/

கோலிவுட் ஸ்டூடியோ!

அம்மாவாக இருக்கவே ஆசைப்படுகிறேன்..!

News image
சமந்தா
Updated On :16 நவம்பர் 2024, 6:30 pm

டெல்டா அசோக்

அம்மாவாக இருக்கவே ஆசைப்படுகிறேன்..!

அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில், 'சிட்டாடெல்: ஹனி பனி' வெப் சீரீஸ் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட்டில் ஹிட் அடித்த இந்த வெப் சீரிஸில் நடிகர் வருண் தவான், நடிகை சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'தி ஃபேமிலி மேன்' புகழ் ராஜ், டிகே இயக்கத்தில் ரூúஸா பிரதர்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் இந்த வெப்சீரிஸ் புரொமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த வெப் சீரிஸில் ரகசிய ஏஜென்டாகவும், அம்மாவாகவும் நடிகை சமந்தா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, சிட்டாடல்: ஹனி பன்னியில் தாயாக நடித்ததைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

அப்போது, 'நான் தாய்மையடைய இன்னும் தாமதமாகவில்லை. எனக்கு தாய்மை அடையும் கனவு இன்னும் இருக்கிறது. உண்மையில் தாயாக இருப்பதை மிகவும் நேசிக்கிறேன். நான் எப்போதும் அம்மாவாக இருக்கவே விரும்புகிறேன். அது மிக அற்புதமான அனுபவம். அந்த அனுபவத்துக்காகக் காத்திருக்கிறேன். மக்கள் வயதாவதை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.

உண்மையில் தாய்மை அடைய வயது ஒரு தடையில்லை. ஒருவர் வாழ்க்கையில் தாய்மை அடைய முடியாத காலம் என ஒன்றும் இல்லை.

சிட்டாடல்: ஹனி பன்னியில் நடித்த குழந்தையுடன் பழகியது, என் சொந்த குழந்தையுடன் பழகுவது போலவே உணர்ந்தேன். நான் இப்போது என் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இடத்துக்காக மிகவும் மகிழ்கிறேன். நான் எதில் கவனம் செலுத்த வேண்டும், எது எனக்கு முக்கியம் என்பதெல்லாம் எனக்கு இப்போது தெளிவாக தெரியும். அதனால், இப்போது இருக்கும் இந்த நிலையை அடைந்ததற்கு உண்மையில் நான் மகிழ்கியடைகிறேன்.

ஒவ்வொரு நாளும் எனக்கு முழுமையாக கிடைக்கிறதே... அதற்காகவே நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். இதற்கு முன்பு சாதாரண நாளுக்காக நான் இவ்வளவு நன்றியுடையவளாக இருந்ததில்லை. ஆனால், இப்போது அப்படி இல்லை. அனைத்துக்கும் நன்றியுடையவளாக இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

கே.எஸ்.ரவிக்குமார் உலகநாயகன் 'ஷேரிங்க்ஸ்!

நடிகர் கமல்ஹாசனை அவருடைய ரசிகர்கள் 'உலகநாயகன்' என அன்போடு அழைத்து வந்தனர். தற்போது, 'என்னை உலகநாயகன் என அழைக்க வேண்டாம். கமல், கமல்ஹாசன் அல்லது கே. எச். என அழைத்தால்போதும், என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இவருக்கு முதல் முதலில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார்தான் 'உலகநாயகன்' என்ற பட்டத்தை 'தெனாலி' திரைப்படத்தில் கொடுத்தார். இதுகுறித்து முன்பு அளித்த பேட்டியில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசியிருக்கிறார்.

அவர், ' லோகேஷ் கனகராஜ் , 'விக்ரம்' படத்துல கமல் சாருக்கு டைட்டில் இன்ட்ரோ போட்டிருக்கார். அவருக்கு முதன் முதலில் 'உலகநாயகன்'னு நான்தான் 'தெனாலி' திரைப்படத்துல டைட்டில் போட்டேன். அப்போ அன்னைக்கு அதை அவரை டார்சர் பண்ணி எடுத்தேன். அந்த நேரத்துல அவர் ஆளவந்தான் படத்தினுடைய ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார்.

அவர் டைட்டிலெல்லாம் வேண்டாம்னுதான் முதல்ல சொன்னார். என்னுடைய ஆத்மத் திருப்திக்கு எடுத்துக்குறேன்னு சொல்லிதான் அதை எடுத்துட்டு வந்தேன். அந்த டைட்டில் விடியோ முதல்ல அவருடைய ஆழ்வார்பேட்டை அலுவலகத்திலிருந்து தொடங்கும். அப்படியே சென்னை, தமிழ்நாடு, இந்தியா, உலகமுன்னு அப்படியே கருவிழி மாதிரி காணொளி பண்ணி அதை ரெடி பண்ணினேன்.' எனக் கூறியிருக்கிறார்.

இப்போது இந்தப் பட்டத்தை வேண்டாம் என அறிவித்து விட்டார் கமல்.

மீண்டும் மலையாள திரையுலகில் இளையராஜா!

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுகொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில், இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருப்பது தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வைரலாகி வருகிறது.

1976-இல் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, இதுவரை தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் 43-ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்தப் புத்தக கண்காட்சியில் 'புகழ் பெற்ற இசைக்கலைஞர் இளையராஜாவின் இசை பயணம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.

அதில் பேசிய இளையராஜா, 'நான் மலையாள சினிமாவில் மீண்டும் இசையமைக்க ஆர்வமாக உள்ளேன். மலையாள திரையுலகில் இருந்து இசையமக்க அழைப்பு வந்தால், அதை ஏற்க தயாராக உள்ளேன்' என்று கூறியுள்ளார்.

அந்த விழாவில் புதிய இசையமைப்பாளர்கள் பற்றி கேட்டபோது, 'அவர்கள் தங்களுக்கான தனி வழியில் முன்னேறி கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கட்டும்' என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.