நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 197

காரில் இருந்து இறங்க ஜெயலலிதா சிரமப்பட்டார், தொண்டர்கள் சூழ்ந்த காட்சி

News image
Updated On :15 ஜூன் 2024, 6:29 pm

கி. வைத்தியநாதன்

மின் தூக்கியிலிருந்து (லிஃப்ட்) வெளியே வந்தவரின் பார்வை என்மீது பதிந்தது. என்னை நோக்கி வந்தார்.

'இந்த நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இங்கே உங்களுக்கு என்ன வேலை? யாரை வேவு பார்க்க வந்திருக்கிறீர்கள்?' என்றபடி என்னை நெருங்கினார் ம.நடராசன். என்னை அவர் அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதும், நான் அவரைப் பார்த்தது பிடிக்கவில்லை என்பதும் அவரது குரலில் தெரிந்தது.

'நானும் அதே கேள்விகளைத்தான் உங்களிடம் கேட்கலாமென்று இருந்தேன். நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள். நீங்கள் எதற்காகக் கர்நாடக முதல்வரை ரகசியமாக சந்திக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை....'

'கர்நாடக முதல்வரா? அவரை நான் ஏன் சந்திக்க வேண்டும்? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?' என்கிற அவரது கேள்விகளில் பொய் கலந்த கோபம் இருந்தது. கர்நாடக முதல்வர் சற்று முன்னால் கிளம்பிச் சென்றார் என்றும், அவரை சந்திக்கத்தான் நான் வந்தேன் என்றும் சொன்னபோது, ஒன்றுமே தெரியாதவர்போல் புன்னகைத்தார்.

ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவர் கிளம்பிவிட்டார். நான் கிளம்பவில்லை. விசாரித்தபோது, ஒரு வாரமாக நண்பர் ஒருவர் பெயரில் அங்கே அறை போடப்பட்டு, அதில் ம.நடராசன் தங்கி இருந்தது தெரிந்தது. கர்நாடக முதல்வர் கிளம்பிச் சென்றதும், அவரும் அறையைக் காலி செய்து விட்டார் என்பதையும் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.

ம.நடராசன் எதற்காக கர்நாடக முதல்வர் ஜெ.ஹெச்.பாட்டீலை சந்தித்தார் என்பதற்கான விடை, அடுத்த ஒரு வாரத்தில் எனக்குக் கிடைத்தது. அவர்களது ரகசிய சந்திப்பு குறித்தும், நடராசன் மீதும், ஜெயலலிதா மீதும், சசிகலா குடும்பத்தினர் மீதும் போடப்பட்டிருக்கும் சிபிஐ, வருவாய் புலனாய்வுத் துறை வழக்குகளை பிரதமர் தேவே கௌடா மூலம் வலுவிழக்கச் செய்ய நடந்த பேரம் குறித்தும் கன்னட மாலை நாளிதழ் ஒன்றில் பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

காலை ஏழு மணிக்கெல்லாம், தொலைபேசி ஒலித்தது. அதிமுக அலுவலகத்துக்கு ஜெயலலிதா வர இருப்பதாகவும், அங்கே பத்திரிகையாளர்களைச் சந்திக்கப்போவதாகவும் தகவல் கிடைத்தது. கட்சித் தலைவி, கட்சி அலுவலகத்துக்கு வருவதேகூட அதிமுகவைப் பொருத்தவரை ஒரு வரலாற்று நிகழ்வாக இருந்தது என்று வருங்காலம் வியப்படையும். அதுதான் உண்மை.

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த நிகழ்வாக மாறியிருந்தது, ஜெயலலிதா அதிமுகவின் தலைமையகத்துக்கு வர இருக்கிறார் என்கிற செய்தி. ஜலந்தரில் இருந்து 'பஞ்சாப் கேசரி', கௌஹாட்டியிலிருந்து 'அஸ்ஸாம் க்ரானிக்கிள்' என்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெளிவரும் நாளிதழ்களிலிருந்து அதுகுறித்த சிறப்பு செய்தி கேட்டு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

நான் லாயிட்ஸ் சாலையில் (இப்போது அவ்வை சண்முகம் சாலை) இருந்த அதிமுகவின் தலைமைக் கழகத்துக்குச் சென்றபோது, சாலையில் உள்ளே நுழைய முடியாத அளவுக்குக் கூட்டம். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய அளவில் காவல் துறையினர் இருக்கவில்லை என்பதை உணர முடிந்தது. அதற்குப் பின்னால் அரசியல் இருந்ததா என்று எனக்குத் தெரியாது.

பொதுக்கூட்டம், பேரணிக்கு கூடுவதுபோல, தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் நுழைந்து நான் தலைமைக் கழகத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போலவே ஏனைய சில பத்திரிகையாளர்களும் நகர்வது தெரிந்தது. ஒரு வழியாகத் தலைமைக் கழகத்தின் வாயிலை அடைவதற்கு அரை மணி நேரத்துக்கும் மேலாகி விட்டது.

நுழைவாயில் அருகில் சுலோசனா சம்பத், ஆதி ராஜாராம், பாலகங்கா உள்ளிட்ட சிலர் நின்று கொண்டிருந்தனர். கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டம். பத்திரிகையாளர்கள் கெஞ்சிக் கூத்தாடித்தான் உள்ளே நுழைய முடிந்தது. அவர்களை வரவேற்கவோ, அவர்களுக்குத் தனியாக இடம் ஒதுக்கித் தரவோ, பாதுகாப்பு வழங்கவோ யாரும் இல்லை. தொண்டர்களைக் கட்டுப்படுத்தவே திணறிக் கொண்டிருந்தவர்களுக்குப் பத்திரிகையாளர்களைக் கவனிக்க ஏது நேரம்?

Story image

அலுவலகத்திற்குள்ளே அவைத் தலைவர் நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, காளிமுத்து, சேடப்பட்டி முத்தையா, ரகுபதி, ஜி.சுவாமிநாதன், தளவாய் சுந்தரம், மார்க்கபந்து உள்ளிட்டவர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே நெருங்கவே முடியாது என்கிற நிலைமை. நானும் சில நிருபர்களும் ஒரு ஓரமாகச் சென்று நிற்க இடம் பிடித்துக் கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பத்து மணிக்குத் தலைமைக் கழகம் வருவார் என்று சொல்லப்பட்ட ஜெயலலிதா வந்து சேர்ந்தபோது மணி 11.15. விண்ணைப் பிளக்கும் ஆரவாரம் கேட்கத் தொடங்கியபோது, ஜெயலலிதாவின் கார் லாயிட்ஸ் சாலையில் நுழைந்துவிட்டது என்பது தெரிந்தது. அந்த கார் மெல்ல ஊர்ந்து கட்சி அலுவலகத்தை அடைய சுமார் கால் மணி நேரம் பிடித்தது.

எனது வாழ்நாளில் மறக்க முடியாத சில நிகழ்வுகளில், காட்சிகளில் ஒன்றாக, 1997 ஜனவரி மாதம் 6-ஆம் தேதி லாயிட்ஸ் சாலை அண்ணா திமுக தலைமைக் கழகத்துக்கு ஜெயலலிதா வந்ததை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அதை நான் வேடிக்கை பார்த்தேன் என்பதைவிட, பிரமித்துப்போய் நின்று கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியெல்லாம் கூடத் தொண்டர்கள் இருப்பார்களா என்று இப்போது நினைத்தாலும் வியப்பு மேலிடுகிறது.

ஜெயலலிதாவின் கார் தலைமைக் கழக வளாகத்துக்குள் நுழைந்ததுதான் தாமதம், உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் 'புரட்சித் தலைவி வாழ்க' என்று குரலெழுப்பிக் கொண்டு அந்த காரை சூழ்ந்து கொண்டனர். காரிலிருந்து இறங்கவே ஜெயலலிதா சிரமப்பட்டார். சூழ்ந்து நின்று கொண்டிருந்த தொண்டர்களைக் கடந்து அவரால் உள்ளே போக முடியவில்லை.

நான் ஜெயலலிதாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். அவர் கோபப்படுவார், எரிச்சலடைவார் என்று பார்த்தால், அதை ரசிக்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்தன அவரது கண்களில் தெரிந்த மகிழ்ச்சியும், இதழில் படர்ந்த புன்னகையும். நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரிடம் அளித்த சால்வைகள், பூங்கொத்துக்களை மிகவும் லாகவமாக வாங்கி அருகில் இருந்த உதவியாளர்களிடம் கொடுத்த வண்ணம் இருந்தார்.

காரிலிருந்து இறங்கி, தலைமைக் கழகக் கட்டடத்தை நோக்கி அந்த நெரிசலுக்கு இடையே நகர்ந்தார் ஜெயலலிதா. அப்போது கூட்டத்தில் இருந்த யாரோ ஒரு தொண்டர் ஜெயலலிதாவின் காலை மிதித்து விட்டார். சட்டென அவரது முகத்தில் வேதனை பிரதிபலித்தது. உடனடியாக நிர்வாகிகள் அவருக்குப் பாதுகாப்பு அளித்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ஜெயலலிதாவை அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

ஜெயலலிதா முற்றிலும் மாறியிருந்தார். 28 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு, முதல் முறையாகப் பொதுவெளியில் வந்திருக்கும் ஜெயலலிதா பழைய ஜெயலலிதாவாக இல்லை. வழக்கமாக அதுவரை அணிந்து வந்த மேலங்கி இருக்கவில்லை. சாதாரணமான புடவையுடன் காட்சி அளித்தார். காதணி, கைக்கடிகாரம், வளையல் என்று எதுவுமே இருக்கவில்லை. ஒரு வித்தியாசமான ஜெயலலிதாவை நான் பார்த்தேன்.

தலைமை அலுவலகத்திற்குள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான், ஏனைய பத்திரிகையாளர்களுடன் வெளியே நின்று கொண்டிருந்தேன். சில முக்கியமான நாளிதழ் நிருபர்கள் ஏற்கெனவே தலைமைக் கழகத்துக்குள் உள்ள அறையில் அமர்ந்திருப்பதாகச் சொன்னார்கள். முக்கியமான தலைவர்களுடன் கலந்தாலோசனைகளை முடித்துக்கொண்டு ஜெயலலிதா பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

ஜெயலலிதா உள்ளே போன சில நிமிடங்கள் கழித்து, நானும் மற்றவர்களும் எங்களது அடையாள அட்டைகளைக் காட்டி உள்ளே நுழைய முயன்றோம். எங்களை அனுமதிப்பதாக இல்லை. நல்லவேளையாக அங்கே வந்த உக்கம்சந்தும், ஜி.ஆர்.சுவாமிநாதனும் தலையிட்டதால், ஏனைய நிருபர்களுடன் எங்களால் இணைய முடிந்தது.

சுமார் அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜெயலலிதா பத்திரிகை நிருபர்களைச் சந்தித்தார். எப்போதாவது ஒருமுறை, அத்திபூத்தாற்போல பத்திரிகை நிருபர்களைச் சந்தித்தாலும், நிருபர்களின் கேள்விகளுக்கு சலிக்காமலும், சளைக்காமலும் பதிலளிப்பதில் திமுக தலைவர் கருணாநிதிக்கு நிகரானவர் ஜெயலலிதா. பிறகு ஏன் அவர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார் என்பது இன்றுவரையில் எனக்குப் புதிராகத்தான் இருக்கிறது.

நடைபெற இருந்த புதுக்கோட்டை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் அதிமுக வேட்பாளரைப் பொது வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் ஜெயலலிதாவின் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கியது. நீதிமன்ற அனுமதியுடன் பிரசாரத்துக்குச் செல்ல இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார் அவர்.

அதைத் தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார் அவர். நிதானமாக, புன்னகைத்தபடி, எரிச்சலளிக்கும் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, தனது கோபத்தை வெளிக்காட்டாமல் அன்றைய நிருபர்கள் கூட்டத்தை அவர் கையாண்ட விதம், என்னை நிஜமாகவே ஆச்சரியப்படுத்தியது. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. கோபமாகவும் ஆத்திரமாகவும் பேசுவார் என்று நினைத்த எனக்கு அவரது நிதானமும், தெளிவும் வியப்பாக இருந்தது.

புகைப்படக் கலைஞர்கள் படமெடுப்பதற்காக நிதானித்தார். புன்னகைத்தபடி அவர்களுக்கு 'போஸ்' கொடுத்தார். அவர்கள் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர்.

'புகைப்படம் எடுத்தது போதும் என்று அவர்களிடம் நிருபர்கள்தான் சொல்லிக் கட்டுப்படுத்த வேண்டும். பேட்டி அளிக்கும்போது, இடையிடையே புகைப்படம் எடுத்தால் எனது கவனம் திசைதிரும்பும்' என்று அவர் சொன்னபோது, கட்டளைக்குக் கட்டுப்பட்டதுபோல புகைப்படக் கலைஞர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.

எடுத்த எடுப்பிலேயே ஜெயலலிதாவை எரிச்சலடைய வைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் சில பத்திரிகை நிருபர்கள் வந்திருந்தனர். அது அவருக்கும் தெரிந்திருந்தது என்பதுதான் வேடிக்கை.

'முன்பு சசிகலா உள்ளிட்டவர்களின் கட்டுப்பாட்டில் கட்சி இருந்ததே....' என்று ஒரு நிருபர் தொடங்கினார். அதற்குமேல் அந்த நிருபரைப் பேசவிடாமல் இடைமறித்தார் ஜெயலலிதா.

'அது பழைய விஷயம். திரும்பத் திரும்ப அதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். நான் சிறைக்குச் செல்வதற்கு முன்பே அதுகுறித்து விளக்கம் தந்து விட்டேன். இப்போது அதெல்லாம் எதற்கு? இன்றைய நிலைமைகள் குறித்து கேளுங்கள். பதில் சொல்கிறேன்...' என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

பிறகு கேள்வியை எதிர்பார்க்காமல் அவரே பேசத் தொடங்கினார்-

'சிறையில் நான் எப்படி நடத்தப்பட்டேன் என்பது எல்லோருக்கும் தெரியும். பார்வையளர்களைச் சந்திக்க நான் அனுமதிக்கப்படவில்லை. எனக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டன. சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதல்நாளில் நான் சாதாரண கிரிமினல் குற்றவாளியைப்போல நடத்தப்பட்டேன்.'

'உங்களுக்கு சிறப்பு வகுப்பு தரப்பட்டதாக சட்ட அமைச்சர் சொல்கிறாரே...'

''ஏ' வகுப்புச் சிறை என்றால் அதில் மின் விசிறி, கட்டில், மேஜை, நாற்காலி இருக்கும் அவ்வளவுதான். மற்றபடி அவர்கள் சொன்னதெல்லாம் பொய். பத்திரிகைகளுக்குப் பல பொய்யான தகவல்கள் தரப்பட்டன. நான் சிறையில் அவமானப் படுத்தப்பட்டேன். உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன்.'

நிருபர் ஒருவர் இடைமறித்து ஒரு கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவின் முகம் மாறியது. அதை அவர் எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. அந்த நிருபரை நோக்கி சட்டென்று திரும்பினார் ஜெயலலிதா.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.