/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக மூலிகைகள் சேர்ந்த ஆயுர்வேத மருந்து

பலவகை மூலிகைகளின் சக்தி: ஆரோக்கியம் தரும் ஆயுர்வேத அமுது

News image
Updated On :3 மார்ச் 2024, 9:23 am

எஸ். சுவாமிநாதன்

அதிகமான அளவில் மூலிகைகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்து எது? அதை எப்படித் தயாரிக்கிறார்கள். அதன் மருத்துவப் பயன்கள் என்ன?

-நாகராஜன், சென்னை.

வில்வம், குமிழ், வட்டத் திருப்பி, சித்தா முட்டிவேர், ஓரிலை, மூவிலை, காட்டு உளுந்து, காட்டு பயறு, திப்பிலி, நெரிஞ்சி விதை, சிறுவழுதுணை, வெண் வழுதுணை, கர்கடகசிருங்கி, தாமலகி, திராட்சை, ஊசிப்பாலை, புஷ்கரமூலம், அகில்கட்டை, கருக்காய், சீந்தில்கொடி, ருத்தி, ஜீவகம், ருஷபகம், கச்சோளம், கோரைக்கிழங்கு, மேதா, ஏலம், சந்தனம், செங்கழுநீர் கிழங்கு, நிலப்பனைக்கிழங்கு, ஆடாதோடை, காகோலீ, கரகனாசம் போன்ற நாம் கேட்டறியாத மூலிகைகளை வகைக்கு 40 கிராம் எடுத்து, 500 நெல்லிக்காய்களுடன் 100 லிட்டர், 240 மில்லி தண்ணீரில் கலந்து வேக வைத்து, மூலிகைகளின் சத்து முழுவதும் தண்ணீரில் வந்தவுடன் கஷாயத்தை வடிகட்டி எடுத்துகொள்வர். நெல்லிக்காய்களை மட்டும் அதிலிருந்து எடுத்து, கொட்டைகளை அகற்றி, 480 மில்லி நல்லெண்ணெய், நெய்யுடன் வறுத்து எடுத்துகொள்வார்கள். மேலுள்ள கஷாயத்துடன் கலந்து இரண்டு கிலோ கல்கண்டுடன் சேர்த்து லேஹிய பதம் வரும் வரை காய்ச்சி ஆறவைத்து அதில் 240 மில்லி தேன் கலந்து கிளறி விட்டு அதில் 160 கிராம் ஏலம், லவங்கம், பச்சிலை, நாகப்பூ ஆகியவற்றைப் பொடித்துகொள்வார்கள்.

மிகவும் அற்புதமான இந்த லேஹிய மருந்தை காலையில் வெறும் வயிற்றில் பத்து கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வர நீங்கள் அடையக் கூடிய நற்பலன்கள்:

* நாள்பட்ட வரட்டு இருமல், மூச்சிரைப்பு குணமாதல்.

* காசநோயினால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர் பருமனாவார்.

* காயம் ஏற்பட்டு ஆறாத புண் உடையவருக்கு புண் ஆற்றும்.

* வயதானவர்களுக்கு மூப்பு அறியாத வண்ணம் உடலை உற்சாகமாக வைத்திருக்கும்.

* குழந்தைகளுக்கு உடல் ஊட்டம் வளர்த்து அவர்களின் உடல்- மன வளர்ச்சிக்கு உதவிடும்.

* குரல் வளை சார்ந்த உபாதைகள், மார்பு நோய்கள், இதய உபாதைகள், பூட்டு உபாதைகள், தண்ணீர்வேட்கை, சிறுநீர், ஆணின் விந்தணுக்கள் சார்ந்த உபாதைகளை குணமாக்கும்.

* இளமையைத் தக்க வைக்கும்.

* வயதானவர்களுக்குக் கூட நல்ல நினைவாற்றல், புத்தி கூர்மை, வசீகரம், நோயற்ற தன்மை, நீண்ட ஆயுள், புலன்களுக்கு வலுவூட்டல், புணர்ச்சியில் ஆர்வம், செரிமானச் சக்தி கூடுதல், உடல் நிறம் கூடுதல், குடல் வாயுவின் தேக்கமில்லாமல் அதன் சீரான வெளியேற்றம், முதுமையின்றி இளமையான தோற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

உடலில் மூலிகைத் தைலம் தடவி, வியர்வையை உருவாக்கி வாந்தி, பேதி, எனிமா சிகிச்சை மூலம் உட்புறக் கசடுகளை அகற்றி, அதன்பிறகு இந்த மருந்தை உட்கொண்டால் அதன் பலன்கள் முன்குறிப்பிட்ட வகையில் மிக விரைவில் கிடைக்கும்.

இந்த லேஹிய மருந்தின் பெயர் என்ன? அது மருத்துவர்கள் மட்டுமே அறிந்த ரசசியமாகும். மருத்துவர்களுக்குரிய சன்மானத்தை அளித்து அறிந்துகொள்ளலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.