ராஜா.. ராஜாதி ராஜா...
'இசைஞானி', 'மேஸ்ட்ரோ' என்றெல்லாம் அழைக்கப்படும் இளையராஜா தனது முதல் சிம்பொனியான 'வேலியன்ட்'டை உலக இசைப்பிரியர்களுக்கு 'கேளா இசை வரமாக' அறிமுகம் செய்தார்.


'இசைஞானி', 'மேஸ்ட்ரோ' என்றெல்லாம் அழைக்கப்படும் இளையராஜா தனது முதல் சிம்பொனியான 'வேலியன்ட்'டை உலக இசைப்பிரியர்களுக்கு 'கேளா இசை வரமாக' அறிமுகம் செய்தார். அரங்கத்தின் நுழைவாயிலில் 'இளையராஜா' என எழுதப்பட்ட பதாகை இசை ஆர்வலர்களை வரவேற்றது.
இசை ஜாம்பவான்களான மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இளையராஜா நான்காவதாக இடத்தைப் பிடித்திருக்கிறார். தமிழ்நாட்டின் பண்ணைப்
புரக் கிராமத்து இசைமேதை லண்டன் 'இவெண்டிம் அப்பல்லோ' அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றிய ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமைக் குரியவராகிறார்.
மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதத்தில் சிம்பொனியை உருவாக்குவது ஓர் இமாலய சாதனை. ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் மட்டுமே 'மேஸ்ட்ரோ' என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த ஆரம்ப சிம்பொனியை பல ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்தாலும், அவர் 'மேஸ்ட்ரோ' என்றே அழைக்கப்படுகிறார். இளையராஜாவின் '2025 சிம்பொனி' நிகழ்ச்சியை உலகின் சிறந்த இசைக் குழுவான ராயல் பிஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா கலைஞர்கள்தான் இசைக்கின்றனர்.

'சிம்பொனி' என்றால் என்ன?
'பல்வேறு இசைக்கருவிகள் ஒத்திசைந்து பெய்யும் இசை மழை' என்றே சிம்பொனியைச் சொல்லலாம். இதற்கான அடிப்படை விதிகள் இத்தாலியில், பதினாறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டன. தொடக்கத்தில் சிம்பொனியில் மூன்று நகர்வுகள் அல்லது கட்டங்கள் மட்டுமே இருந்தன. இன்றைய வடிவம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. கூடவே மூன்றாம் நகர்விலிருந்து நான்காம் நகர்வுக்கு சிம்பொனி மேம்படுத்தப்பட்டது.
சிம்பொனி இசை, நாடுகளுக்கு ஏற்றபடி மாறுபடும். கர்நாடக ஹிந்துஸ்தானி இசையைக் கேட்டு ஆனந்திக்க ஒரு கூட்டம் இந்தியாவில் இருப்பதுபோல, சிம்பொனியைக் கொண்டாட மேலை நாடுகளில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
லண்டன் 'இவெண்டிம் அப்பல்லோ' அரங்கில் 3,341 இருக்கைகள் உள்ளன. நின்றுகொண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற 5300 ஆர்வலர்களுக்கு இட வசதி உண்டு. இந்த அரங்கு 'கமோன்ட் பேலஸ்' என்ற பெயரில் 1932-இல் தொடங்கப்பட்டது. 2013-இல் புதுப்பிக்கப்பட்டு, 'கமோன்ட் பேலஸ்', 'இவெண்டிம் அப்பல்லோ' என மாற்றப்பட்டது.
குறைந்தபட்ச நுழைவுக் கட்டணம் இந்திய மதிப்பில் ரூ.15 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.62 ஆயிரமும் உள்ளது. நின்று கொண்டு இசை நிகழ்ச்சியை கேட்கக் கட்டணம் ரூ.9,500.
இசை நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவில் தீர்மானிக்கப்படும் கட்டணமும், லண்டனில் உள்ள கட்டணமும் ஏறக்குறைய சமமாக உள்ளன. இளையராஜா நிகழ்ச்சிக்கு 14 வயதுக்கு குறைவானவர்கள் துணைக்கு அவர்களைவிட மூத்தவர்களை உடன் அழைத்துவர வேண்டும். 3 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
சிம்பொனி என்பது இசை அரங்கில் 80-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் இசைக் கருவிகளை பார்வையாளர்கள் முன்னிலையில் நேரடியாக இசைக்க வேண்டும். பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்படுவதுபோல், ஒலிப்பதிவு அரங்கில் மெருகேற்றி உருவாக்கி பதிவு செய்து வெளியிடக் கூடாது.
இளையராஜா முதலில் 1993 ஆம் ஆண்டு வாக்கில் சிம்பொனி இசைக் கோர்வை ஒன்றை உருவாக்கியிருந்தார். ஆனால் அதை அரங்கேற்றவில்லை. இப்போது இரண்டாம் சிம்பொனி, முதலாம் சிம்பொனியாக அரங்கேறியுள்ளது.

இளையராஜா
இளையராஜாவின் சிம்பொனி நிகழ்வு மார்ச் 8-ஆம் தேதி இரவு (இந்திய நேரப்படி) நள்ளிரவு பன்னிரண்டரை மணிக்குத் தொடங்கியது. நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசிக்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இசைப் பிரியர்கள் லண்டனில் திரண்டிருந்தனர்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நொடிகள் முன்பாக நீல கோட் பேண்ட் அணிந்திருந்த இளையராஜா, அங்கே வைக்கப்பட்டிருந்த கருப்புக் கோட்டை நீல கோட்டுக்கு மேலாக அணிந்துகொண்டார். நிகழ்ச்சியின் இடையில் மீண்டும் நீல கோட், பெண்டுக்கு மாறினார்.
தொடக்கத்தில் 'ரஷ்யன் சிம்பொனி இசை துக்கடா' ஒன்றை இசைத்து நேயர்களுக்கு வழங்கினர். பிறகு இளையராஜா மேடை ஏறினார். இசைக் குழு கலைஞர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றவர் மைக்கேல். இளையராஜாவின் சிம்பொனியை 4 பாகங்களாக பிரித்திருந்தனர். ஒவ்வொரு பாகத்தை வாசித்து முடிக்க சுமார் 15 நிமிடங்கள் ஆனது.
நேயர்கள் பரவசப்பட்டதின் வெளிப்பாடுகளாக நீண்ட நேரக் கைதட்டல்கள், எழுந்த ஆரவாரம் அமைந்திருந்தன. 'சினிமா பாடல்கள்... இசை' என்ற கூண்டுக்குள்ளிருந்து விடுதலை அடைந்த பறவையாக இளையராஜா உணர்வில் மாறிப்போயிருந்தார். அவர் தனது வாழ்நாள் லட்சியத்தை எட்டிப் பிடித்தே விட்டார்.
இசை நிகழ்ச்சியின்போது வழக்கம் போல இளையராஜா சிட்டைப் படுத்திய நோட்ஸ்கள் சரியான தொனியில் வாசிக்கப்படுகிறதா? என்று கண்காணித்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் இருப்பதாக அவர் சஸ்பென்ஸ் வைக்க, நேயர்களின் எதிர்பார்ப்பு எகிற இடைவேளையில் சஸ்பென்ஸ் உடைந்தது.
'ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா', 'தும்பி வா', 'கண்ணே கலைமானே', 'பூவே செம்பூவே', 'ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல' பாடல்கள் தொடர்ச்சியாக ராயல் ஆர்கெஸ்டரா குழுவினரால் வாசிக்கப்பட்டன. 'புதிய வார்ப்புகள்' படத்தில் இடம் பெற்ற 'இதயம் போகுதே' பாடலைப் பாடிய இளையராஜா அனைவரையும் மீண்டும் வசியப்படுத்தியபோது, சஸ்பென்ஸ் வெளிப்பட்டது.
மார்ச் 8 வெகு முக்கியமான நாளாக மாறியது. லண்டனைத் தொடர்ந்து 13 நாடுகளில் இளையராஜா தனது சிம்பொனியை அரங்கேற்றவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...