நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 198

ஜெயலலிதாவின் சிறை அனுபவம்: கருணாநிதியின் சதி விளக்கம்

News image
Updated On :22 ஜூன் 2024, 6:30 pm

கி. வைத்தியநாதன்

தன்னை நோக்கித் திரும்பிய ஜெயலலிதாவின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் சற்றுத் திணறித்தான் போனார், எனது நண்பரான அந்த ஹைதராபாத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ஆங்கில நாளிதழின் நிருபர். அவர் கேட்ட கேள்வி இதுதான்.

'நீங்கள் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, வேண்டுமென்றே விரும்பித்தான் சிறை சென்றிருக்கிறீர்கள் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறாரே?'

'யாராவது தானே கைதாக வேண்டும் என்று விரும்புவார்களா? நானே விரும்பி சிறை சென்றதாகக் கூறுவது வளமான கற்பனை. என்னை சிறையில் அடைத்தது கருணாநிதியின் திட்டமிட்ட சதி...'

'நீதிமன்ற உத்தரவுப்படி தானே நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள்?'

'நீதிமன்றத்தின் மூலம்தான் எல்லாமே நடப்பதாகக் காட்ட வேண்டும் என கருணாநிதி நினைத்தார். எனது கைதில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்கிற தோற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். அதன் மூலம், மக்கள் மத்தியில் அவர் மீது கோபமும், வெறுப்பும் ஏற்படாது என்பது அவரது கனவு.'

'சிறையில் நீங்கள் பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறதே?'

'சிறையில் எப்படி பூஜை செய்ய முடியும்; இதிலிருந்தே இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரியவில்லையா? சாதாரணமாக நான் எப்போதும் ஜெபித்துக் கொண்டிருக்கும் சில ஸ்லோகங்கள், மந்திரங்கள், பாசுரங்களை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டிருந்தேன், அவ்வளவுதான்.'

'சிறையில் நீங்கள் மகளிர் பகுதியில் தானே அடைக்கப்பட்டிருந்தீர்கள்?'

'ஆமாம், அடைக்கத்தான் பட்டிருந்தேன். மகளிர் பகுதியில் வழக்கமாக ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். முதல் நாள் மாலையில் மற்ற பெண் கைதிகள் என்னிடம் பேசினார்கள். நான் அவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டதைப் பார்த்து, அவர்கள் ஆத்திரம் அடைந்தார்கள். பலர் அழுது புலம்பத் தொடங்கிவிட்டார்கள். கருணாநிதியை சபித்தார்கள். உடனே விவரம் மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டது.'

'அவர்கள் உங்களுடன் பேசுவது தடுக்கப்பட்டதா?'

'அந்தப் பெண் கைதிகளை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். என்னிடம் யாரும் பேசவோ, நெருங்கவோ கூடாது என்று எச்சரிக்கப்பட்டனர். பெண் வார்டன்கள்கூட என்னிடம் பேசத் தடை விதிக்கப்பட்டது.'

'சிறையில் நீங்கள் எப்படி பொழுதைக் கழித்தீர்கள்?'

'நிறைய படித்தேன். பெரும்பாலான நேரங்களில் என்னை உளவியல் ரீதியாகத் தகர்க்க, தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அநாவசியமான கேள்விகள் கேட்கப்பட்டு நிறைய அவமானப்படுத்தப்பட்டேன். நூற்றுக்கணக்கான கேள்விகளை என்னிடம் கேட்டனர். அதற்கெல்லாம் அமைதியாக, பொறுமையாக நான் பதில் சொன்னேன்.'

'பத்திரிகைகளில் விசாரணை குறித்து வெளிவந்த செய்திகளை நீங்கள் பார்த்தீர்களா?'

'சிறையில் பார்க்கவில்லை. பார்க்கவோ, படிக்கவோ அப்போதைய மனநிலை இருக்கவில்லை. வெளியே வந்த பிறகு பார்த்தேன். சிறையில் விசாரணை நடத்தப்பட்டது குறித்த செய்திகள் எப்படி உடனுக்குடன் பத்திரிகைகளில் வெளி

வந்தன? சிறை அதிகாரிகள் தந்த தகவல்களாகத்தான் அது இருக்க முடியும். அதுகுறித்து நீங்கள் யாரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை?'

'பத்திரிகைகளில் விசாரணை குறித்து தவறான செய்தி வருவதாக நீங்கள் ஆத்திரம் அடைந்ததாகக் கூறப்படுகிறதே, உண்மைதானா?'

'எனக்குக் கோபம் வந்தது; முகம் கறுத்துவிட்டது என்றெல்லாம் செய்தி போட்டிருந்ததாகச் சொன்னார்கள். எனக்கு கோபம் வந்தால் முகம் சிவக்குமே தவிர, எப்படி கறுக்கும்?'

ஜெயலலிதாவின் இந்த பதிலைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். அவரும்தான். அதற்குப் பிறகு, சற்று சகஜ நிலைமை ஏற்பட்டது.

'சுருக்கமாகச் சொன்னால் சிறையில் நான் நடத்தப்பட்ட விதம், நெருக்கடி நிலை காலத்தை நினைவூட்டுவதாக இருந்தது. சிறையில் என்னிடம் நடத்திய விசாரணையை என் வீட்டிலேயே நடத்தி இருக்கலாம். கொடைக்கானல் ஹோட்டல் விவகாரம் தொடர்பாக வீட்டில்தான் விசாரணை நடத்தினார்கள். அதேபோல, மற்ற வழக்குகளிலும் நடத்தி இருக்கலாமே..'

'அதற்கு ஏதாவது உள்நோக்கம் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?'

'நிச்சயமாக உள்நோக்கம் இருந்தது. ஒன்றல்ல, பல காரணங்கள் இருந்தன. சிறையில் என்னை அடைத்து, விசாரித்து அவமானப்படுத்த வேண்டும்; அசிங்கப்படுத்த வேண்டும்; பழிவாங்க வேண்டும் என்று கருணாநிதி நினைத்தார். அதை நிறைவேற்றிக் கொண்டார். அதுமட்டுமல்ல, என்னைக் கைது செய்து சிறையில் அடைத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது.'

'என்ன காரணம்?'

'தொலைக்காட்சிகளிலும், குறிப்பாக கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் எனக்கு எதிராகச் செய்யப்பட்ட பிரசாரங்கள் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என் வீட்டில் உள்ள புகைப்படங்களைக்கூட எடுத்து வெளியிட்டது தனிநபர் சுதந்திரத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத அத்துமீறல். நான் வீட்டில் இருந்திருந்தால், உள்ளே நுழைந்து படம் எடுத்து, அதை மிகைப்படுத்தி, எனக்கு எதிராகப் பரப்புரை செய்திருக்க முடியாது...'

'நீங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்களா?'

'என் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் பொருள்களுக்கு உரிய வரி கட்டி இருக்கிறேன். எனக்கு அந்தப் பொருள்கள் முக்கியமல்ல. அதையெல்லாம் கருணாநிதியேகூட வைத்துக் கொள்ளட்டும். ஆனால், என்னை சிறைக்கு அனுப்பிவிட்டு, தனது அதிகாரிகள் மூலம் வீட்டிலிருந்த பொருள்களையெல்லாம் காட்சிப்படுத்தி, நான் ஏதோ கொள்ளையடித்து சேர்த்துவிட்டது போன்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்த முயன்றது, கீழ்தரமான அரசியல்.'

'இதற்கெல்லாம் முதல்வர் கருணாநிதிதான் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?'

'நிச்சயமாக. கருணாநிதியின் நடத்தையும், பேச்சுக்களும் தரம் தாழ்ந்தவைகளாக உள்ளன. ஒரு முதல்வரின் தகுதிக்கேற்றவாறு அவர் பேசவில்லை. எல்லா வழக்குகளிலும் நான் வெல்வேன். அனைத்து வழக்கு விசாரணைகளின் முடிவிலும் எனக்கு நீதி கிடைக்கும். பழி தீர்த்துக்கொள்வதற்காக என்னைக் கோபப்படுத்தி, அதிமுகவையும் அழிக்க பார்க்கும் முதல்வர் கருணாநிதிக்கு சரியான பாடத்தைக் கற்பிப்போம்.'

'அவரை எப்படி பழிவாங்கப் போகிறீர்கள்?'

'பாடம் கற்பிப்போம் என்றால் பழிவாங்குவோம் என்று பொருளல்ல. பாடம் புகட்டுவது என்பது வேறு, பழிவாங்குவது என்பது வேறு...'

'கருணாநிதிக்கு உங்கள் மீது அப்படி என்ன தனிப்பட்ட விரோதம்?'

'கட்சியை உடைக்கத் தேர்தலுக்கு முன்பே

கருணாநிதி முயற்சித்தார். தேர்தலுக்குப் பிறகும் முயன்றார். கட்சியை உடைக்க மட்டுமல்ல, அழிக்கவே அவர் முயற்சித்தார். அதில் அவர் வெற்றி பெறப் போவதில்லை. அவர் மட்டுமல்ல, யார் முயற்சி செய்தாலும் அதிமுக என்கிற இயக்கம் அழியாது. மாறாக அந்த நடவடிக்கைகள் கட்சியை மேலும் வலுப்படுத்தி, புத்துணர்வு பெறச் செய்யும்.'

'சிறைக்குப் போய் வந்த பிறகு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'

'எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்று சொன்ன அண்ணா, எம்ஜிஆரை பின்பற்றி வருகிறேன். எதையும் தாங்கும் இதயத்தை நான் வளர்த்துக் கொண்டதால், தற்போது நடைபெறும் நிகழ்வுகள் என்னை பாதிக்கவில்லை. எனக்கு எப்போதுமே வைராக்கியம் உண்டு. சிறைக்கு சென்று வந்ததற்குப் பிறகு அது பன்மடங்கு அதிகமாகி உள்ளது.'

தனது பேட்டியை முடித்துக்கொண்டு அவர் கிளம்ப எத்தனித்தார். தேசிய அரசியல் குறித்து யாருமே கேள்விக் கேட்கவில்லை என்று எனக்கு பொறி தட்டியது.

'தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று பேட்டியின் போக்கை திசை திருப்பினேன் நான். பேட்டியை முடித்துக்கொண்டு புறப்பட இருந்த ஜெயலலிதா, என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி பதிலளிக்கத் தயாரானார்.

'நன்மை பயக்கக்கூடிய எந்தத் திட்டத்தையும் இவர்களால் செயல்படுத்த முடியவில்லை. ஆறு மாதங்கள் கழிந்த பின்னரும், நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ளும் ஒரேயொரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில்தான் இந்த அரசு கண்ணாக இருந்து வருகிறது'

'நீங்கள் சில மாதங்களுக்கு முன்னால் பிரதமர் தேவே கெளடாவை பாராட்டினீர்கள்.'

'ஆமாம், அப்போது பாராட்டியது உண்மைதான். இந்த அரசு எப்படிப்பட்டது என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிகிறது. எங்களைப் பொருத்தவரை, மக்களவைக்குப் புதிய தேர்தல் நடைபெற வேண்டும். இப்போது நடை

பெறுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அல்ல.'

'தேர்தல் வந்தால் காங்கிஸூடனான உங்கள் கூட்டணி தொடருமா?'

'தேர்தல் கூட்டணியைப் பற்றியெல்லாம் இப்போதே எதுவும் சொல்ல முடியாது. அதற்கு இன்னும் காலம் கனியவில்லை.'

'நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக உங்களுக்கு மிகவும் வேண்டிய சீதாராம் கேசரி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்...'

'அது காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் பிரச்னை. அதைப் பற்றி நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. சீதாராம் கேசரியை எனக்கு வேண்டியவர் என்று உங்களிடம் யார் சொன்னார்கள்?'

நீண்ட நேர பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு ஜெயலலிதா கிளம்பிவிட்டார். அவர் வந்தபோது இருந்த அதே பரபரப்பு, ஆரவாரத்துடன் லாயிட்ஸ் சாலை தலைமைக் கழகத்திலிருந்து அவர் கிளம்பிப் போனார். தனது அரசியல் பயணத்தில், ஜெயலலிதா பத்திரிகையாளர்களுடன் நடத்திய மிக நீண்ட சந்திப்பு அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதற்குப் பிறகும் அடுத்தடுத்து இரண்டுமுறை ஜெயலலிதா பத்திரிகையாளர்களை அதிமுக தலைமைக் கழகத்தில் சந்தித்தார். இரண்டுமே, ஒருசில நிமிடங்களில் முடிந்துவிட்டன.

புதுக்கோட்டை இடைத் தேர்தல் குறித்து தலைமைக் கழகத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். 'மாலை பத்திரிகைகளுக்கு நேரமாகிவிட்டது. மற்றவை குறித்து பிறகு சந்திப்போம். மணி என்ன?' என்று அவர் கேட்டபோது நிருபர்கள் திகைத்தனர்.

'மணி 12.40. நீங்கள் கைக்கடிகாரம் அணியவில்லையா, ஏன் அணியவில்லை?' என்று கேள்வி எழுப்பிய நிருபர், அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான 'நமது எம்ஜிஆர்' பத்திரிகையைச் சேர்ந்தவர்.

'நான் உழைத்து சம்பாதித்த சொத்துகளை திருட்டு பட்டம் கட்டி அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். குண்டுமணிகூட விட்டுவைக்கவில்லை. இது என் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது. பாதித்துவிட்டது. கொச்சைப்படுத்திவிட்டனர். அசிங்கப்படுத்திவிட்டனர். என் வாழ்க்கையில் இனி நான் நகைகள் அணியமாட்டேன். நீதிமன்றத்தில் நியாயத்துக்காகப் போராடி வெற்றி பெறுவேன். நகைகள் திரும்பக் கிடைக்கும். அவற்றை விற்று தர்ம காரியங்களுக்கு வழங்கி விடுவேன்.' - இதை அறிவிப்பதற்காகத்தான் அன்று நிருபர் கூட்டமே கூட்டப்பட்டிருந்தது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் இரண்டு நாள்களுக்குப் பிறகு நடந்தது. அப்போதும் நிருபர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. இந்தமுறை, ரசாபாசத்துடன் நிருபர் கூட்டம் பாதியில் முடிந்தது. கோபமாக ஜெயலலிதா எழுந்து சென்றார் என்பதைவிட, அவர் எரிச்சல் அடையும் விதத்தில் கேள்வி எழுப்பப்பட்டு, அவர் ஆத்திரத்தில் வெளியேற நேர்ந்தது என்பதுதான் உண்மை.

ஜெயலலிதா கோபமாக எழுந்து வெளியேறினார். அதற்குக் காரணமான கேள்வியை எழுப்பிய நிருபர், தான் சாதித்துவிட்ட பெருமிதத்துடன், சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தார். அதற்கு நேரடி சாட்சியாக இருந்தவர்களில் நானும் ஒருவன்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.