
மரம் வளர்ப்போம் தேசம் காப்போம்!
நாட்டிலேயே மிக உயரமான முருகன் சிலைகளில் ஒன்றாக ஏழடி உயரத்தில் மூலவராக வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் அருள்பாலித்து வரும் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது.

நாட்டிலேயே மிக உயரமான முருகன் சிலைகளில் ஒன்றாக ஏழடி உயரத்தில் மூலவராக வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் அருள்பாலித்து வரும் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. வல்லன் எனும் அரக்கனை முருகன் அழித்துக் கோயில் கொண்டதால், இந்த ஊருக்கு 'வல்லக்கோட்டை' என்று பெயர் உண்டாகியிருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஒரகடம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்குப் பின்புறத்தில் கோயிலுக்குச் சொந்தமான 6.50 ஏக்கர் நிலம் பயன்பாடில்லாமல் இருந்தது.
அந்த இடத்தில் கோயிலுக்கும், பொதுமக்களுக்கும் நன்மைதரக் கூடிய வகையில் பயன்தரும் சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பசுமைக்காடுகளை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார் சோ.செந்தில்குமார் .
'கோயில் அலுவலராக இருப்பவருக்கு மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் வந்தது எப்படி?' என்று அவரிடம் கேட்டபோது:
'மரங்கள் மனிதர்களுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்று ஒரு நூலைப் படித்தேன். பிறக்கும்போது, தொட்டிலாக, நடக்க முயலும்போது நடை வண்டியாக, படுத்துறங்கும்போது கட்டிலாக, வயதானவுடன் நடக்க ஊன்று கோலாக, இறந்தவுடன் தூக்கிச் செல்ல பாடையாக என மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் மரங்கள் மனிதர்களுக்கு உதவுகின்றன.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து சமநிலையைக் காக்கவும், சுவாசிக்கத் தேவையான பிராண வாயுவை வெளியிடவும், மழைப்பொழிவைத் தூண்டி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், மண் அரிப்பைத் தடுக்கவும், வெப்பத்தைத் தவிர்த்து பூமியைக் குளிர்ச்சியாக வைக்கவும், உயிரினங்களுக்கு உறைவிடமாகவும், உணவாகவும், மருந்துகள், மரச் சாமான்கள் தயாரிக்கவும் என மரங்களின் பயன்பாடுகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் துளிர் விட்டது. நான் நிர்வாக அலுவலராக இருக்கும் வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்குப் பின்புறத்திலேயே பயன்பாடில்லாமல் கோயிலுக்குச் சொந்தமான இடம் 6.50 ஏக்கர் நிலம் இருப்பது சட்டென்று நினைவுக்கு வந்தது. இதன்படி அந்த இடத்தைப் பசுமைக்காடாக, பூஞ்சோலையாக மாற்றுவது என்று முடிவு செய்தேன்.
முதலில் கோயில் இடத்தைச் சுற்றிலும் முள்வேலியும், நீரின் தேவைக்காக இரு இடங்களில் ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்பட்டது. விதைகள் தன்னார்வ அமைப்புடனும், பல்வேறு கல்லூரி மாணவர்களுடனும் இணைந்து தேக்கு, வேங்கை, நாவல், மகிழம் உள்ளிட்ட பலன்தரும் பல்வேறு மரக்கன்றுகளும், பூச்செடிகளும் அங்கு நடப்பட்டன.
இந்தத் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருமான கே.தென்னரசு தொடங்கி வைத்தார்.
முதல் நாளிலேயே 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. தண்ணீர் தேவைக்காக இரு இடங்களில் சிறிய குளங்கள் தூர்வாரும் பணியும் தொடங்கி நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் ஒரு மாதத்துக்குள் நடுவதற்குத் திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம்.
கோயிலுக்கு அருகிலேயே பசுமைக்காடுகளையும், பூஞ்சோலைகளையும் உருவாக்கி, அதை மிகச் சிறந்த நறுமணம் வீசும் அழகிய நந்தவனமாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.
நந்தவனமாக உருவாக்கியவுடன் அதில் விளையும் பூக்களும், கனிகளும் இறைவனுக்கு அணிவிக்கப்படும். பக்தர்களுக்கும் பிரசாதமாகவும் வழங்கப்படும். மரங்களை வளர்த்து தேசம் காப்போம்' என்கிறார் செந்தில்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






