வரலாற்றை ஆவணப்படுத்துவதில் பின்தங்கியே இருக்கிறோம்...
மனநிறைவு தராத எந்த ஆய்வுப் பணியையும் நான் செய்ததில்லை.
மனநிறைவு தராத எந்த ஆய்வுப் பணியையும் நான் செய்ததில்லை.
By தினமணி செய்திச் சேவை
Vishwanathan
அருள்செல்வன்
'மனநிறைவு தராத எந்த ஆய்வுப் பணியையும் நான் செய்ததில்லை. அந்த வகையில் நான் கொடுத்துவைத்தவன். மொழி, இனம் குறித்தும் இன்று பரப்பப்படும் மிகைப் பெருமிதங்கள் உண்மையைத் தேடும் வரலாற்று ஆய்வுக்கு தடையாக இருக்கிறது.
இது, இரு முனையும் கூரான கத்தி. பெருமிதம் இல்லாவிட்டால், ஓர் இனம் ஏன் தன் வரலாற்றைத் தேடப்போகிறது? ஆனால், மிகைப் பெருமிதம் அதற்குத் தடையாகவும் மாறிவிடுகிறது. வல்லுநர்களுக்கிடையே நடக்க வேண்டிய விவாதங்கள் பொது வெளியில் நடக்கும்போது ஏற்படும் அபத்தங்களுக்கும் ஆபத்துகளுக்கும் அளவில்லை'' என்கிறார்
வரலாற்று ஆய்வாளரான முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
எழுத்தாளர் புதுமைப்பித்தனின் எழுத்துகளைச் செம்பதிப்பாகப் பதிப்பித்தவர் வேங்கடாசலபதி. நாற்பது ஆண்டுகளில் தமிழ் வரலாறு, பண்பாடு சார்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்தவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், 2024ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி விருதை பெற்றார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
உங்கள் இளமைப் பருவம் எப்படி இருந்தது?
பிறந்தது வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட குடியாத்தம். வளர்ந்தது முழுவதும் சென்னையில்தான். கலைஞர் கருணாநிதி நகரில்தான் என் இளமைக்காலம். ஒன்பதாம் வகுப்பு வரை அசோக் நகர் ஜவகர் வித்யாலயாவில் படித்தது, ஆங்கிலப் பயிற்சிக்கு வழிகோலியது. கோடம்பாக்கம் அரசுப் பள்ளியில் படித்தபோது, தமிழுக்கு அடிப்படை அமைத்துத் தந்ததோடு அடித்தட்டு முதல் மேல்தட்டு வரை அனைத்து வர்க்க மாணவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தது. அந்தப் பள்ளியில்தான் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும் படித்தார்.
உங்களுக்குள் வரலாற்று ஆர்வம் எப்படி வந்தது? யார் வளர்த்தார்கள்?
விளையாட்டுகளில் தோல்வியை மட்டுமே அறிந்தேன். புத்தகங்கள் வேறு உலகத்துக்கு வழிகாட்டின. ஆங்கில நூல்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த என்னை மதுரை உலகத் தமிழ் மாநாடு (1981), பாரதி பிறந்த நூற்றாண்டு (1981-82), பாரதிதாசன் பாடல்கள் தமிழுக்கு மடைமாற்றிவிட்டன. தமிழ்ப் பற்றுதான் என்னை இயக்கிவருகிறது. என்னை உருவாக்கியவர்கள் 'முகம்' மாமணியும், புலவர் த. கோவேந்தனும்தான்.
அறிவுலகத்தையும் இலக்கியத்தையும் இவர்கள் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். பதினைந்து வயதுச் சிறுவனான எனக்குப் பொறுமையாக எத்தனையோ விஷயங்களை விளக்கினார்கள். ஆர்வத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, வ.உ.சி. வாழ்க்கையை ஆராய்ச்சி செய்யத் தொடங்கியிருந்த எனக்கு, அவர்கள் இருவரும் ஊக்கம் அளித்து, வழிகாட்டினர்.
புதுமைப்பித்தன் படைப்புகளைத் தொகுக்கும் எண்ணம் எப்படி வந்தது?
புதுமைப்பித்தன் 1948இல் மறைந்த பிறகு அவருடைய படைப்புகள் மீண்டும் வெளிவரக் காரணமாக இருந்தவர் தொ.மு.சி. ரகுநாதன். தமது வாழ்நாள் முழுவதும் புதுமைப்பித்தனைப் போற்றியவரான எழுத்தாளர் சுந்தர ராமசாமியும் புதுமைப்பித்தன் படைப்புகள் சிறப்பாக வெளிவர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருடைய மகன் கண்ணன் 'காலச்சுவடு' பதிப்பகத்தைத் தொடங்கியிருந்தார்.
இந்தத் தருணத்தில் நானும் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்திருந்தேன். வ.உ.சி. ஆராய்ச்சியின்போது, புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத எழுத்துகள் பலவற்றைக் கண்டுபிடித்திருந்தேன். 'தினமணி' உதவி ஆசிரியரான ராஜமார்த்தாண்டன் 'தினமணி' வைரவிழாவையொட்டி புதுமைப்பித்தனின் கூர்மையான மதிப்புரைகளைக் கண்டெடுத்திருந்தார்.
இவற்றையெல்லாம் 'காலச்சுவடு' இதழில் வெளியிட்டோம். இதன் தர்க்கரீதியான வளர்ச்சியாகப் புதுமைப்பித்தனின் படைப்புகளை முழுமையாக வெளியிட முடிவு செய்தோம். புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலம், மகள் தினகரி சொக்கலிங்கம் ஆகியோர் முறையான அனுமதியை மகிழ்ச்சியுடன் அளித்ததோடு ஆர்வத்துடன் ஒத்துழைப்பையும் கொடுத்தார்கள்.
இந்த முயற்சியில் உங்களுக்குக் கிடைத்த அனுபவம் எப்படி இருந்தது ?
புதிய செய்திகள் கிடைக்கும்போது பலருடைய பிம்பங்கள் கலைந்துபோவது வழக்கம். மாறாக, புதுமைப்பித்தனின் மேதைமை பெயர் கொள்வதைக் கண்டது புதுமையான அனுபவம். என்னுடைய பதிப்புகளை வாசகர்கள் எதிர்கொண்ட விதமும், அவர்கள் அளித்த வரவேற்பும் ஆச்சரியத்தைத் தந்தன. சிலர் அதைச் 'செம்பதிப்பு' என்று கேலியாகச் சொல்லப் போய் அதுவே சிறப்புப் பெயராக நிலைத்துவிட்டதும் புதுமை.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பணி மூலம் நீங்கள் செய்துள்ள குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகள் என்னென்ன?
மால்கம் ஆதிசேஷையாவின் தொலைநோக்கால் உருவான 'எம்.ஐ.டி.எஸ்.' என்கிற சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமானது ஐம்பதாண்டுகளுக்கும் மேல் சமூக அறிவியல் துறைகளில் உயரிய ஆய்வு மையமாக விளங்குகிறது. உலகம் மதிக்கும் பல அறிஞர்களைக் கொண்ட இந்த நிறுவனம் என்னுடைய ஆய்வுகளுக்கு ஆதார பலமாக விளங்குகிறது.
தமிழ் சார்ந்து சில முன்னெடுப்புகளை எங்கள் நிறுவனம் எடுத்துள்ளதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு என்று சொல்லலாம். பேராசிரியர் எஸ். நீலகண்டன் எழுதி, எங்கள் நிறுவனம் வெளியிட்ட மூன்று பொருளியல் நூல்களும் தமிழ் அறிவுலகத்துக்குப் பெரிய கொடை.
மனோன்மணீயம், சென்னைப் பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் பணி, சிங்கப்பூர், பிரான்ஸ், சிகாகோ, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியர் பணி அனுபவம் பற்றி..?
பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். எவ்வளவோ வேறுபாடுகள். சமூகத்தில் இருப்பதைப் போலவே பல்கலைக்கழகங்களிலும் ஏற்றத்தாழ்வுகளும் படிநிலைகளும் உள்ளன. அரசு பல்கலைக்கழகங்களைப் போலவே இப்போது தனியார் பல்கலைக்கழகங்களிலும் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது.
எடுத்துக்காட்டாக, நான் முனைவர் பட்டம் பெற்ற ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கும் இடைப்பட்ட தூரம், எல்லாவகையிலும், கொஞ்சநஞ்சமல்ல.
பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் உள்ளூர்த் தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. மாணவர் சேர்க்கையிலும் ஆசிரியர் பணியமர்த்தலிலும் இது வெளிப்படுகின்றது. உலகத் தரப் பட்டியலில் இடம்பெற வேண்டுமானால் இந்த நிலை மாற வேண்டும். அறிவுச் சூழலும் மிகப் பலவீனமாக உள்ளது. உள்கட்டமைப்புப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
சிகாகோ, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் அதிகம். இளங்கலை மாணவர் வாரத்துக்கு இருநூறு பக்கங்கள் படித்தே ஆக வேண்டிய கட்டாயம் அங்கு நிலவுகிறது. பேராசிரியர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்குத் தொடர்ந்து தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் மட்டும் இதுவரை நூறு பேர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. அதுவும் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் வருகைக்குப் பின்னர் சொல்ல வேண்டியதில்லை. என்றாலும் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்' குறித்து ஆய்வு செய்ய தூண்டுதலாக இருந்தது எது? அந்தப் பயணம் எப்படி? வரலாற்றில் வ.உ.சி.க்கு உரிய இடம் கிடைக்கவில்லையா?
நான் சிறுவயதிலேயே வ.உ.சி. மூலமாக ஆராய்ச்சித் துறைக்குள் நுழைகிறேன். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பயணம் தொடர்கிறது. இதுவரை தமிழில் எட்டு நூல்களும் ஆங்கிலத்தில் ஒரு பெரிய நூலும் வெளியிட்டுள்ளேன். அதில் ஒன்றுதான் 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' வ.உ.சி. கைதானதும் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் பெரிய அளவில் கிளர்ச்சி செய்தார்கள். இது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சாகசம் மிகுந்த அத்தியாயமாகும். வ.உ.சி.யின் தலைமையை முன்னிறுத்தும் இந்த நூலில் எளிய மக்களின் பங்களிப்பையும் முக்கியமாகக் கவனப்படுத்தியிருக்கிறேன்.
'திருநெல்வேலி எழுச்சியில் பங்கு கொண்டதால் பல சிறுவர்களுக்கு நீதிபதியிடமிருந்து பிரம்படி கிடைத்தது' உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. இந்த நூலைப் படித்த பலர் உணர்ச்சிவசப்பட்டார்கள். நாவலைப் போல் சுவாரசியமாக வாசிக்க முடிந்தது என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். வ.உ.சி. என்ற வீர நாயகனின் வெற்றி இது என்றுதான் சொல்ல வேண்டும்.
நமது அரசியல், பண்பாட்டு ஆளுமைகளைப்பற்றி போதுமான அளவு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. நமது பல்கலைக்கழக அறிவுச் சூழலும் இதற்கு ஒரு காரணம். தமிழ்நாட்டில் வ.உ.சி.யின் பெயர் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கின்றது என்றாலும், வெளியே அவர் பெயர் கொண்டுசெல்லப்படவில்லை. தென்னாட்டைப் பற்றி வடநாட்டில் அறியாமையும், உதாசீனமும் நிலவுவதும் உண்மை. இந்த நிலை என்றுதான் மாறுமோ, தெரியவில்லை.
பெரிய தலைவர்களையும் பண்பாட்டு ஆளுமைகளையும் சாதிச் சிமிழுக்குள் அடைக்கும் போக்கு உண்மை ஆராய்ச்சிக்குத் தடையாக உள்ளது. விமர்சனபூர்வமாக எழுதுவதற்குரிய சூழலும் இல்லை.
சாகித்திய அகாதெமி விருது அங்கீகாரம், எதிர்வினைகள் பற்றி என்ன உணர்கிறீர்கள்?
சாகித்திய அகாதெமி விருது முற்றிலும் எதிர்பாராதது. நண்பர்களுடைய பரவசம் அதைவிட ஆச்சரியம் தந்தது. வ.உ.சி.க்குச் செய்யப்பட்ட மரியாதையாகவே பலரும் இந்த விருதை கருதினர் என்பதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. வ.உ.சி.யின் தன்னலமற்ற தியாகமும் முன்னுதாரணமில்லாத செயலூக்கமும் இன்னும் பலர் அறிந்துகொள்வதற்கு இந்தப் பரிசு வழிகோலியுள்ளது. ஆராய்ச்சித் துறையில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கும் இது தூண்டுகோலாக அமையலாம்.
கட்டுரை நூல்கள் அதிகம் எழுதியுள்ள நீங்கள் கதை, கவிதைப் பக்கம் செல்லவில்லையே?
ஆய்வுக்கட்டுரை மட்டுமல்ல; பதிப்பு வேலைகளையும்கூடப் படைப்பூக்கத்தோடுதான் செய்கிறேன். என் நூல்களிலெல்லாம் இது வெளிப்படுகிறது. புனைகதை, கவிதை வாசிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறேன். இலக்கிய வாசிப்பு இல்லாத ஒருவர் சுமாரான வரலாற்றாசிரியராகக்கூட இருக்க வாய்ப்பில்லை என்பது எனது தீர்மானமான கருத்து. மற்றபடி புனைவிலக்கியம் எழுதாமல் இருப்பதற்குக் காரணம், அதனால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை என்பதே.
'நாவலும் வாசிப்பும்' எழுதிய வகையில் இன்றைய நாவலின் வளர்ச்சி, வெளிவரும் எண்ணிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்? வாசிப்பு இன்று குறைந்து வருவதாகக் கூறுவதை ஏற்கிறீர்களா? அதை மீட்க என்ன வழி?
தமிழ் நாவலின் களங்களும் எழுதுபவர்களின் சமூகப் பின்புலமும் இன்று மிக விரிவடைந்துள்ளன. பெண்களும் ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்தும் பலர் எழுதுகிறார்கள். இது ஒரு பெரிய முன்னேற்றம். ஓரிரு தலைமுறைக்கு முன்பும்வரைகூடத் தமிழ் புனைவுகள் குடும்பத்தை மட்டும்தானே சுற்றிக்கொண்டிருந்தன.
உலகம் முழுவதும் தமிழர்கள் பயணிக்கிறார்கள். தங்கள் அனுபவங்களை இலக்கியமாக்குகிறார்கள். பனிப் பிரதேசங்களில் நடந்து, கன்டெய்னர்களில் நாடுகளைக் கடக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை இன்று எழுத்தில் கிடைக்கிறது.
செல்வம் அருளானந்தம் எழுதிய 'எழுதித் தீராத பக்கங்கள்' போன்ற ஒரு நூலை ஒரு தலைமுறைக்கு முன் எண்ணிப் பார்த்திருக்க முடியுமா? உலக எழுத்தாளர்களை எல்லாம் டொராண்டோவிலிருந்து அ. முத்துலிங்கம் நேர் காண்கிறார். பெருமாள் முருகன், சல்மா படைப்புகள் மொழியாக்கம் பெறும் மொழிகளை அறிகையில் எனது புவியியல் அறிவு அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. எண்ணற்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை முன்னணி ஆங்கிலப் பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன.
வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை. 1980களிலும் 1990களிலும் சென்னைப் புத்தகக் காட்சி காதலர் பூங்கா போலிருக்கும். ஆளே இல்லாமல் காற்றாடிக் கொண்டிருக்கும். இப்போது மூச்சு முட்டும் கூட்டம். எனது முதல் நூல் வெளிவந்து நாற்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அந்தக் காலங்களில் யார் என்னைப் படித்தார்கள்,
அல்லது யாராவது படித்தார்களா என்றே எனக்குத் தெரியாது. இன்று தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் இளைஞர்கள் வாசிக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் பத்தாண்டுகளில் என்னைப் போன்ற ஓர் ஆராய்ச்சியாளரின் நூல்களுக்குக் கிடைத்துள்ள கவனம் போதாதென்றால் அவர் பேராசைக்காரராகத்தான் இருக்க வேண்டும்.
மக்கள்தொகைப் பெருக்கத்துக்கேற்ப வாசிப்பு கூடியிருக்கிறதா? என்றால் அது வேறு கேள்வி. வாசிப்பு இன்னும் அதிகரிக்க வேண்டும். செய்யறிவின் வளர்ச்சியால் மிகப் பெரிய அறிவுப் புரட்சி ஒன்று நடக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று அனுமானிக்க முடியவில்லை.
பாரதி முதல் பாப்லோ நெருடா வரை எழுதியிருக்கிறீர்கள். நவீன இலக்கியம் குறித்து, அதன் போக்கு குறித்து உங்கள் கருத்து?
தனி ஒரு ஆராய்ச்சியாளரால் கணிக்கவோ, மதிப்பிடவோ முடியாத அளவுக்கு நவீன தமிழ் இலக்கியம் வளர்ந்துகொண்டிருக்கிறது. படைப்பு எழுத்து கூடிக்கொண்டிருக்கிற அளவுக்கும் வேகத்துக்கும் இன்று மதிப்புரைகளும் விமர்சனங்களும் வளரவில்லை. மதிப்பீடுகளை முன்வைக்கப் பலருக்கும் நேரமோ, மனமோ, துணிவோ இல்லை. எண்ணிக்கை அளவில் பார்த்தால், இது மொழிபெயர்ப்புகளின் பொற்காலம். ஆனால், அவற்றைச் சீராக மதிப்பிடும் எத்தனை கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கிறீர்கள்?
வரலாற்றை ஆவணப்படுத்துதலிலும் ஆய்வுகளிலும் நாம் பின்தங்கியே இருக்கிறோம் என்ற புகார் சொல்லப்படுவதை ஏற்கிறீர்களா?
'கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? யானை பார்க்க வெள்ளெழுத்தா? சந்தையில் அடித்ததற்குச் சாட்சி எதற்கு? இப்படி பழமொழிகளை மட்டுமே அடுக்கிச் சென்று பதில் சொல்லலாம்.
ஆவணங்களைப் பேணுவதில் அக்கறையில்லாத சமூகம் நம்முடையது. அதனால்தானோ என்னமோ நமது முன்னோர்கள் செப்புப் பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் பொறித்து வைத்தனர்.
நான் முப்பது, நாற்பதாண்டுகளுக்கு முன்பு பார்த்த பல ஆவணங்கள் இன்றில்லை. ஆங்கிலேய அரசின் காவல்துறையிடமிருந்து தப்பிய ஏ.கே. செட்டியாரின் காந்தி ஆவணப் படம் தமிழரின் உதாசீனத்திடம் தோற்றுவிட்டதல்லவா?
ஆனால், புதிய எண்ணிமத் தொழில்நுட்பம் பல மாற்றங்களை உண்டாக்கி வருகிறது. எங்கிருந்தெல்லாமோ பழைய நூல்களும் இதழ்களும் வெளிப்படுகின்றன. எங்குமே காணமுடியாதிருந்த 'அமிர்தகுண போதினி'யின் இரண்டு தொகுதிகள் இணையத்தில் உள்ளதை அண்மையில் இளம் நண்பர் சுட்டிக்காட்டினார். ஏராளமான ஆவணத் தொகுப்புகளும் இப்போது நூல் வடிவம் பெறுவதைக் காணமுடிகின்றது. கவனத்தோடு வகைதொகைப்படுத்திப் பதிப்பித்தால் பெரும் பயன் விளையும்.
தமிழ் மொழி, இனம் குறித்த பெருமிதமாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?
சங்க இலக்கியங்கள், திருக்குறள், பட்டினத்தார், சோழர்காலக் கோயில்களும் செப்புத் திருமேனிகளும்.
அடுத்த இலக்கு எதை நோக்கி இருக்கிறது?
ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் வ.உ.சி., பெரியார் ஈ.வெ.ரா. வரலாறுகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது