுகு, ஜாவன் காண்டாமிருகம், கொரில்லா, சுமாக்ரல் உராங் உட்டான்.
4. அழிவின் விளிம்பில் இருப்பவை. (ENDANGERED)
பாதுகாக்கப்படாவிட்டால் வெகு சீக்கிரத்திலேயே மேலே குறிப்பிட்ட மூன்றாவது பிரிவுக்குள் செல்லும் வாய்ப்புள்ளவை. சான்று- பாண்டா, வரையாடு, வங்காளப்புலி, ஆல்பட்ரோஸ்.
5. ஆபத்தை எதிர்நோக்குபவை (VULNERABLE)
இருப்பிட சூழல் சுருங்கிக்கொண்டே வருவதால் ஒரு கட்டத்தில் மேலே குறிப்பிட்ட நான்காவது பிரிவுக்குள் சென்றுவிடும் அபாயமுள்ள உயிரிகள். சான்று-ஆசிய சிங்கம், ஆசிய யானை. 
6. பாதுகாப்பு தேவைப்படுவன (CONSERBATION DEPENDANT)
தற்போதைய ஆபத்து எதுவும் இல்லையென்றாலும், பாதுகாப்பு தேவைப்படும் உயிரிகள். சான்று- புள்ளி கழுதைப் புலி, சிறுத்தைச் சுறா. 

மேலும் சில தகவல்கள்.

இந்தியாவின் பல்லுயிர்ச் செழுமை

பல்லுயிர் செழுமை நிறைந்தது இந்தியா. 16 வகையான வனங்கள் இந்தியாவில் உள்ளன. சுமார் 396 வகையான முதுகெலும்புள்ள உயிரினங்கள்
(VERTEBRATES) இந்தியாவின் மட்டுமே காணப்படுகின்றன. சுமார் 44 வகையான பாலூட்டிகள் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமே காணப்படும் பறவையினங்கள் 55. ஊர்வன பிரிவைச் சேந்த 187 இனங்கள், நிலநீர் உயிரினங்களில் 11 இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன. 
பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள்- ஒரு வரலாற்றுப் பார்வை.
மனிதன் இந்த இயற்கையின் ஒரு அம்சம் மட்டுமேயன்றி அதன் உரிமையாளன் அல்ல என்னும் உணர்வே பல்லுயிரியப் பாதுகாப்பின் அடிப்படை அம்சம்!
1730 ஆம் ஆண்டு மரங்களை வெட்ட அனுமதிக்கப்படாமல் "பிஷ்ணோய்' இன மக்கள் நடத்திய போராட்டத்திலிருந்து "சிப்கோ இயக்கம்' உருவானது. 
1861 ஆம் ஆண்டு ஓவியர்களின் கூட்டு முயற்சியால் ஃபவுண்டன் ஃப்யூ வனப்பகுதியில் பிரான்சின் முதல் தேசியப் பூங்கா உருவானது. 
1864 ஆம் ஆண்டு இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் மனித நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் ஜான் பெர்க்கின்சனின் "மேன் அண்டு நேச்சர்' புத்தகம் வெளியானது. 
1895 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் பறவைகளின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட முதல் சர்வதேச மகாநாடு. 1918 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய மரங்களான "ரெட் வுட்' மரங்களைப் பாதுகாக்க (SAVE THE RED WOOD LEAGUE) என்னும் அமைப்பு கலிபோர்னியாவில் உருவாக்கப்பட்டது. 
1946 ஆம் ஆண்டு திமிங்கில வேட்டைக்கு எதிரான அமைப்பு.
1948 ஆம் ஆண்டு அகில உலக இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவானது.
1961 ஆம் ஆண்டு ஜூலியன் ஹக்ஸ்லியின் தலைமையில் "உலக வனஉயிரியல் நிதி' உருவானது. 
1971 ஆம் ஆண்டு கனடாவின் வான் கூவர் நகரில் "கிரீன் பீஸ்' அமைப்பு துவங்கப்பட்டது. 
1972 ஆம் ஆண்டு சுவீடனில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் மகா நாட்டில் (UNITED NATIONS ENVIRONMENT PROGRAMME -UNEP) அமைப்பு வித்தூன்றப்பட்டது. 
1975 ஆம் ஆண்டு வம்ச நாசத்தை எதிர்நோக்கும் உயிரினங்களோடு தொடர்புடைய வணிகச் சந்தையை தடை செய்யும் (CONVENTION  OF INTERNATIONAL TRADE IN ENDANGERED SPEICIES OF WILD FAUNA AND FLORACITES) உடன்படிக்கை நடைமுறையில் வந்தது!
1979 ஆம் ஆண்டு இடம் பெயர் உயிரிகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் (CONVENTION ON THE SPIECIES OF WILD ANIMALS - EMS) உடன்படிக்கையும் வந்தது.
1986 ஆம் வருடம் இயற்கை மற்றும் வன உயிரினப் பாதுகாப்புக்காக நிதி ஏற்படுத்தப்பட்டது. 
1997 ஆம் வருடம் பசுமைக்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 
2004 ஆம் வருடம் அரிய கடல் பறவைகளின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை.
2007 ஆம் வருடம் நோபல் பரிசு பெற்ற சுற்றுச் சூழல் ஆர்வலர் "வங்காரி மத்தாயின்' முயற்சியால் நூறு கோடி மரங்கள் நடும் இயக்கத்தின் துவக்கம்!
2008 ஆம் வருடம் டால்பின்கள் பாதுகாப்பு வருடமாகியது.
2009 ஆம் வருடம் சர்வதேச பூமி வருடமாகியது!!
2010 ஆம் வருடம் சர்வதேச பல்லுயிர் வருடமாக அனுசரிக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு சர்வதேச வன வருடமாக ஆகியது!

நிறைவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.