/

நெஞ்சினிலே... நெஞ்சினிலே...!

தமிழ்த் திரையுலகம் வித்தியாசமானது. பல ஆண்டுகளுக்கு முன்பு பிரகாசித்த நட்சத்திரங்களை இன்றும் நினைவுகூர்வோர் உண்டு.

News image
Updated On :15 பிப்ரவரி 2025, 6:36 pm

கோட்டாறு கோலப்பன்

தமிழ்த் திரையுலகம் வித்தியாசமானது. பல ஆண்டுகளுக்கு முன்பு பிரகாசித்த நட்சத்திரங்களை இன்றும் நினைவுகூர்வோர் உண்டு. அவர்களது நினைவுகளும், செயல்களும் மறக்க முடியாதவை. அவ்வாறு சில ருசிகர நிகழ்வுகளைஅறிவோம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி திரையுலக வாழ்க்கை தொடங்கிய தருணம்.

ஒரு நாள் நேஷனல் பிக்சர்ஸ் அலுவலகத்தில் பெருமாள் முதலியார், கருணாநிதி, திருவாரூர் தங்கராசு, கிருஷ்ணன்-பஞ்சு, சிவாஜிகணேசன், கண்ணதாசன் உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருந்தனர். படத்துக்கான பாடல் பதிவு பற்றி பேச்சு வந்தது.

'இந்தப் படத்துக்கு நானும் ஒரு பாட்டு எழுதவா?' என்று கண்ணதாசன் கேட்க, 'பாட்டு எழுதுறது அவ்வளவு சுலபமா நினைச்சீங்களா? என்று பட்டென்று சொல்லிவிட்டார் பெருமாள் முதலியார். கருணாநிதி, அண்ணல் தங்கோ உள்ளிட்டோர் பாடல்களை எழுதினர்.

இந்த நிகழ்வு நடைபெற்ற பல ஆண்டுகளுக்குப் பின்னர், 1972-இல் பெருமாள் முதலியார் 'தங்கதுரை'ன்னு ஒரு படம் தயாரித்தார். இந்தப் படத்துக்குப் பாடல் எழுத அழைப்பின்பேரில், பெருமாள் முதலியாரை சந்திக்க கண்ணதாசன் வருகை தந்தார். அப்போது கண்ணதாசன், 'என்னால் உட்கார முடியாது. ஊசி போட்டிருக்கு' என்று சொல்ல, மெத்தையை கொண்டுவந்தனர். அதில் கண்ணதாசன் படுத்துக்கிட்டே, பாடல்களைச் சொல்ல, எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்தார்.

பெருமாள் முதலியார், திருவாரூர் தங்கராசு, காசிலிங்கம் உள்ளிட்டோர் அங்கிருந்து ரசித்தனர்.

'காலமகள் பாதையிலே போடா கண்ணே போ- அங்கு

காத்திருக்கும் வெற்றி உண்டு போடா கண்ணே போ

நீலக்கடல் அலைகளைப் போல் போடா கண்ணே போ-

என் நெஞ்சும் உன்னைத் தொடர்ந்துவரும் போடா கண்ணே போ..' என்று கண்ணதாசன் பாடப் பாட, அங்கிருந்தோர் ரசித்து மயங்கினர்.

எந்தத் தயாரிப்பாளர்'பாட்டு எழுதுறது அவ்வளவு சுலபம்னு நினைச்சீங்களான்னு கேட்டாரோ, அதே தயாரிப்பாளர் இவருக்காக காத்திருந்ததும், இவர் மெத்தையில சாஞ்சுகிட்டே பாடல் எழுதுனதும் வரலாறு.

Story image

1982-ஆம் ஆண்டு. மாதம் ரூபாய் 500 மட்டுமே சம்பாதிக்கும் இளைஞர் வீ.கே.டி.பாலன். சைதாப்பேட்டை, சேசாஷல முதலித் தெருவில் இருந்த மெட்ராஸ் பில்டிங்கின் அறை எண் 22-இல்தான் தங்கியிருந்த அறைக்கான வாடகைக்கு ரூபாய் 150 போய்விடும்.

ஒருநாள் பிற்பகல் 3 மணி அளவில் அந்த இளைஞரின் லாட்ஜுக்கு எதிரில் சிவப்புச் சுழல் விளக்கு காரிலிருந்து பட்டு வேட்டி, பட்டு முழுக்கை சட்டை அணிந்த பிரபலம் இறங்கினார்.

'தமிழ்நாடு அரசால் இசைக் கல்லூரிக்கு முதல்வராக அறிவிக்கப்பட்ட பெரிய பாடகர் அவர்' என்று சொல்லியிருக்கிறார் கார் ஓட்டுநர். பிரபலத்திடம் ' 'நான் உங்களின் ரசிகன்' என்று வீ.கே.டி.பாலன் சொல்ல, 'அப்படியா' என்றபடி உரையாடியிருக்கிறார்.

அதன் பின்னர், 'தம்பி உங்க ரூம்ல போய்க் கொஞ்ச நேரம் உட்காரலாமா?' என்று பிரபலம் கேட்க, பாலன் தயங்கினார். அதற்குள் அந்தப் பிரமுகரோ பாலனின் அறைக்கு உள்ளே ஒரு தகரக் கட்டிலின் மீதிருந்த பாயின் மீது அமர்ந்தார்.

'கொஞ்சம் குடிக்கத் தண்ணி இருந்தா போதும் தம்பி' என்ற அந்தப் பிரமுகர் சொல்ல, பாலன் தண்ணீர் எடுத்துகொண்டு போவதற்குள் அந்தத் தகரக் கட்டிலிலேயே படுத்து உறங்கிப் போயிருந்தார் பிரபலம். அரைமணி நேரத்துக்குப் பின்னர், லேசான சலனத்துடன் சிறு இருமலுடன் எழுந்தார்.

'கொஞ்சம் அசதியா இருந்திச்சு தூங்கிட்டேன்' என்றபடி தண்ணீர் குடித்துவிட்டு, 'தம்பி இங்க தூங்கிட்டிருந்த கொஞ்ச நேரத்துல கொஞ்சம் நிம்மதியா இருந்திச்சு. ஆட்கள் தொந்தரவு இல்லை. நட்புகளின் நச்சரிப்பு இல்லை. உறவினர்களின் அடாவடித்தனம் இல்ல. அமைதியா இருக்கு. இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் உங்க அறையில நான் ஓய்வெடுத்துக்கலாமா?' என்றார்.

என் அறைக்குப் பூட்டே கிடையாது. நீங்க வந்து ஓய்வெடுக்கலாம்' என்று சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பிறகு அந்தப் பிரமுகர் சில முறை ஓய்வெடுத்து சென்றிருக்கிறார். அந்தப் பிரமுகர் பாடகர் சி.எஸ். ஜெயராமன்.

இந்தத் தகவலை அவரது மகள் சிவகாமசுந்தரி விழா ஒன்றில் கூறியது.

எம்.என்.நம்பியார் முதன்முதலில் நகைச்சுவை நடிகராகவே திரைப்படங்களில் நடித்தார். 1935-இல் ஹிந்தி, தமிழ் மொழிகளில் வெளியான பக்த ராம்தாஸில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

-எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

நாடகங்களில் திரைச்சீலையை அமைக்கும் முறையை பார்சி நாடகக் குழுவினர் தமிழகத்துக்கு வந்தவுடன் அறிமுகமானது. பார்சி திரைச்சீலையை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

தாம் நடித்த திரைப்படங்களில் சிவாஜி கணேசனுக்கு மிகவும் பிடித்த ஒரு படம்- 'கப்பலோட்டிய தமிழன்'. இதற்கு வசனம் எழுதியவர் கவிஞர் எஸ்.டி. சுந்தரம்.

டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர்.

ராமண்ணா தயாரித்து இயக்கிய முதல் படம் - 'வாழப் பிறந்தவள்'. இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் விந்தன்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

'நடிகர் கமல் சார் என் மீது எப்போதும் அக்கறையோடு இருப்பார்.

ஒருமுறை ஏதோ ஒரு போராட்டத்துக்காக நான் குரல் கொடுத்தேன். அப்போது கமல் சார் என்னை பாராட்டி, 'ரொம்ப தைரியமாக பண்ணுறீங்க? உங்கள் அரசியல் பார்வை ரொம்பப் பிடிச்சிருக்கு.. வாழ்த்துகள்' என்று சொன்னார்.

அதன்பின்னர் 'அமரன்' படத்துக்கு என் இசை வேண்டும் என்று ராஜ்குமார் பெரியசாமி கேட்டதும், மகேந்திரன் சார், டிஸ்னி மூலமாக அந்த வாய்ப்பு வந்தது. அமரனில் எனது பணியைப் பார்த்து கமல் சார் பாராட்டினார். அமரன் மாபெரும் வெற்றியைப் பெற்றதும் மகிழ்ந்தேன். கமல் சார் போன்ற தயாரிப்பாளர்கள் வெற்றி பெற்றால், மீண்டும் திரைப்படங்களையே எடுப்பார்கள். இதனால் அவர் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் முதல் படத்தை கமல் சார்தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இதை அவரிடம் சொன்னவுடன் கிங்ஸ்டனுக்கு கிளாப் அடித்து வாழ்த்தினார்' என்று இசையமைப்பாளரும், இயக்குநருமான ஜி.வி.பிரகாஷ்குமார் ஓர் நிகழ்ச்சியில் கூறினார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

'சீதா கல்யாணம்' என்ற படத்தில், கஞ்சிரா வாசிக்கும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் வீணை எஸ்.பாலச்சந்தர். 38 ஆண்டுகள் திரைப்பட உலகில் இருந்து, 20 படங்களில் நடித்தவர்.

'நடு இரவில்' படத்துடன் திரையுலகைவிட்டு விலகி, சங்கீதத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.