லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆயிரம் மாரத்தானில் ஓடினேன்!

'இன்றைய நவீன காலகட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கலாம்.

News image
Updated On :7 மார்ச் 2026, 10:39 pm

'இன்றைய நவீன காலகட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கலாம். எனது சாதனையை மற்றொருவர் விரைவில் முறியடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை!' என்கிறார் கோவையைச் சேர்ந்த மூத்த தடகள வீரர் சிவபாலன் பாண்டியன். 68 வயதில் ஆயிரம் மாரத்தானில் ஓடி, சாதனைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் 1958-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி பிறந்தவர் சிவபாலன் பாண்டியன். இவரது தந்தை பால்பாண்டி இந்திய ராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றியதால், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 1974-ஆம் ஆண்டு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர்.

இவர் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று தற்போது 1,004 போட்டிகளை நிறைவு செய்து, இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை குறித்து கோவையை அடுத்த கோவைப்புதூரில் குடும்பத்துடன் வசித்து வரும் சிவபாலன் பாண்டியன் கூறியதாவது:

'எனக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதால் தினமும் அதிக தூரம் நடக்கத் தொடங்கினேன். இதன் பிறகு 2013-ஆம் ஆண்டு முதல் மாரத்தானில் ஓடத் தொடங்கினேன். அந்தச் சமயத்தில் 6 கிலோ மீட்டர், 24 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. அப்போது 42.195 கிலோ மீட்டர் பிரிவில் பங்கேற்று பந்தய தூரத்தை 5 மணி நேரம், 46 நிமிடம், 12 விநாடிகளில் கடந்துள்ளேன்.

நாள்தோறும் குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். ஓர் ஆண்டில் அதிக அளவிலான மாரத்தானில் ஓடியதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் 2 முறை இடம் பிடித்துள்ளேன். இதில், 2018-ஆம் ஆண்டில் 93 முழு மாரத்தானிலும், 2019-ஆம் ஆண்டு 114 முழு மாரத்தானிலும் ஓடியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான்டியாகோவில் 2015-ஆம்ஆண்டு மே 31-ஆம் தேதி நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்றபோது, இரண்டு முறை புற்றுநோய் பாதித்த 92 வயது மூத்த தடகள வீராங்கனை ஒருவர் 42.195 கிலோ மீட்டரில் என்னுடன் ஓடிவந்தார். அந்தப் போட்டியின்போது ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாகப் பெற்று கேன்சர் சொசைட்டிக்காக அவர் வழங்கினார்.

அவரது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் முதன் முதலில் 72 வயதில்தான் மாரத்தானில் கலந்து கொண்டார் என்பதும் தெரியவந்தது. இதன் பின்னர் எனக்குள் ஏற்பட்ட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மாரத்தானில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 47 மாநிலங்களில் நடைபெற்ற 125 மாரத்தான் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள 3 மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கே ற்கத் திட்டமிட்டுள்ளேன்.

உலகில் உள்ள 7 கண்டங்களில் அண்டார்டிகாவைத் தவிர மற்ற 6 கண்டங்களில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்றுள்ளேன். தென் துருவத்தில் உள்ள பனிக்கண்டமான அண்டார்டிகாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் மாரத்தானிலும் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளேன். இதன் மூலமாக உலகில் உள்ள 7 கண்டத்தில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்ற பெருமையைப் பெறமுடியும். தற்போது நான் 3 முறை தொடர்ச்சியாக 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 110 கிலோ மீட்டரை கடந்துள்ளேன். அடுத்த மாதம் புதுதில்லியில் 4 -ஆவது முறையாக 24 மணி நேரம் ஓடவுள்ளேன்.

நான் முதன் முதலாக 54 வயதில் மாரத்தானில் பங்கேற்ற நிலையில் தற்போது 68 வயதில் 1,004 போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இந்தப் போட்டிகளுக்காக மட்டும் தற்போது வரையில் ரூ.5 கோடி வரை செலவிட்டுள்ளேன். வசதி வாய்ப்பு இல்லாத இளைஞர்களும் போட்டிகளில் பங்கேற்கும்போது அவர்களுக்கான நிதியைக் கொடுக்க தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் முன்வருவது மிகவும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆகவே, பணம் இல்லாதவர்களும் மாரத்தானில் பங்கேற்று சாதிக்க முடியும்!' என்றார் சிவபாலன் மணிகண்டன்.

படம் : மு.சச்சின் துவாரகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.